For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நீட்" கொன்றழித்த மாணவி அனிதாவிற்கு நீதி கோரும் அமெரிக்க தமிழர்கள் !

By Mathi
Google Oneindia Tamil News

அரியலூர் மாவட்டத்தில் செந்துறை அருகே உள்ள குழுமூர் எனும் குக்கிராமத்தில் பிறந்த அனிதா, மருத்துவர் ஆவதையே லட்சியமாகக் கொண்டு கல்வி பயின்றவர்.

கூரை வீட்டில் குடியிருந்த போதும், மருத்துவராக வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் அனிதா படித்தார். தன் படிப்பின் மீதுள்ள நம்பிக்கையால், நல்ல மதிப்பெண்கள் பெற்று அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம்பெற்று விடவேண்டும், என்பதே அனிதாவின் நம்பிக்கை . தங்கள் சகோதரியின் கனவு ஈடேற அவருடைய சகோதரர்களும், தந்தையும் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்குச் சென்று, சம்பாதித்து அவருடைய படிப்புக்கு உறுதுணையாக இருந்தனர்.

US Tamils demands Justice for Anitha

அவர்களுடைய ஊக்கத்துடன் படிப்பில் கவனம் செலுத்திய அவர் பத்தாம் வகுப்பில் 478 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து அவரை ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி கட்டணமில்லாமல் சேர்த்துக்கொண்டது. தனது கனவை நனவாக்கும் வேட்கையுடன் படித்த அனிதா, பிளஸ்-2 தேர்வில் 1,200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றார். இதனால் மருத்துவம் படிக்கத் தேவையான கட்-ஆப் மதிப்பெண் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் இடியாக வந்தது நீட்.

நீட்டிற்கு பயில வசதியும் வாய்ப்பும் இல்லாத அனிதாவால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாமல் போனது. அவர் மருத்துவர் கனவும் கலைந்தது. ஆனாலும் மனம் தளராது உச்ச நீதி மன்றம் வரை சென்று நீட்டை எதிர்த்து வாதாடி உள்ளார். ஆனால் ஆதிக்க ஜாதிகளின் கூடாரமாக உள்ள உச்ச நீதி மன்றம் அவர் வாதத்தை நிராகரித்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து அனிதாவால் மீள முடியவில்லை. மருத்துவராக இனி முடியாது என்பதை புரிந்துக் கொண்ட அவர் மனமுடைந்து சென்ற செப்டம்பர் 1 , 2017 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அனிதா. இந்தச் செய்தி தமிழ்நாட்டுத் தமிழர்கள் இடையே மட்டுமல்லாது புலம்பெயர்ந்த தமிழர்களிடத்தும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீட் ஏன் என்ற கேள்வி பரவலாகக் கேட்கப்படுகிறது. பொதுச் சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்கு, கடந்த 30 வருடங்களில் மட்டும் ஐம்பதாயிரம் மருத்துவர்களை உருவாக்கிய தமிழ்நாட்டிற்கு ஏன் நீட் எனும் தகுதித் தேர்வு? அகில இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவ உயர் படிப்புகளில் இன்றைக்கும் அரசு கல்வித்திட்டத்தில் படித்து மருத்துவம் படிக்கச் சென்றவர்கள் தான் முதல் இடங்களில் தேர்வாகின்றனர் எனும் போது எந்த இடத்தில் கல்வி தரம் குறைந்து காணப்படுகிறது என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தமிழ்நாடு அரசு தமிழ் நாட்டின் மாணவர்களுக்காக உருவாக்கி வைத்திருக்கும் போது தமிழ்நாட்டு மாணவர்களை வஞ்சிக்கும் விதத்தில் வேற்று மாநிலத்தவருக்கு இந்த இடங்கள் தாரைவார்த்துக் கொடுக்கப்படுவது எவ்வளவு அநீதி?

நீட் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான தேர்வு முறை என்பதே மிகப்பெரிய பித்தலாட்டம் அல்லவா? பல தேசிய இனங்கள், பல மொழிகள் , பல்வேறு பாடத்திட்டங்கள் என உள்ள ஒரு ஒன்றியத்தில் எப்படி அனைவருக்கும் ஒரே தேர்வு முறை ஏற்றதாக இருக்கும் என்ற கேள்விகள் எழத்தொடங்கி உள்ளது, மேலும் அண்மையில் நடத்த நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு வினாத்தாள் என்பது இந்த நீட் எவ்வளவு பெரிய மோசடி என்பதைப் புரிய வைக்கும்.

