For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உழைப்பால் உயர்ந்த தமிழருக்கு பாராட்டு

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் தமிழ்நாடு வர்த்தக சங்கத்தின் வர்த்தக கூட்டத்தில் அதன் தலைவர் தமிழகத்தை சேர்ந்த திரு. ரவிபாலன் அவர்களின் பெரும் முயற்சியால் தமிழகத்தை சேர்ந்த தோசா பிளாசா அதிபரும், மகாராஷ்டிரா தமிழ் சங்கத்தின் இணை செயலாளருமான திரு. பிரேம் கணபதி அவர்களின் சேவையை பாராட்டியும், அவரது தன்னம்பிக்கையை மரியாதை செய்யும் விதத்தில் கவுரவிக்கப்பட்டது.

மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞனுக்கு தான் ஏமாற்றப்படுகிறோம் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. தூத்துக்குடி பக்கமுள்ள நாகலாபுரம் என்ற கிராமம் தான் அந்த இளைஞனின் சொந்த ஊர். படிக்க வசதியில்லாமல் பத்தாம் வகுப்புடன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டு தங்கள் ஊர்க்கார இளைஞர்கள் பலரைப் போலவே சென்னையில் உள்ள தேநீர்க்கடைகளில் வேலை பார்க்க வந்த அந்த இளைஞனுக்கு அறிமுகமான ஒரு மனிதர் மும்பையில் வேலை வாங்கித் தருவதாய் வாக்களித்தார்.

இருநூறு ரூபாய் கொடுத்தால் மாதம் ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பாதிக்கும் வேலை வாங்கித் தருவதாக தன்னிடம் அந்த மனிதர் சொன்னபோது வாழ்க்கை குறித்த வண்ணக் கனவுகள் பிரேம் கணபதிக்குள் பிரவாகமெடுத்தன. பெற்றோரிடம் சொன்னால் அனுமதிக்க மாட்டார்கள் என்று அந்த பதினேழு வயது இளைஞனுக்கு நன்றாகத் தெரியும். எனவே, பெற்றோருக்குத் தெரியாமல் அந்தப் புதிய மனிதருடன் மும்பைக்குப் பயணமானார். சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் வரை ரயிலில் பயணமாகி அங்கிருந்து உள்ளூர் ரயிலில் பந்த்ரா சென்றபோது ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பாதிக்கப் போகும் வண்ணக்கனவு வளர்ந்தது.

பந்த்ராவில் கால் வைத்த சில நிமிடங்களிலேயே அந்தக் கனவு கலைந்தது. ஒரு டீக்கடையில் தன்னை வேலைக்கு வைத்துவிட்டு அந்த மனிதர் தலைமறைவாகி விட்டது புரிந்தபோது பாதங்களுக்குக் கீழே பூமி உருவப்பட்டது போல் உள்ளம் குலைந்தார் பிரேம் கணபதி. அவருக்கு இந்தி தெரியாது. டீக்கடையில் வேலை செய்ய மனமில்லை. எதிர்காலமே இருண்டு வந்தது போல், உலகமே தனக்கு எதிராய் திரண்டு வந்ததுபோல் மிரண்டு நின்ற கணபதி இரக்கம் மிகுந்த டாக்ஸி டிரைவர் ஒருவரின் கண்களில் பட்டார். அவர்பால் அன்புகாட்டிய டாக்ஸி டிரைவர் பணம் வசூலித்து அவரை மறுபடியும் ஊருக்கு அனுப்பி வைக்க முன்வந்தார். அப்போது பிரேம் கணபதியிடம் ரூ. 121 ரூபாய் இருந்தது.

தான் ஊருக்குத் திரும்புவதில்லை என்கிற உறுதி பிறந்தது. ஏதேனும் வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது.

Tuticorin man honoured in UK parliament

அங்கிருந்த கோவில் வளாகத்திலேயே இரவுகளில் படுத்துக்கிடந்துவிட்டு பகல் நேரங்களில் வேலை தேடத் தொடங்கினார் பிரேம் கணபதி. பீட்ஸா தயாரிக்கும் இடத்தை சுத்தப்படுத்தும் வேலை ஒரு பேக்கரியில் கிடைத்தது. இரவு நேரங்களில் அந்த பேக்கரியிலேயே படுத்துறங்கவும் அனுமதி கிடைத்தது. எதிர்காலம் தனக்கென என்ன வைத்திருக்கிறது என்பது குறித்த எவ்வித வெளிச்சக்கீற்றும் தெரியாமலேயே வேக வேகமாய் விரைந்தன நாட்கள்.

