
கொரோனா இன்னும் முடியல.. அடுத்த வேரியண்ட் ஓமிக்ரானை விட ஆபத்தானதாக இருக்கும்.. ஹூ நிபுணர் வார்னிங்
ஜெனீவா: கொரோனா வைரஸின் அடுத்த வேரியண்ட் ஓமிக்ரானை விட அதிக ஆபத்தானதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி கொண்டிருக்கும் வேளையில் புதிது, புதிதாக வேரியண்ட்கள் வந்து உலக நாடுகளை அலற வைத்து வருகிறது. டெல்டா போனால், ஓமிக்ரான், ஓமிக்ரான் போனால் அடுத்த வைரஸ் என்று மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர்.
முன்னோடிகளை முந்தும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் முதல்வர் - வைரமுத்து வாழ்த்து

மக்களின் அலட்சியம்
ஓமிக்ரான் வைரஸ் வேரியண்ட் அலை தணிந்து உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், அடுத்தகொரோனா வேரியண்ட் முன்பு இருந்ததை விட விட அதிகமாக பரவக்கூடும் என்று ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் வைரஸ் முடிந்து விட்டது என்று கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் ஹாயாக இருக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் நிபுணர் எச்சரிக்கை
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் (WHO) தொற்றுநோயியல் நிபுணரும், கொரோனா தொழில்நுட்ப முன்னணியாளருமான டாக்டர் மரியா வான் கெர்கோவ் கொரோனா வைரஸிடம் மக்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆபத்தானதாக இருக்கும்
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், ' தொற்றுநோய் நம்மிடம் இருந்து விலகி விட்டது என்று மக்கள் கவனக்குறைவாக இருக்க கூடாது. தொற்றுநோய் நம்மிடம் இருந்து இன்னும் விலகவில்லை. அடுத்த கொரோனா வைரஸ் வேரியண்ட் ஓமிக்ரானை விட அதிக தொற்றுநோய் கொண்டதாக இருக்கும். இதற்கு முன்னர் இருந்த வேரியண்ட்களை விட இது மிகவும் அதிகமாக பரவக்கூடியதாக இருக்கலாம். ஒருவேளை இது மிகவும் ஆபத்தானதாக கூட மாறலாம். எதிர்கால வேரியண்ட்கள் நமது நோயெதிர்ப்பு சக்தியை எளிதில் தகர்த்து விடவும் வாய்ப்பு இருக்கிறது.

தடுப்பூசிகள் பலன் தருமா?
மேலும் எதிர்கால வேரியண்ட்களுக்கு எதிராக தடுப்பூசிகள் செயலதிறன் குறைவாக இருக்கலாம். ஆனாலும் வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் மிக முக்கியமானது. தடுப்பூசிகள் உயிரிழப்புகளை தடுக்க உதவும். ஏனெனில் ஓமிக்ரான் அலையின் போது நோயின் தீவிர தன்மையையும், இறப்புகளையும் தடுப்பூசிகள் கட்டுப்படுத்தின என்று தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார்.