பேராசிரியர் அணில் சடகோபால் சொன்னது போல், இந்திய பொதுச் சுகாதாரத் துறையைத் தனியாரிடம் கொடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ள காரணத்தினால் மட்டுமே , நீட் திணிக்கப்படுகிறது. ஏனெனில் இப்போது இருப்பது போல் கிராமங்களில் பயிற்சி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை நீட்டில் இல்லை, அதனால் பொதுச் சுகாதாரத் துறை நலிவடையும், அந்தத் துறை தனியாருக்கு வழங்கப்படும். எனவே இந்த அடிப்படையிலும் நாம் நீட்டைப் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

நீட் எழுதினால் தான் தரமான மருத்துவர் என்பது மிகப்பெரிய பொய். பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களைக் கற்காது வெறும் 600 மதிப்பெண்கள் எடுத்துவிட்டு நீட்டிற்குப் பயிற்சி சென்று அதில் மதிப்பெண் எடுத்து மருத்துவராகலாம் என்பது எப்படித் தரம்? அதுவும் மூன்று முறை வாய்ப்பு வழங்கப்படுகிறது , இதில் என்ன தரம் உள்ளது?

இன்றைக்கு மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவரும் சென்ற வருடங்களைப் போல் வேட்டி சட்டை அணிந்து கிராமங்களில் இருந்து வரவில்லை, அனைவரும் மகிழுந்தில் வந்து இறங்கினர் எனும் போது நீட் யாருக்கானது எனும் கேள்வி எழாமல் இல்லை!!

புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசித்தாலும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தங்களது ஆதரவையும் அதற்கான முன்னெடுப்பையும் அமெரிக்கத் தமிழர்கள் செய்துகொண்டே வருகின்றனர். ஈழம், சல்லிக்கட்டுப் போராட்டங்களைப் போல அனிதாவின் மரணமும் அமெரிக்கத் தமிழர்களை நிலை குலைய செய்தது , இதன் விளைவாக இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட மாகாணங்களில் குடும்பம் குடும்பமாகக் கூடி நினைவேந்தல் கூட்டம் நடத்தினர். இந்த நிகழ்வில் தமிழ் நாட்டு மக்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய மற்றும் தமிழ் நாட்டு அரசிற்கு எதிராக முழக்கமிட்டனர்

தமிழ் நாட்டின் அடித்தளமான சமூக நீதியைக் கேள்விக்குறியாக்கி கிராமப்புற மாணாக்கர்கள் குறிப்பாக முதல் தலைமுறை மாணாக்கர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் நீட் தேர்வுமுறை தமிழ் நாட்டிற்கு வேண்டாம் என்றும், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும் மற்றும் மரணமடைந்த அனிதாவிற்கு நீதி வேண்டும் போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகளுடன் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரிடமும் ஆதரவு கையொப்பு பெற்றதாகவும், அனைத்து மாகாண கையொப்பங்களை ஒருங்கிணைத்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் அளிக்கவுள்ளதாகவும் அடுத்த கட்டமாக இந்திய தூதரங்கள் முன்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

போராட்டம் நடைபெற்ற இடங்கள் -

நியூ ஜெர்சி , மினசோட்டா, மிச்சிகன், அட்லாண்டா, டல்லாஸ், இர்வின், பிரேமாண்ட் காலிபோர்னியா, சிகாகோ, பென்சல்வேனியா, டெலவேர், வெர்ஜினியா, செயின்ட் லூயிசு, கைதேஸ்பர்க் , எளிகாட் சிட்டி , காக்கிஸ்வில்லே மேரிலாண்ட் , காம்பைன் இல்லினாய்ஸ், ஒஹாயோ, வட கரோலினா , தென் கரோலினா, கனக்டிக்கட், புளோரிடா ​. மற்றும் சில நகரங்களில் திட்டமிட்டு கொண்டிருப்பதாக​வும் தெரிவித்தனர்.

English summary
US Tamils hold protest across US Cities and demanded that Justice for Anitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X