ஆறு மாதங்கள் கழித்து செம்பூரில் வீடுகளுக்கு டெலிவரி செய்கிற பையனாய் சில நாட்கள் வேலை பார்த்தார். அதன் பிறகு உணவகம் ஒன்றில் வேலை கிடைத்தது. அங்கே முதலில் சமையலறையில் வேலை பார்த்தவர் அருகிலுள்ள கடைகளுக்கு டீ, காபி சப்ளை செய்ய அனுப்பப்பட்டார். கொஞ்ச நாட்களிலேயே அந்தக் கடைக்காரர்களுடன் மிக நல்ல உறவை வளர்த்துக் கொண்டார் பிரேம் கணபதி. ஒவ்வொருவருக்கும் டீ, காபி ஒவ்வொரு விதமாய் வேண்டியிருக்கும். சிலருக்கு ஸ்டிராங். சிலருக்கு லைட். சிலருக்கு சர்க்கரை தூக்கலாக. சிலருக்கு சர்க்கரையே போடக் கூடாது. யாருக்கு எது பிடிக்குமென்று முதல் சந்திப்பிலேயே நன்றாக ஞாபகம் வைத்துக்கொண்டு அதற்கேற்ப சப்ளை செய்யத் தொடங்கினார்.

இந்த சேவை காரணமாக மற்ற பையன்களை விட மூன்று மடங்கு கூடுதலாக சம்பாதிக்கத் தொடங்கினார். கணபதியின் ஊக்கமும், கடின உழைப்பும் அங்கிருந்த ஒரு சிறு வணிகருக்குப் பிடித்துப் போனது. பங்குதாரராய் செயல்பட அழைத்தார். அவரே பணம் போட்டு வீதியோர உணவுக்கடை ஒன்றை உருவாக்குவதென்றும் கடையை பிரேம் கணபதி கவனித்துக் கொள்வதென்றும் முடிவானது. லாபத்தில் பாதிப் பாதி என்பது எழுதப்படாத ஒப்பந்தம். கடைவீதி அருகேயே இருந்ததால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் வாழ்க்கை மீண்டும் ஒரு சவாலை பிரேம் கணபதியின் மேல் வீசியது. அந்த மனிதர் பேசியதுபோல் நடந்து கொள்ளவில்லை. லாபத்தில் பங்கு தர மறுத்தார்.

சம்பளமாக 1200 ரூபாய் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம் என்றார். மும்பையில் முதன் முதலாக எதிர்பார்த்து வந்த அதே சம்பளம்! ஆனால் அதற்கு இத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லையே!

இதற்கு ஒப்புக்கொள்வது, தன்னுடைய உழைப்பு சுரண்டப்பட ஒப்புக்கொள்வது போலாகும் என்பதை உணர்ந்த பிரேம் கணபதி அந்தக் கூட்டிலிருந்து விலகினார். ஊரை விட்டு வந்து பல வருடங்கள் கடந்து மீண்டும் ஊருக்குத் திரும்பினார். யுத்த வீரன் தன் படைகளை ஒன்று திரட்டவும் தன்னுடைய பலத்தை தானே மீட்டு எடுக்கவும் எடுத்துக்கொண்ட சின்ன அவகாசம் அது.

சகோதரர்கள் உதவினார்கள். நண்பர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கினார். மும்பையில் உணவு விற்பதில் நல்ல எதிர்காலம் இருப்பதை உணர்ந்தார். அம்மாவிடம் சமையல் குறிப்புகளையும், சொந்த கிராமத்திலிருந்து மசாலா பொருட்களையும் வாங்கிக் கொண்டு மும்பை வந்து இறங்கினார். 150 ரூபாய்க்கு கை வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டார். தானே சமைத்து தெருத் தெருவாய் விற்பனை செய்யத் தொடங்கினார்.

காலை 5.30 மணிக்கு சமையல் வேலையைத் தொடங்கி மதியம் 3.30 வரை வீதிகளில் அலைவார் பிரேம் கணபதி. ஒவ்வொரு மாலையும் இரண்டு மணி நேரம் ஓய்வில் இன்டர்நெட் சென்டர் ஒன்றுக்கு சென்று தொழில் மேம்பாடு குறித்த கட்டுரைகளை வலைபோட்டுத்தேடி வாசிப்பார். ஐந்தாண்டுகளில் படிப்படியாய் வளர்ச்சி நிகழ்ந்தது.

1998ல் அவர் தொடங்கியது பிரேம்சாகர் தோசா ப்ளாஸா இன்று அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, கத்தார், தான்சானியா, மஸ்கட் என வெளிநாடுகளிலும் விரிவடைந்து செல்கிறது. மெக்டோனால்ட் போன்ற சர்வதேச சங்கிலி உணவகங்களைத் தன் முன்னுதாரணமாகக் கொண்டு தோசா ப்ளாஸா தொடர் சங்கிலிகளை பிரான்சைஸி மூலம் உருவாக்கிய பிரேம் கணபதி 2015 இல் 100 கிளைகளை உலகெங்கும் திறக்கும் இலக்கைக் கொண்டுள்ளார். திக்குத் தெரியாமல் காலம் நிறுத்தினாலும் திசைகளை ஜெயிக்கும் உள்ள உறுதியும், ஓயாத உழைப்பும் எத்தகைய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொடுக்கும் என்பதற்கு பிரேம் கணபதி ஒரு பிரமாதமான எடுத்துக்காட்டு.

தோல்விகளில் துவளாமல் வெற்றிச் சிந்தனைகளுடன் தோழமை கொண்டிருந்த பிரேம் கணபதி, நாம் அறிய வேண்டிய ஆளுமை!!!

English summary
A Tamil businessman named Prem Ganapathy was honoured in the British parliament for his courage and hard work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X