For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்த இசைக் கலைஞர்

By BBC News தமிழ்
|

பறக்கும் விமானத்தில் இருந்து நிர்வாணமாக கீழே குதிப்பது பலருக்கும் சங்கடமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் கிளென் டோனலிக்கு அது ஒரு பெருமையாக உள்ளது.

தனது 30-வது பிறந்தநாள் அன்று தனக்குத் தானே சவாலான ஒரு இலக்கை அவர் நிர்ணயித்துக்கொண்டார். பாதுகாப்புக்காக அணியப்படும் தோல்வாரைத் தவிர வேறு எதையும் அணியாமல், பறக்கும் விமானத்தில் இருந்து வயலின் இசைத்துக்கொண்டே கீழே குதிக்க வேண்டும் என்பதே அது.

தன் கைகளில் 50 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள ஒரு வயலின் மற்றும் அதை வாசிப்பதற்கான வில் தவிர வேறு எதுவும் இல்லாமல், கடந்த ஞாயிறன்று நியூ சௌத் வேல்ஸ்-இல் தன் இலக்கை நிறைவேற்றியுள்ளார் டோனலி.

தான் கீழே குதிக்கும்போது, தன் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக 'ஹேப்பி பர்த்டே' பாடலை இசைத்துள்ளார் அவர்.

தனது பாராசூட் விரிந்து, அவர் வானில் மிதக்கத் தொடங்கியதும் ஆங்கில இசையமைப்பாளர் ரால்ஃப் வான் வில்லியம்ஸ் இசையமைத்த 'தி லார்க் அசெண்டிங்' என்னும் இசைப் படைப்பின் தொடக்கப் பகுதிகளை இசைத்துள்ளார்.

"அது ஒரு பறவை காற்றில் உயர உயரப் பறப்பதைப் பற்றிய இசை. பாராசூட் திறந்த பின்பு, என்னால் சுதந்திரமாக வயலினை இசைக்க முடிந்தது. அது ஒரு முழு சுதந்திர உணர்வு," என்கிறார் அவர்.

தங்கள் உடல் அமைப்பைப் பற்றி ஆண்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே காஃப்ஸ் ஹார்பர் நகரில் இப்படி ஒரு சாகசத்தை அரங்கேற்றியுள்ளார் வயலின் கலைஞர் டோனலி.

அவரின் 18-ஆம் வயதில், சக இசைக்க கலைஞர் ஒருவர் அவரது வயிறு 'தொப்பையாக' இருப்பதாகக் கேலி செய்ததால், அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

"அச்சிக்கலை நான் கொஞ்சம் கொஞ்சமாக, நாளின் 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் உள்வாங்கிக்கொண்டேன். அது என் உடலின் அகத்திலும் புறத்திலும் ஒரு சிறையை உருவாக்கிவிட்டது," என்கிறார் டோனலி.

தங்களுக்கு நல்ல உடல் அமைப்பு இல்லை என்ற எண்ணத்தை அதீதமாகத் தூண்டும் 'பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்டர்' (body dysmorphic disorder) என்னும் உளவியல் சிக்கலால் பின்னர் அவர் பாதிக்கப்பட்டார். அதனால், 2013-ஆம் ஆண்டு பிரிட்டனை விட்டே வெளியேறினார். அதுவரை, அங்கு அவர் லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்டரா என்னும் இசைக்குழுவின் ஒரு அங்கமாக இருந்தார்.

அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் மன நல மருத்துவரின் உதவியுடன் மீண்டு வரும் டோனலி, இப்பிரச்சனை குறித்து பிறர் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை, உடல் அமைப்பைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'நியூட் மூவர்மண்ட்' எனும் தனது தொண்டு நிறுவனத்துக்காக செலவிடுவதுடன் வேறு இரண்டு தொண்டு நிறுவனங்களுடனும் பகிர்ந்து கொள்கிறார்.

வானத்தில் இருந்து குதிப்பது எவ்வளவு முக்கியமோ, குதிக்கும்போது நிர்வாணமாக இருப்பதும் அதே அளவு முக்கியமாக இருக்கிறது இந்த இசைக் கலைஞருக்கு.

"வானத்தில் இருந்து குதிக்கும்போது எனக்கு உண்டாகும் பயமும் பதற்றமும், பிறர் முன்பு ஆடைகளைக் களையும்போதும் உண்டாகிறது. அவற்றில் இருந்து மீண்டு வர இன்னும் நான் முயன்று வருகிறேன், " என்கிறார் அவர்.

"இந்த சாகசத்தை செய்து முடித்ததையும், பய உணர்வில் இருந்து வெளியே வருவதையும் எண்ணி நான் பெருமைப்படுகிறேன்," என்று கூறும் டோனலி, "என் குழந்தைப் பருவம் முதல் தற்போது வரை தொடர்ச்சியாக என்னை நானே மதிப்பீடு செய்து வந்த ஒரு பயணம் இது. தற்போது என் சுயத்தை நான் ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், என்னை நானே கொண்டாடவும் தொடங்கிவிட்டேன்," என்று முடிக்கிறார்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Many people would find jumping nude from a plane confronting, but it was a particular triumph for Glen Donnelly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X