For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

70 நாட்களில் அடுத்தடுத்து தொடர் தோல்விகள்... ஆட்டம் காண்கிறதா ட்ரம்பின் ஆட்சி?

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்). பதவியேற்று 70 நாட்களை கடந்து விட்ட அதிபர் ட்ரம்பின் ஆட்சியில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த திட்டமும் அமல்படுத்தப்பட வில்லை.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் ஒபாமா அறிமுகப்படுத்திய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாபஸ் பெற்றே தீருவே என்று சூளுரைத்து ஆட்சியை பிடித்தார் ட்ரம்ப். அவரது கட்சிக்கு பாராளுமன்றத்தின் இரு அவையிலும் மெஜாரிட்டி இருந்தும், அவர்களுடைய புதிய மருத்துவக் காப்பீடுத் திட்டம், சொந்தக் கட்சியினராலேயே முறியடிக்கப்பட்டது.

கடும் எதிர்ப்பு காரணமாக, வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மசோதாவை, அவைத் தலைவர் பால் ரயன் வாபஸ் பெற்றுக் கொண்டார். ஒபாமா கேர் திட்டம் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.

ஒபாமாவின் அதிமுக்கிய சாதனை

ஒபாமாவின் அதிமுக்கிய சாதனை

அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு மற்றும் மருத்துவமனைக் கட்டணங்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து கொண்டே இருந்தது என்ற குற்றச்சாட்டு பல அதிபர்களின் ஆட்சியிலும் இருந்து வந்தது.

இந்தியாவில் மெடிக்கல் டூரிஸம் வளர்ச்சி அடைந்ததற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அடித்தட்டு மக்களுக்கு மருத்துவக் காப்பீடு என்பது எட்டாக்கனியாகவும் இருந்து வந்தது.

முந்தைய எந்த அதிபரும் செய்யத் துணியாததை, அப்போது அவையில் பெரும்பான்மை பலம் பெற்ற ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து செய்து முடித்தார் ஒபாமா.

அவருடைய முக்கிய சாதனையாக கருதப்படும் ஒபாமாகேர் திட்டம் மூலம் மில்லியன் கணக்கில் மக்கள் முதன் முறையாக மருத்துவக் காப்பீட்டில் இணைந்தனர்.

7 ஆண்டுகளுக்கு முன்னால் அதிபர் ஒபாமாவால் அறிமுகப்படுத்தப் பட்ட அந்த காப்பீடுத் திட்டத்தை எதிர்த்து, குடியரசுக் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

சூளுரைத்த ட்ரம்ப்

சூளுரைத்த ட்ரம்ப்

ஒபாமாகேர் என்று பரவலாக அழைக்கப்படும் அந்தத் திட்டத்தை திரும்பப் பெற்றே தீருவேன் என்று தேர்தலில் சூளுரைத்து வெற்றி பெற்றார் ட்ரம்ப். ஒபாமாகேர் திட்டத்தில் குறைகள் இருப்பதை அதிபர் ஒபாமாவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆட்சிக்கு வந்ததும் குறைகளைக் களைந்து மேலும் வலுப்படுத்துவேன் என்று ஹிலரி க்ளிண்டனும் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் ட்ரம்ப் வெற்றி பெற்று, அவருடைய குடியரசுக் கட்சியினரும் இரு அவையிலும் பெரும்பான்மை பலம் பெற்று விட்டனர். புதிய சட்ட மசோதாவை வடிவமைத்து ஆய்வுக்கு அனுப்பினர். ஆய்வறிக்கை 24 மில்லியன் அமெரிக்கர்கள் காப்பீடு திட்டத்தை இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டது.

வயதானவர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் பெருமளவில் பாதிப்படைவார்கள் என்ற விவரம் வெளியானது.

அஞ்சிய குடியரசுக் கட்சியினர்

அஞ்சிய குடியரசுக் கட்சியினர்

குடியரசுக் கட்சியின் மிதவாத உறுப்பினர்கள், தங்கள் வாக்கு வங்கியில் ஓட்டை விழுந்துவிடும் என்று அஞ்சினர். தீவிர வலது சாரியினர், புதிய திட்டம் ஒபாமகேர் திட்டதை முழுமையாக திரும்பப் பெறவில்லை. இது ஒபாமாகேர் 2.0 என்று விமர்சித்தனர்.

