For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபாகரன் என் கழுத்தில் அணிவித்த சயனைடு குப்பி இன்னமும் பத்திரமாக இருக்கிறது- வைகோ

By Mathi
Google Oneindia Tamil News

ஈழமுரசு, முரசொலி அலுவலகங்களைக் குண்டு வைத்துத் தகர்த்தது ஐபிகேஎப். நிதர்சனம் தொலைக்காட்சி அலுவலகத்தையும் அழித்தார்கள். தலைவர் பிரபாகரனை எப்படியாவது கொன்று விடவேண்டும் என்று 28 கமாண்டோக்களை அவர் இருக்கும்இடத்திற்கு அருகில் கொண்டுபோய் இறக்கினார்கள். அவர்களுள் ஒருவன்கூட உயிரோடு திரும்பவில்லை. அதில் காயப்பட்டவர்தான் பொட்டுஅம்மான். காயப்பட்டவன்தான் சந்தோஷ்.

அதன்பிறகு இந்திய இராணுவத்தின் 14 டாங்குகளைப் புலிகள் தகர்த்தார்கள். பாகிஸ்தானிடம் பறிகொடுக்காத டாங்குகளை இந்திய அரசு புலிகளிடம் பறிகொடுத்தது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

வெறும் 28 பேர்களோடுதான் வன்னிக்காட்டுக்குள் போனார். இந்திய இராணுவத்தின் ஒன்றரை இலட்சம் படைகளை எதிர்த்து நின்றார்.

Vaiko speaks on links LTTE, Prabhakaran and MGR

வல்வெட்டித்துறை இன்னொரு மைலாய் என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒரு புத்தகம் போட்டார்.அது பிரபாகரன் பிறந்த ஊர் என்பதால், அங்கே ஒவ்வொரு வீட்டுக்கு உள்ளேயும் நுழைந்து சுட்டுக்கொன்றார்கள். அங்கே ஒவ்வொரு வீட்டிலும் சிவன் படம் இருக்கும், முருகன் படம் இருக்கும். அங்கே வீடுகளில் பிணங்கள், வீதிகளில் பிணங்கள் சிதறிக் கிடந்தன என்று லண்டன் கார்டியன் பத்திரிகை எழுதியது. அப்போது 55 நிமிடங்கள் இந்திய நாடாளுமன்றத்தில் நான் நெருப்பைக் கொட்டி இருக்கின்றேன்.

இந்திய இராணுவத்தை விமர்சிக்கின்றாயா? விபரீதம் ஏற்படும் என்றார் ராஜிவ் காந்தி. You have to face the conseQuences என்று எச்சரித்தார்.

அதற்கு நான் சொன்னேன்: what are the conseQuences? the utmost conseQuence will be gallows. I am prepared to face it என்ன விளைவுகள் ஏற்படும்? கடைசித் தண்டனை தூக்குக்கயிறுதான் என்றால், அதற்கும் நான் ஆயத்தமாக இருக்கிறேன். இந்திய இராணுவம் எங்கள் குழந்தைகளை, பெண்களைக் கொன்று குவிக்கிறது அதை நான் இங்கே விமர்சிப்பேன் என்று சொன்னேன். லண்டனில் நடைபெற்ற ஈழத்தமிழர்கள் கூட்டத்திலும் இதை நான் பேசி இருக்கின்றேன்.

புலிகள் வலுப்பெற்றார்கள். வெற்றிகளைக் குவித்தார்கள். யாழ் கோட்டையில் புலிக்கொடி பறந்தது. ஓயாத அலைகள் தாக்குதலில் சிங்களவன் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடினான். அக்கினி அலைகளில் புறமுதுகிட்டு ஓடினான். ஆனைஇறவுப் போரில், 20 மடங்கு ஆயுத பலம் கொண்ட சிங்களப் படைகளைப் புலிகள் தோற்கடித்தது போன்ற சரித்திரம் உலகில் வேறு எங்கும் இதுவரை நடைபெற்றது இல்லை. அதை நடத்தியவர் பிரிகேடியர் பால்ராஜ். என்னைத் தலைவர் திருப்பு அனுப்பும்போது, எனக்குப் பாதுகாப்பாக ஏழு தளபதிகளையும் 57 புலிகளையும் உடன் அனுப்பினார்.

நான் போக மாட்டேன். என் கட்சி எனக்குத் துரோகம் செய்து விட்டது. நான் இங்கேயே உங்களோடுதான் இருப்பேன் என்று சொன்னேன். அண்ணே நீங்கள் போகணும். அக்காவுக்கு நான் பதில் சொல்லனும் என்றார். என் வீட்டுக்கு எத்தனையோ முறை வந்து என் துணைவியார் கையால் சாப்பிட்டு இருக்கின்றார்.

