
5 லட்சம் உயிரிழப்புகள்.. வேக்சின் இருந்தும் ஓமிக்ரான் ஆட்டம்.. ஈஸியா நினைக்காதீங்க.. ஹூ முக்கிய அலர்ட்
ஜெனீவா: ஓமிக்ரான் வைரசால் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதனை சாதாரணமாக நினைக்க வேண்டாம். பல நாடுகள் இன்னும் ஓமிக்ரானின் உச்சத்தை கடக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஆட்டம் போட்டு வருகிறது. இந்த வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருவதால் இதனை முழுமையாக கட்டுப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் வந்த ஓமிக்ரான் மாறுபாடு இந்தியா உள்பட உலக நாடுகளை பதம் பார்த்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து என உலகின் வல்லரசு நாடுகளிலும் ஓமிக்ரான் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.
பரிசோதனையிலும் சிக்காத புதிய BA.2 ஓமிக்ரான் கொரோனா.. தடுப்பூசி வேலைசெய்யுமா? சவுமியா சாமிநாதன் பதில்

ஓமிக்ரான் வைரஸ்
உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர்.. டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்று
ஒருபக்கம் தகவல்கள் பரவின. ஆனால் ஓமிக்ரான் வைரஸ் மிகவும் லேசானதுதான், டெல்டா வைரஸை விடவும் ஓமிக்ரான் வைரஸ் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்று தென்னாப்பிரிக்கா மருத்துவ நிபுணர்கள் உள்பட பலர் கூறினார்கள்.

5,00,000 இறப்புகள்
ஆனால் உலக சுகாதார அமைப்பு இதனை மறுத்து வந்தது, இந்த நிலையில் நவம்பர் பிற்பகுதியில் ஓமிக்ரான் வைரஸ் கவலைக்குரிய மாறுபாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்து உலகளவில் 130 மில்லியன் பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தற்போது கூறியுள்ளது. ஓமிக்ரான் வைரசால் 5,00,000 இறப்புகள் பதிவாகியுள்ளது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

தடுப்பூசி இருந்தும் இந்த நிலைமை
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அதிகாரி அப்டி மஹமுட் கூறுகையில், ' இந்த திறமையான தடுப்பூசிகளின் யுகத்திலும் அரை மில்லியன் மக்கள் இறக்கின்றனர். ஓமிக்ரான் வைரசிடம் அதிகமான தாக்கம் இருக்கிறது. ஒமிக்ரான் லேசானது என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தாலும், இந்த வைரஸ் வந்ததில் இருந்து அரை மில்லியன் மக்கள் இறந்துள்ளனர் என்பதை அவர்கள் கண்டுபிடிக்க தவறவிட்டனர்' என்று கூறினார்.

மிகவும் மோசமானது
கொரோனாவின் மேலாதிக்க மாறுபாடாக கருதப்பட்ட டெல்டா தொற்றையே ஒமைக்ரான் தொற்று முந்தியுள்ளது. இது மிகவும் மோசமானது என்று கூறிய அப்டி மஹமுட், 'பல நாடுகள் இன்னும் ஓமிக்ரானின் உச்சத்தை கடக்கவில்லை. இந்த வைரஸ் தொடர்ந்து ஆபத்தானது. இதனை சாதாரணமாக நினைக்க வேண்டாம். இன்னும் இந்த தொற்றுநோயின் நடுவில்தான் இருக்கிறோம்' என்று எச்சரிக்கையுடன் கூறினார்.