ட்ரம்ப் அரசின் மனிதாபிமானம் இல்லாத உத்தரவை படித்ததும், குமுறி அழுத பெண் செய்திவாசிப்பாளர்

வாஷிங்டன்: அகதிகளின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து தனிமையில் அடைத்து வைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவு குறித்த செய்தியை வாசித்தபோது, அந்த நாட்டு பெண் செய்தி வாசிப்பாளர் தேம்பி அழுத சம்பவம் உலகமெங்கும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக வந்த அகதிகளின் குடும்பத்தில் இருந்து குழந்தைகளை மட்டும் பிரித்து தனி காப்பகத்தில் வைக்கிறது ட்ரம்ப் அரசு. சமீபத்தில் ட்ரம்ப் இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பித்தார். இந்த காப்பகங்கள், 'tender age' shelters என்று அழைக்கப்படுகின்றன.
இந்த உத்தரவால் குழந்தைகள், பெற்றோரை பிரிந்து இருக்க வேண்டியுள்ளது. பெற்றோரோ சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்த அவலத்தை உலக நாடுகள் பலவும் கண்டுகொள்ளவில்லை.

மனிதத்தன்மை இல்லை
இருப்பினும் மெக்சிகோ அரசு இதை கடுமையாக கண்டித்துள்ளது. மெக்சிகோ அரசு மனிதாபிமானமற்ற செயல் என்று இதை கண்டித்துள்ளது. சிறு குழந்தைகள் முதல் இளம் பிராயத்திலுள்ள பிள்ளைகள் என பல தரப்பட்ட குழந்தைகள், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் செயல் மனிதநேயம் உள்ளிட்டவர்களிடம் கவலையை ஏற்படுத்தியது.

அழுத செய்தி வாசிப்பாளர்
இதனிடையே, இதுகுறித்த செய்தியை MSNBC என்ற டிவி சேனல் செய்தி வாசிப்பாளர் ரேச்சல் மேட்டோ என்ற பெண்மணி வாசித்தார். அப்போது அவரால் செய்தியை தொடர முடியாமல் உடைந்துவிட்டார். திரும்ப திரும்ப அவர் வாசிக்க முயன்றும் அவரால் முடியவில்லை. அழுகை பீறிட்டது. கண்ணீர் வடிந்தது. வாயை மூடியபடியே 3 முறை அவர் செய்தியை வாசிக்க முயன்றார். ஆனால் முடியாமல் போகவே, சக ஆண் செய்தி வாசிப்பாளர் அதை வாசிப்பார் என கூறி கிளம்பி சென்றுவிட்டார்.
|
வைரல் வீடியோ
இந்தசம்பவம் உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அந்த வீடியோ வைரலாகிவிட்டது. இதையடுத்து, ட்விட்டரில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ரேச்சல். எவ்வளவோ முயன்றும் அழுகையை அடக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அதிபர் உத்தரவு
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள புதிய செயல்திட்ட உத்தரவின்படி குழந்தைகளைப் பிரிப்பதைக் கைவிடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மெக்சிகோ எல்லை வழியே அத்துமீறி வந்த அகதிகளின் குடும்பத்தைப் பிரிக்கப்போவதில்லை என்றும் அவர்களின் குடும்பம் ஒன்றாக இருக்கவே விரும்புகிறோம் என்பதால், அத்துமீறி நுழைந்த அகதிகள் கைது செய்யப்பட்டு தங்கள் குழந்தைகளுடனே சிறையில் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.