For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை போர்க்குற்ற அறிக்கை தாக்கலை 6 மாதத்திற்குத் தள்ளி வைத்தது ஐ.நா.

Google Oneindia Tamil News

ஜெனீவா: இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வதை 6 மாத காலத்திற்கு தள்ளி வைப்பதாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே நடந்த இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனை போர்க்குற்றங்கள் அடிப்படையில் விசாரிக்க ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில், பின்லாந்து முன்னாள் பிரதமர் மர்த்தி அதிசாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.

UNHRC postpones the submission of war crime probe report to September

எனினும் இந்த விசாரணையை ஏற்க இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே முற்றிலுமாக மறுத்துவிட்டார். மனித உரிமைகள் கவுன்சில் அமைப்பினரை விசாரணைக்காக இலங்கைக்குள் நுழைய விடமாட்டோம் என்றும் அவர் கூறினார். இதனால் வெளிநாடுகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மனித உரிமை கவுன்சிலின் நிபுணர் குழு விசாரணை மேற்கொண்டது.

விசாரணை தொடர்பான அறிக்கை மார்ச் 25 ம் தேதி தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில், அந்நாட்டில் 10 ஆண்டுகாலம் கோலோச்சி வந்த ராஜபக்சே படுதோல்வி கண்டார். புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய அரசு பதவி ஏற்றதும், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் தலைவர் சையீத் அல் ஹூசேனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில் எங்களுடைய அரசு வரும் 100 நாட்களுக்குள் போர்க்குற்றங்கள் விசாரணை உள்பட அனைத்து சீர்திருத்தங்களையும் அமல்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. எனவே மனித உரிமை கவுன்சில் தனது விசாரணை அறிக்கையை வெளியிடுவதை தள்ளிவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

இலங்கையின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அல் ஹூசேன், 3 நிபுணர்களைக் கொண்ட விசாரணைக் குழு தாக்கல் செய்வதாக இருந்த அறிக்கையை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்தார். அப்போது, நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 28வது கூட்டத்தொடரில் இந்த அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவர் அல் ஹூசேன் மேலும் கூறுகையில்,

விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தள்ளி வைப்பது ஒரு கடினமான முடிவுதான். எனினும் இலங்கையில் புதிய அரசு அமைந்து இருப்பதால் போர்க்குற்றங்கள் பற்றி விசாரணையில் முக்கிய தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் முன்னாள் தலைவர் நவி பிள்ளை அமைத்த விசாரணைக்குழுவின் நிபுணர்கள் புதிய அரசு இலங்கையில் அமைந்திருப்பதால் சிறிது கால அவகாசம் கொடுக்கலாம் என்று ஆலோசனை கூறினர். இதுவும் கவனத்தில் கொள்ளப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த காலஅவகாசம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் விசாரணையின் அறிக்கைக்கு இன்னும் பலம் சேர்ப்பதாக அமையும் என்று நம்புகிறோம். எனினும் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வது ஒரு முறை மட்டுமே தள்ளி வைக்கப்படுகிறது. இதற்கு பின்பு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. போர்க்குற்றங்கள் விசாரணை தொடர்பான அறிக்கை வருகிற செப்டம்பர் மாதம் நிச்சயம் தாக்கல் செய்யப்படும் என்பது உறுதி என்றார் அவர்.

English summary
UNHRC has announced that it has postponed the submission of war crime probe report on Sri Lanka to September.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X