ஒன்றரை லட்சம் இந்தியத் துருப்புகள் வளைத்து நிற்கின்றன. சண்டை பலமாக மூளப்போகின்றது. நீங்கள் தமிழ்நாட்டுக்குப் போயாக வேண்டும் என்றார். காட்டு வழியாகத்தான் போயாக வேண்டும். முட்கள் குத்திக் கிழிக்கும் என்றார். நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அதிகாலை ஐந்து மணிக்குத் தலைவருடன் இருக்கின்றேன். கிட்டுவும் இருக்கின்றார். புலிகள் கஷ்டப்படுகின்றார்களே என்று இரண்டு ஆண்டுகள் அசைவம் சாப்பிடாமல் இருந்தேன். தலைவரைப் பிரிந்து செல்ல வேண்டிய வேதனையில் சாப்பிடாமல் கண்ணீர் விட்டுக் கொண்டே இருந்தேன்.

ஏண்ணா அழுகின்றீர்கள்? என்று கேட்டார். ஒன்றும் இல்லை தம்பி. திரும்ப நான் உங்களை எப்போது பார்க்கப் போகின்றேனோ? என் உயிரைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஒன்றரை இலட்சம் படைகள் சுற்றி நிற்கின்றனவே, உங்கள் உயிரைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன் என்றேன். இல்லண்ணா. எங்களுக்கு ஒன்றும் ஆகாது. நீங்கள் சந்தோசமாகப் போய் வாருங்கள் என்றார். 57 புலிகளையும் வரிசையில் நிறுத்தினார். முன்னால் ஒரு அணி செல்லுங்கள். அவர்கள் தகவல் கொடுத்த பிறகு, அண்ணன் அணி வரட்டும். அண்ணனுக்கு வலதுபுறம் இரண்டு பேர், இடது புறம் இரண்டு பேர் எப்போதும் உடன் செல்லுங்கள். அன்றைக்கு அந்தக் களத்தில் இருந்தவர்கள் நான்கைந்து பேர் இன்றைக்கு இந்தக் கூட்டத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் பெயரை நான் சொல்லப் போவது இல்லை.

அப்போது நான் தலைவரிடம் கேட்டேன். போகின்ற வழியில் நாங்கள் இந்திய இராணுவத்திடம் சிக்கிக் கொண்டால், புலிகள் விசக்குப்பிகளைக் கடித்து மடிந்து போவார்கள். என்னுடைய நிலைமை என்ன? என்னைக் கைது செய்து, சித்திரவதை செய்வார்கள். என் விரல் நகங்களில் ஊசி ஏற்றுவார்கள். எவ்வளவு தொலைவு நடந்து வந்தாய்? பிரபாகரன் எங்கே இருக்கின்றான்? என்று கேட்பார்கள். நான் அந்தச் சித்திரவதைகளைத் தாங்க முடியுமா? எனக்கும் ஒரு விஷக்குப்பி கொடுங்கள் என்று கேட்டேன்.

அண்ணா உங்களுக்கு அப்படி ஒரு நிலைமை வராது அண்ணா என்றார். இல்லை. யுத்தத்தில் எதுவும் நடக்கலாம். அப்படி நடந்துவிட்டால் என்ன ஆகும்? என்றேன்.

தோழர்களே, என்ன நடந்தது தெரியுமா? வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்குக் கிடைத்தது. தலைவர் இரண்டு சயனைடுக் குப்பிகளைச் சேர்த்து கட்டிக் கழுத்தில் அணிந்து இருப்பார். பொட்டு அம்மானை அழைத்து ஒரு கயிறு கொண்டு வரச் சொன்னார். தன் கழுத்தில் இருந்த இரண்டு குப்பிகளை எடுத்தார். அதில் ஒரு குப்பியைக் கயிற்றில் பிரித்துக் கட்டி அதை என் கழுத்தில் அணிவித்தார்.

அப்போது கிட்டுவும்,சொர்ணமும் சொன்னார்கள். புலிகளுக்குத் தலைவர் குப்பிகளைக் கட்டி இருக்கின்றார். ஆனால், தன் கழுத்தில் கிடந்த குப்பியைக் கழற்றி வேறு யாருக்கும் அணிவித்தது இல்லை. அந்த பாக்கியம் உங்களுக்குத்தான் கிடைத்து இருக்கின்றது அண்ணா என்று சொன்னார்கள். உலகத்தில் இதைவிடப் பெரிய பட்டயம் ஒன்றும் எனக்குத் தேவை இல்லை. நான் இன்னமும் அந்த சயனைடுக் குப்பியை என் வீட்டில் வைத்து இருக்கின்றேன்.

English summary
MDMK General Secretary Vaiko delivery long speech on his links with LTTE, Prabhakaran and MGR in Geneva.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X