மாலியில் 3 இந்தியர்கள் கடத்தல்.. தொழிற்சாலையில் நுழைந்து அல்குவைதா ஆதரவு பயங்கரவாதிகள் அட்டூழியம்
மாலி: மாலியில் சிமெண்ட் தொழிற்சாலையில் பணி செய்த 3 இந்தியர்களை அல்குவைதா ஆதரவு பயங்கரவாதிகள் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் 3 பேரையும் பத்திரமாக மீட்க மத்திய வெளியுறத்துறை நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்கா நாடாக மாலி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் 7 வது பெரிய நாடாக இது உள்ளது. இந்த நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மாலியின் மேற்கு பிராந்தியமான கெய்ஸில் டைமண்ட் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. இங்கும் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் திடீரென்று ஆயுதங்களுடன் சிமெண்ட் தொழிற்சாலைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 3 இந்தியர்களை கடத்தி சென்றுள்ளனர்.
ஆயுதங்களுடன் திடீரென்று உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தினர். அதன்பிறகு அங்கிருந்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். அப்படித்தனா் இந்தியர்கள் 3 பேரும் பயங்கரவாதிகளிடம் சிக்கி உள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இந்தியர்களை கடத்திய பயங்கவராதிகள் அல்குவைதா பயங்கரவாதிகளின் ஆதரவு பயங்கரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது. அதாவது ஜமாத் நுஸ்ரத் அல் இஸ்லாம் வால் முஸ்லிம் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தான் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயங்கரவாதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிடம் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருவதோடு, பல தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.
இதுபற்றி அறிந்த நம் வெளியுறவுத்துறை 3 இந்தியர்களையும் பத்திரமாக மீட்கும் பணியை தொடங்கி உள்ளது. வெளியுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‛‛இந்த சம்பவம் ஜூலை 1ம் தேதி நடந்தது. ஆயுதங்கள் ஏந்திய கும்பல் தொழிற்சாலை வளாகத்தில் நுழைந்தது. இந்தியர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றது.
இந்த செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு மாலி அரசுடன் தொடர்பு கொண்டு இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுத்துள்ளது. மாலி தலைநகர் பமாகோவில் உள்ள இந்திய தூதரகம் மாலி நாட்டின் அதிகாரிகள் மற்றும் டைமண்ட் தொழிற்சாலையுடன் தொடர்பில் உள்ளன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications