
சீனாவில் கொரோனா கட்டுப்பாடு.. வெடித்த மக்கள் புரட்சி.. WHO சொல்வது என்ன? சீனாவின் அதிர வைக்கும் நிலை
பெய்ஜிங்: சீனாவில் அதிகரித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதில் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகவே அரசு அடக்குமுறையை கையாண்டதாக குற்றச்சாட்டுகள் மேலெழுந்துள்ளன.
கொரோனா தொற்று பாதிப்பு முடிவுக்கு வரவில்லை என்றும், இன்னும் நாம் இந்த நெருக்கடியில்தான் இருக்கிறோம் என்றும் உலக சுகாதார மையம் கூறி வருகிறது.
தொற்று பாதிப்பை முழுமையாக குணப்படுத்த பாதுகாப்பு வழிமுறைகளை கறாராக கடைப்பிடிக்க வேண்டும் என WHO கூறியதையடுத்து சீனா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது இதனை எதிர்த்துதான் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஸ்பீடாக பரவும் கொரோனா.. பதறும் ஜி ஜின்பிங்.. பதவியை ராஜினாமா செய்ய வெடித்த போராட்டம்.. பரபர சீனா

போராட்டம்
குறிப்பாக பெய்ஜிங், ஷாங்காய், உரும்கி, நான்ஜிங், குவாங்சோ, வுஹான் ஆகிய நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வுஹானில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் "இந்த கட்டுப்பாடுகள் வுஹானில்தான் தொடங்கியது. எனவே வுஹானிலேயே இதற்கு முடிவு கட்ட வேண்டும்" என்று போராட்டக்காரர்கள் முழக்கமிட்டுள்ளனர். மேலும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், அதிபர் ஜி ஜிங்பிக்கிற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். ஷாங்காயில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தங்களது செய்தியாளர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. தொடர் கட்டுப்பாடுகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு குறு தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சீனாவின் நிலை
நாடு முழுவதும் தற்போது 39,791 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இந்த பாதிப்பு 35,183 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 4,608 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெய்ஜிங்கில் இந்த பாதிப்பு ஒரே நாளில் 66% அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. அதேபோல தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் 15% பேரும் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் குவாங்சோ நகரில் இந்த பாதிப்பு குறைந்திருக்கிறது. தற்போது வரை நாடு முழுவதும் 14.9 லட்சம் பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,232 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் 10.9 லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

கட்டுப்பாடு
சீனாவில் இந்த அளவிற்கு உயிரிழப்புகள் குறைந்ததற்கு அந்நாட்டு அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள்தான் காரணம். வுஹான் மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. உலகில் அதிக மக்கள்தொகை உள்ள நாடான சீனாவில் இது பலத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்ட நிலையில் அந்நாட்டு அரசு மேற்கொண்ட போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகள் காரணமாக இந்த பாதிப்புகள் குறைந்தன. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2022ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு தொற்று வளர்ச்சியின் அளவு, காலகட்டம், பாதிப்புகள் என பிரித்து அந்நாட்டு சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டது. இதில், மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் தொற்று பாதிப்பு குறைந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, சமீபத்தில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தீவிரமாக்கியுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின்படி ஓட்டல்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். பள்ளி கல்லூரிகளுக்கு நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய பாதிப்புகள் கண்டறியப்படும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அதேபோல விமான போக்குவரத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. வழக்கம்போல பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்திருந்தால் போதுமானது. வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்வோர் இனி 10 நாட்கள் இருக்க வேண்டியதில் 3 நாட்கள் இருந்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா
கொரோனா என்பதே பழைய கதை. இந்தியாவில் இப்படி எந்த விதமான கறாரான கட்டுப்பாடுகளும் கிடையாது. பின்னர் ஏன் சீனாவில் மட்டும் இவ்வளவு கட்டுப்பாடு என்ற பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இதற்கு சீனாவின் சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. அதாவது கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாத்திலிருந்து 2022ம் ஆண்டு ஜூன் மாதம் வரை சீனாவின் 49 நகரங்களில் 65 கொரோனா வெடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றில் 66.2% ஓமிக்ரான் பாதிப்புகளாகும். 33.8% ஓமிக்ரான் அல்லாத பாதிப்புகளாகும். இதில் ஒமிக்ரான பாதிப்பு குணமடைய நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்கிறது. ஒமிக்ரான் அல்லாத SARS-CoV-2 B.1.1.529 வகை வைரஸ் குறைந்த நாட்களில் குணமடைந்தாலும் வேகமாக பரவும் தன்மையை கொண்டிருக்கிறது. மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் இந்த வகை வைரஸ் பாதிக்கிறது. எனவே கொரோகா பரவை பூஜ்ய நிலைக்கு கொண்டு வர இவ்வாறாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

WHO என்ன சொல்கிறது?
உலக சுகாதார அமைப்பு கொரோனா பாதிப்பு குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதாவது நாம் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டாலும் கொரோனா பாதிப்பிலிருந்து நம்மால் விரைவில் வெளிவர முடியாது. நாம் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். இன்றும் வீரியமான தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வேண்டும். நாம் இன்றும் கொரோனா நெருக்கடியில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே இதனை தடுக்க ஏற்கெனவே பின்பற்றப்பட்ட வழிமுறைகள் தற்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். எனவேதான் சீனா கடும் கட்டுபாடுகளை பின்பற்றி வருகிறது. இந்நிலையில் தற்போது அதற்கேற்ப பலனையும், விளைவையும் சந்தித்து வருகிறது. சீனாவுக்கு அடுத்து உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியாவில் 5.31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.