430 பேர் கொண்ட உறுப்பினர்கள் அவையில், புதிய மசோதா வெற்றி பெறுவதற்கு 215 வாக்குகள் தேவை. குடியரசுக் கட்சியினர் 237 இருந்த போதிலும், அவர்களுக்குள் மசோதாவுக்கு பலமான எதிர்ப்பு கிளம்பியது.

எதிரணியான ஜனநாயகக் கட்சி கட்டுக்கோப்புடன் இருந்து, ஒருத்தர் கூட புதிய மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை.

தங்கள் தொகுதி வாக்காளர்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், அதிபர் ட்ரம்ப், அவைத் தலைவர் பால் ரயனின் சமரசத்திற்கு உடன்படவில்லை. மசோதா வாக்கெடுப்புக்குச் சென்றால் நிச்சயம் தோல்வி என்று அறிந்த பால் ரயன், அதிபர் ட்ரம்பிடம் வாபஸ் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார். அவருடைய பரிந்துரையை ஏற்ற ட்ரம்ப், புதிய மசோதாவை அவை வாக்கெடுப்பிலிருந்து வாபஸ் பெற ஒப்புக் கொண்டார்.

ஒபாமாகேர் தொடரும் .. பால் ரயன்

ஒபாமாகேர் தொடரும் .. பால் ரயன்

புதிய மசோதாவை வாபஸ் பெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த பால் ரயன், ஒபாமாகேர் அமெரிக்கர்களின் மருத்துவக் காப்பீடு திட்டமாக தொடர்கிறது. அமெரிக்க மக்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தை நாங்கள் அழிக்க விரும்ப வில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒபாமகேர் தொடர்வதை ஜன நாயகக் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஒபாமாகேர் திட்டத்தின் குறைகளைக் களைய எங்களுடன் இணைந்து செயல்பட வாருங்கள் என்று குடியரசுக் கட்சியினருக்கு அழைப்பும் விடுத்துள்ளனர்

இன்னொரு புறம் ஒபாமகேர் தானாகவே அழிந்து விடும் என்று ட்ரம்ப் சாபமிட்டுள்ளார். சொந்த கட்சியினரை வழிக்கு கொண்டுவர முடியாத விரக்த்தியில், புதிய மசோதாவின் வீழ்ச்சிக்கு எதிர்க்கட்சியினர் தான் காரணம் என்று குற்றம் ட்ரம்ப் சாட்டியுள்ளார். இது ஏதோ இந்திய அரசியல்வாதிகளிடம் கற்று வந்து சுமத்திய குற்றச்சாட்டு போலிருக்குதல்லவா? இது வரையிலும் அதிபர் அதிகாரத்துடன் உத்தரவுகள் பிறப்பித்து வந்த ட்ரம்புக்கு, முதல் சட்ட மசோதாவே பெரும் தோல்வியைத் தந்துள்ளது.

விசா தடைச் சட்டம் 1 மற்றும் 2 க்கும் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. ஒபாமாகேர் திட்டத்தை எதிர்த்த மசோதா சொந்தக் கட்சியினரால் தோற்கடிக்கப் பட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தேர்தல் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமான தொடர்புகள் குறித்து பல்வேறு தகவல் வந்த வண்ணம் இருக்கிறது. ட்ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் ஃப்ளின், ரஷ்ய விவகாரம் பற்றி பாராளுமன்ற குழுவிடமும் புலனாய்வுத் துறையிடமும் தகவல்களை பரிமாறிக்கொள்ள தயார் . ஆனால் தன் மீது சட்டப்படி நடவடிக்கை கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்,

ஃப்ளினின் இந்த அறிவிப்பு ரஷ்ய விவகாரத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என தெரிகிறது. சிறுபான்மையினர் மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு குடியேறிவர்களையும் அலட்சியம் செய்து, வந்த ட்ரம்பின் அரசின் போக்கு இனியாவது மாறுமா? இனவெறி முழக்கங்கள் கட்டுக்குள் அடங்குமா?

- இர தினகர்

English summary
President Trump’s foremost important bill, American Health Care Act was called off from the floor, just few minutes ahead of voting. The new bill was introduced by Republican leaders to repeal Affordable Care Act, often called Obamacare. It is told, at least 34 Republican House Representatives rebelled against the new bill, citing few important provisions risking 24 million people loosing health care insurance. After calling back the bill, House Speaker Paul Ryan told, Obamacare is the law of land for health care for foreseeable future. Jubilant Democrats called Republicans to come forward to work with them to improvise the Obamacare, with required changes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X