For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓய்வுக்குப் பின் ஓவியரான பந்தயக் குதிரை மெட்ரோ

By BBC News தமிழ்
|

மெட்ரோ ஒரு காலத்தில் ஒரு வெற்றிகரமான பந்தயக் குதிரை. ஆனால் உடல் நலக்குறைவு மெட்ரோவின் வாழ்க்கையை முடித்துவிடும் என்று தோன்றியது. அப்போது, அதன் உரிமையாளரும், ஓவியக் கலைஞருமான , ரானுக்கு ஒரு யோசனை தோன்றியது.

ஓவியம் வரையும் குதிரை மெட்ரோ மற்றும் அதன் உரிமையாளர் ரான்
BBC
ஓவியம் வரையும் குதிரை மெட்ரோ மற்றும் அதன் உரிமையாளர் ரான்

குதிரையை தண்ணீர் குடிக்க குளத்துக்குக் கூட்டிச் செல்லலாம். ஆனால் குதிரைதான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஒரு பழமொழி உண்டு.

எனவே, ரான் க்ரேய்ஸ்கி முதலில் அவரது குதிரைக்கு ஒரு ஓவியப் பலகையை அறிமுகம் செய்தபோது, அது ஓவியம் வரையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

2009ல் ரான் மற்றும் அவரது மனைவி மெட்ரோ குதிரையை தத்தெடுத்தபோது, அந்த குதிரை உடல் நலப் பிரச்சினைகளுடன் சிரமப்பட்டு வந்தது. மெட்ரோ மீட்டியோர் என்று அறியப்பட்ட அக்குதிரை, எட்டு பந்தயங்களில் வென்று, பெல்மோன்ட் ஸ்டேக்ஸ் என்ற பிரபலமான போட்டியில், மூன்று லட்சம் அமெரிக்க டாலர்களை (234,000 பவுண்ட்கள்) பரிசு பணமாக வென்றது.

குதிரையின் முட்டிப்பகுதியில் நிரந்தர சேதம் ஏற்பட்டதற்கு அதற்கு ஓய்வு தரவேண்டியதாயிற்று.

வெண்டி சவாரி செய்வதற்கு ஏற்ற ஒரு குதிரையை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். ஆனால், மெட்ரோவுக்கு பந்தயங்களில் ஏற்பட்ட காயங்கள் நாங்கள் நினைத்ததை விட மோசமாக இருந்தன, என்றார் ரான்.

மெட்ரோவுக்கு பல மாதங்கள் மறுவாழ்வு உதவி மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டன.

ஒரு சில காலத்திற்கு சிறப்பு காலணிகள் உதவின. ஆனால் 2012ல் எடுக்கப்பட்ட எக்ஸ்-ரேக்கள் முட்டி இணைப்புகள் கூடுவதை காட்டின.

இன்னும் இரண்டு ஆண்டில் எலும்புகள் பின்னிப் பிணைந்துவிடும் என்றும் அந்த நேரத்தில் ரான் மற்றும் வெண்டி தங்களது குதிரையைக் கொல்லவேண்டியிருக்கும் என்றும் ஒரு கால்நடை மருத்துவர் கூறினார்.

ஓவியப் பயிற்சி

மெட்ரோவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அதைப் பற்றி மறந்துவிட நான் விரும்பவில்லை. அதனுடன் எப்படி நேரத்தை செலவிடலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன், என்றார் ரான்.

சில சமயங்களில் மெட்ரோ மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க தனது தலையை மேலும் கீழும் அசைப்பதை ரான் கவனித்திருக்கிறார். அது பொருட்களை வாயில்கூட கவ்வும்.

எனவே, ஒரு தொழில் முறை ஓவியரான ரான், மெட்ரோவை ஓவியம் வரையும் தூரிகையை வாயில் வைத்துப் பிடிக்கவைக்க முடியுமா என்று யோசித்தார்.

குதிரை உணவை பரிசாகக் கொடுத்து, மெட்ரோவை, அதன் மூக்கால் ஓவியத் திரையைத் தொடுமாறு கற்பித்தேன். பின்னர் அதற்கு தூரிகையை பிடிக்கவும் கற்றுக் கொடுத்தேன் என்கிறார் ரான்.

அது தூரிகையை தவறவிட்டிருந்தால் இந்த பரிசோதனை முயற்சி அத்தோடு நின்றிருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, மெட்ரோ மேலும் கீழும் தூரிகையை நகர்த்தி , அவ்வாறு செய்வதை அனுபவிப்பது போலவும் இருந்தது.

குதிரை ஓவியக் கண்காட்சி

விரைவில் மெட்ரோவின் நல்ல முறையில் படங்களை வரைய தொடங்கியது.

அவை உள்ளூரில் உள்ள ஒரு கண்காட்சி அரங்கத்தில் விற்பதற்கு ஏற்றதாக உள்ளன என்று எண்ணினார் ரான்.

கண்காட்சிக்கு வைக்கப்பட்ட முதல் வாரத்தில் நான்கு படங்கள் விற்பனை ஆகின.

கட்டுப்பாடற்ற அதன் பாணி இதே போல வண்ணக் கலவைகளை தெளித்து வரையும் பாணி கொண்ட பிரசித்தி பெற்ற ஓவியர் ஜாக்சன் பொலாக்கின் பாணியோடு ஒப்பிடப்பட்டது.

மெட்ரோவின் தூரிகை கோடுகள் மனிதர்களால் போட முடியாதவை. ஏனென்றால் மெட்ரோ தான் ஓவியம் வரைவதற்கு முன்னர் என்ன வரையப்போகிறோம் என்று யோசித்து செயல்படுவதில்லை. அதன் கோடுகள் தடிமனானவை, திட்டமிடப்படாதவை, சில சமயங்களில் துண்டு துண்டானவை. எனவே இந்த பாணியில் மற்ற வண்ணங்கள் வெளிப்படும். இது எல்லாம் திரைச்சீலையில் மிளிரும் என்கிறார் ரான்.

மெட்ரோவின் திறன் கெட்டிஸ்பர்க், பென்சில்வேனியாவில் உள்ள தொலைக்காட்சிகளை ஈர்த்தது மற்றும் இந்த செய்தி தேசியஅளவில் பேசப்பட்டது. 2014ல் 150 நபர்கள் மெட்ரோ வரையும் படங்களுக்காக காத்திருந்தனர்.

மருத்துவ செலவுக்கு பயன்பட்ட ஓவிய சம்பாத்தியம்

ஓவிய விற்பனையில் கிடைத்த பணம் மெட்ரோவுக்கு புதிய ஒரு பரீட்சார்த்தமான மருத்துவ சிகிச்சைக்கு உதவியது.

மெட்ரோவின் மருத்துவர் , டில்ட்ரென் என்ற ஒரு மருந்தை மெட்ரோவின் முட்டியில் நேரடியாகச் செலுத்தும் முறையை உருவாக்கினார்.

ஒரு சில மாதங்களில் , குதிரையின் முட்டியில் எலும்பு வளர்ச்சி குறைந்து விட்டதை எக்ஸ் ரே படங்கள் காட்டின. அது அதன் ஆயுட்காலத்தில் பல ஆண்டுகளைக் கூட்டியது என்றார் ரான்.

இப்போது மெட்ரோ மற்றும் போர்க் சோப் என்ற மற்றொரு குதிரை ஆகிய இரண்டையும், ரானும் வெண்டியும் தங்கள் லாயத்தில் வைத்திருக்கின்றனர். வீட்டிலிருந்து நான்கு மைல் தூரத்தில் இந்தக் குதிரை லாயம் இருக்கிறது.

அவர்கள் இருவரும் இந்தக் குதிரைகளை வாரத்தில் சுமார் ஐந்து நாட்கள் வந்து பார்க்கின்றனர். . இதில் இரண்டு நாட்களில் ரானும் மெட்ரோவும் ஓவியம் வரைய முற்படுகின்றனர்.

லாயத்தில் ஒரு பகுதி மெட்ரோவின் ஸ்டுடியோ அங்குதான் அது ஓவியம் வரைவதற்கான எல்லா ஏற்பாடுகளும் இருக்கும், என்கிறார் ரான்.

ரான்தான் இந்த ஓவிய வேலையில் இயக்குநர் மற்றும் உதவியாளராக செயல்படுகிறார்.

அவர் வண்ணங்களை தேர்ந்தெடுத்து, தூரிகையில் தோய்த்து குதிரையின் வாயில் கொடுப்பார். குதிரை பின்னர் அதை ஓவியப் பலகையில் தீட்டும் !

ஒரு 20 நிமிட அமர்வில், ரானும் மெட்ரோவும் மூன்று அல்லது நான்கு படங்கள் வரைய முயல்வார்கள்.

