For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலேசியாவின் பினாங்கு சட்டமன்றத்தில் வைகோவுக்கு வரவேற்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பினாங்கு: பினாங்கு மாநில சட்டமன்றத்திற்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சர்வதேச தமிழ் மாநாடு மலேசிய நாட்டின் பினாங்கு நகரில், நவம்பர் 7, 8, 9 மூன்று நாட்கள் நடைபெற்றது. மாநாட்டின் நுழைவாயில் நிகழ்ச்சியாக பினாங்கு நகரில் உள்ள தண்ணீர்மலை முருகன் கோவில் வளாகத்தில், முருகன் கோவில் நிர்வாகத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், மாநாட்டுப் புரவலர் முனுசாமி முன்னிலையில் நடைபெற்றது.

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், இலங்கை வடக்கு மாநில மாகாண சபை உறுப்பினர் திருமதி ஆனந்தி சசிதரன் அவர்களும் உரையாற்றினர்.

பினாங்கு மாநாடு

8 ஆம் தேதி அன்று பினாங்கில் மாநாடு முறைப்படி தொடங்கியது. மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாநிலத்தின் முதலமைச்சர் லிம் யுவான் இங் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டின் சிறப்புரையை வைகோ நிகழ்த்தினார்.

பின்னர் உலகத் தமிழர்கள் குறித்து ஆறு அமர்வுகள் நடைபெற்றன. அதில் பல நாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றினார்கள்.

9 ஆம் தேதி அன்று மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், ஜனநாயக செயல் கட்சியின் இன்றைய தலைவருமான முனைவர் அன்வர் இப்ராஹிம் அவர்கள் மாநாட்டின் நிறைவுரை ஆற்றினார்.

பினாங்கு பிரகடனம்

இந்த மாநாட்டின் முத்திரையாக பினாங்கு பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்தப் பிரகடனத்தைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவில், 1. சார்லஸ் ஆண்டனி (மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்) 2. சதீஸ் முனியாண்டி (மாநாட்டுச் செயலாளர்) 3.புஷ்பராணி

வில்லியம்ஸ் ( அமெரிக்கா) 4. திருச்சோதி (பிரான்ஸ்) 5. பேராசிரியர் மணிவண்ணன் (தமிழ்நாடு) 6. மோகன் ராமகிருஷ்ணன் (கனடா) ஆகிய ஆறு பேர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழு 8 ஆம் தேதி இரவில் பிரகடனத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. அப்பொழுது பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களும், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் பிரகடனம் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

9 ஆம் தேதி மாநாட்டில் பிரகடனத்தை வெளியிட்ட மாநாட்டுச் செயலாளர் சதீஸ் முனியாண்டி அவர்கள் "இந்தப் பிரகடனம் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களும் வழங்கிய ஆலோசனையாலும், வழிகாட்டுதலாலும் தயாரிக்கப்பட்டது" என்று தெரிவித்தார். பலத்த கரவொலி ஆரவாரத்துடன் இந்தப் பிரகடனம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

சட்டமன்றத்தில் வைகோ

மலேசிய நாட்டின் பினாங்கு மாநில சட்டமன்றம், பினாங்கு நகரில் அமைந்துள்ளது. இந்தச் சட்டமன்றத்திற்கு இன்று (நவம்பர் 10 அன்று) காலை 11மணி 45 நிமிடத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்றார்.

அவருக்கு அவைத் தலைவர் லாசுங் கியாங் வரவேற்பளித்தார். அப்போது "நமது சட்டமன்றத்திற்கு இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியமான தலைவரான வைகோ வந்திருக்கிறார்.

நமது சட்டமன்றம் எப்படி நடைபெறுகிறது என்பதை அறிவதற்காக வந்துள்ளார். அவரை நானும் இந்தச் சட்டமன்றமும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று கூறினார்.

Vaiko visits Penangu assembly

துணை முதல்வர் வரவேற்பு

துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் "இன்று நம் சட்டமன்றத்திற்கு தமிழகத்திலிருந்து முக்கியமான தலைவரான வைகோ வந்திருக்கிறார். அவர் பல ஆண்டுகள் இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர். கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் பங்கேற்று பாராட்டுக்குரிய சிறப்புரை ஆற்றினார். இன்று நமது மன்றத்திற்கு அவர் வந்ததற்கு மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் " என்று கூறினார்.

வைகோவிற்கு நினைவுப் பரிசு

ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான திரு நேதாஜி ராயன் அவர்கள் வரவேற்றுப் பேசினார். அவை நண்பகல் இடைவேளைக்காக ஒத்தி வைக்கப்பட்டவுடன், அவைத் தலைவரின் அறைக்கு துணை முதல்வர் இராமசாமி அவர்கள் வைகோவை அழைத்துச் சென்றார். சட்டமன்ற அவைத் தலைவர் வைகோவை வரவேற்று நினைவுப் பரிசு வழங்கினார்.

English summary
MDMK chief Vaiko is touring Malaysia and he was welcomed in Penangu assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X