ஒரு திரையில் இரண்டு நிமிடங்கள் வரைந்தால் , பின்னர் அதை விட்டுவிட்டு, வேறு ஒரு பலகைக்கு மாறுவோம். மெட்ரோ எல்லா வண்ணங்களையும் கலக்கிவிடும் பழக்கம் உள்ளது. எனவே ஒரு நீல நிறத்தை வரைந்தால், அதை சற்றுக் காயவிட்டுவிட்டு, இடையே, ஆரஞ்சு நிறம் என்று மாற்றி வரைவோம். இது வண்ண அடுக்குகளை உருவாக்கும்.

மெட்ரோ சற்று தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் தன்மையுள்ள குதிரை என்கிறார் ரான்.

ஓவியப் பலகையை அதன் முன் வைத்தால், மெட்ரோ புல் மேய்வதை விட்டுவிட்டு, பலகையின் நேரெதிராக நிற்கும் என்கிறார் ரான்.

மெட்ரோவுக்கு ஓவியம் வரைவது பிடித்தமானது. குதிரைகளுக்கு அவைகளின் மூக்கின் முன்னால் பார்க்க முடியாத இடம் ஒன்று இருக்கும் என்பதால், எந்த அளவுக்கு மெட்ரோவால் பார்க்க முடியும் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் திரையின் மீது தூரிகையை வைத்து தீட்டும் அனுபவம் அதற்குப் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன், என்றார் ரான்.

"மெட்ரோவை போல படங்கள் வரைவது ரானுக்கு முதல் தொழிலாக இல்லை. அலாஸ்காவில் சால்மன் வகை மீன்பிடி குடும்பத்தை சேர்ந்த ரான் அமெரிக்காவின் விமானப்படையில் வேலைசெய்தார். தனது 40 வயதில் தொழில்முறை ஓவியர் ஆனார்.

வருமானத்தில் குதிரை அற நிறுவனங்களுக்கும் பங்கு

மெட்ரோ வரைந்த படங்கள்
BBC
மெட்ரோ வரைந்த படங்கள்

நான் செல்லப்பிராணிகளின் படங்களை வரைவேன். அது பொதுவாக நேரடியாக பார்ப்பது போன்ற தன்மை கொண்டவை, கட்டுப்பாட்டுடன் வரையப்பட்டவை. ஆனால் மெட்ரோவுடன் வரைவது என்பது நேரெதிரானது. அது என்ன செய்யும் என்பதைக் கணிக்க முடியாது. இது கட்டுப்பாட்டுடனான ஒரு குழப்ப நிலை, என்கிறார் ரான்.

மெட்ரோவின் படங்கள் தொடர்ந்து நன்றாக விற்பனை ஆகின்றன.

''பல்வேறு அளவுகளில், விலையை பொறுத்தவரை 50டாலர் முதல் 500 டாலர்கள் வரை படங்கள் விற்பனைக்கு உள்ளன. ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு படங்கள் விற்கிறோம்,'' என்கிறார் ரான்.

ரான் மற்றும் வெண்டி மெட்ரோவின் படங்கள் மூலம் வரும் பணத்தை நியூ வொகேஷன்ஸ் என்ற ஓய்வு பெற்ற குதிரைகளுக்கான தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கிறார்கள். இதுவரை, சுமார் 80,000 டாலர்கள் (62,000 பவுண்ட்கள்) அளித்துள்ளனர். இந்த பணம் 50 முதல் 60 குதிரைகளுக்கு உதவியுள்ளது.

இப்போது 14 வயதாகும் மெட்ரோ, ஓவியம் வரைவதை குறைப்பது போல் தோன்றவில்லை.

ஓவியம் வரைவதில் அதற்கு உண்மையில் ஆர்வம் இருப்பது போல் தெரிகிறது, என்று கூறும் ரான், ஓவியம் வரைவது பற்றி மெட்ரோ சலிப்படையும் என்று தோன்றவில்லை என்கிறார்.

இதையும் படிக்கலாம்:

திரைத்துறையும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும்

தலித்துகளை விலக்கி வைத்த திராவிட அரசியல்

'உலகிலேயே வயதான' 146 வயது இந்தோனீஷியர் மரணம்

BBC Tamil
English summary
He was once a well-known racehorse, but it looked as though ill health would soon mean the end for Metro. Then his artist owner, Ron, had an unusual idea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X