For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியர்களுக்கு இப்போது துபாயில் வேலை கிடைக்குமா?

By BBC News தமிழ்
|

தற்போது துபாய் வளர்ச்சியடைந்துவிட்டது. இப்போது அங்கு தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கிறது? தொழிலாளர்களின் நிலை என்ன?

துபாயில் வேலை
BBC
துபாயில் வேலை

அண்மையில் கத்தார் மற்றும் செளதி அரேபியாவுக்கான உறவுகளில் ஏற்பட்ட சிக்கல்களால் பல இந்திய தொழிலாளர்கள் வேலையின்மை என்ற சிக்கலை எதிர்கொண்டனர்.

ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்டில் மட்டும் தொழிலாளர்களின் வேலைகளுக்கு குந்தகம் ஏற்படவில்லை. ஒரு காலத்தில் 'துபாய்க்கு போகிறேன்' என்று சொன்னால், அங்கு வேலைக்கு போகிறேன் என்பதே பொதுவான பொருள்.

தற்போது துபாய் வளர்ச்சியடைந்துவிட்டது. இப்போதும் அங்கு தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கிறது? தொழிலாளர்களின் நிலை என்ன?

இதைப் பற்றி நேரடியாக கள ஆய்வு மேற்கொள்வதற்காக பிபிசி நிருபர் ஜுபைர் அஹமத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டார். அவரின் பார்வையில் அந்த நாட்டில் வேலைவாய்ப்பு நிலைமை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

துபாய்
BBC
துபாய்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் கூட்டாக வசிக்கும் கட்டடங்கள் தொழிலாளர் முகாம் என்று அழைக்கப்படுகிறது.

துபாயில் இருக்கும் ஒரு தொழிலாளர் முகாமிற்கு சென்றேன். அது ஒரு குடிசைப்பகுதியாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் சென்றேன். ஆனால், வெளியில் இருந்து பார்க்கும்போது, இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டடங்களைப்போலவே அந்த முகாம் இருக்கிறது.

துபாயில் வேலை
BBC
துபாயில் வேலை

சுத்தமான அறைகள், சமையலறை, கழிவறைகள்

முகாமிற்குள் சென்ற நான் அங்கிருந்த அறைகளையும், சமையலறையையும் பார்த்து வியப்படைந்தேன். காரணம் அவை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் கத்தாரில் தொழிலாளர் முகாம்கள் மிகவும் மோசமாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இந்த நான்கு மாடி கட்டடத்தில் 304 அறைகள் உள்ளன. ஓர் அறையில் மூன்று அல்லது நான்கு தொழிலாளர்கள் தங்கியிருக்கின்றனர்.

ரயில்களில் காணப்படும் படுக்கை வசதியைப் (பெர்த்) போலவே, அவர்களது படுக்கைகளும் அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன.

துபாயில் வேலை
BBC
துபாயில் வேலை

தொழிலாளர் முகாமில் இருக்கும் அறைகளைப் பார்த்தால் மாணவர் விடுதியில் இருக்கும் அறைகளைப் போலவே காணப்படுகின்றன. அங்குள்ள சமையலறை, கழிவறை போன்றவை மிகவும் சுத்தமாக காணப்படுகிறது.

அங்கிருக்கும் சில தொழிலாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இருவர் பிஹார் மாநிலம் சீவான் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இருவரும் கடன் வாங்கி, ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து வேலை வாங்கியவர்கள். அதில் ஒருவர் 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். மாதம் 10 ஆயிரமாக ஆறு மாதங்களில் கடனை அடைத்துவிட்டதாக அவர் கூறினார்.

துபாய்
BBC
துபாய்

ஊதியம்- தொழிலாளருக்கு 36 ஆயிரம் ரூபாய், வாகன ஓட்டுனருக்கு 54 ஆயிரம் ரூபாய்

சீவான் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு தொழிலாளி சோனு யாதவுக்கு துபாயில் வசிக்க பிடிக்கவில்லை, ஆனால் வேறு வழியில்லாமல் இங்கு பணிபுரிகிறார்.

இருந்தாலும், பத்து பேர் வசதியாக வாழ ஒருவர் கஷ்டப்பட்டால் பரவாயில்லை என்று சொல்கிறார் அவர்.

குடும்பத்திற்கு மாதந்தோறும் பணம் அனுப்புவது மகிழ்ச்சி அளிப்பதாக இருவரும் சொல்கின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இதுபோன்ற பல முகாம்களில் லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.

வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களின்படி இந்தியாவை சேர்ந்த 28 லட்சம் பேர் இங்கு வசிக்கின்றனர். அதில் தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் 20 லட்சம். அதில் பத்து லட்சம் பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.

கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாதம் 2000 திர்ஹம் அதாவது இந்திய மதிப்பில் 36 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

அதில் 15 முதல் 20 ஆயிரம் ரூபாயை வீட்டிற்கு அனுப்புகின்றனர். வாகன ஓட்டுனர்களின் சம்பளம் மூன்றாயிரம் திர்ஹம் அதாவது இந்திய மதிப்பில் 54 ஆயிரம் ரூபாய்.

துபாய்
BBC
துபாய்

நடுத்தர வர்க்க மக்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு

ஆனால் தற்போது நடுத்தர வர்க்க மக்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கட்டுமானப் பணியில் இந்தியத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, பொறியாளர்களும் பணிபுரிகின்றனர்.

மாதம் பத்தாயிரம் திர்ஹம் (180,000 ரூபாய்) ஊதியம் கிடைக்கும் வேலை என்பது நடுத்தர வர்க்க மக்களிடையே சிறந்த வேலையாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இங்கு வீட்டு வாடகை மிகவும் அதிகம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சம்பளத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை வீட்டு வாடகையாகவே செலவளிக்க நேரலாம்.

வீடியோ பிளாகிங் (video blogging) மூலம் துபாயில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றி தகவல் அளிக்கும் அஜ்ஹர் நவீத் ஆவானின் கருத்துப்படி, உலகில் இருக்கும் மொத்த கிரேன்களில் 30 சதவிகிதம் துபாயில் உள்ளது.

அதாவது, இங்கு கட்டுமான பணியாளர்களின் தேவை மட்டுமின்றி, பொறியாளர்கள் அதிலும் குறிப்பாக சிவில் பொறியாளர்களின் தேவையும் அதிகம்.

துபாயில் வேலை
BBC
துபாயில் வேலை

'பயோடேடா' தயாரிப்பதில் கவனம் தேவை

நவீத் கூறுகிறார், "என்னிடம் வருபவர்களில் பெரும்பாலானோர் சிவில் எஞ்சினியர்கள்தான். அதிலும் இந்தியாவிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். கட்டுமான நிறுவனங்களுக்கு சென்றால் உயர்நிலையில் இருந்து கீழ்நிலைவரை பல்வேறு மட்டங்களிலும் இந்தியர்கள் பணிபுரிவதைக் காணலாம்.

துபாயில் வேலை தேடும் இந்தியர்களுக்கு நவீத் கூறும் ஆலோசனை இது. 'பயோடேடா தயாரிக்கும்போது கவனமாக இருங்கள். சுயவிவர குறிப்புகளை உரிய முறையில் தயாரிப்பதில் பலர் கவனம் செலுத்துவதில்லை, அதனால்தான் பலருக்கு வேலை கிடைப்பதில்லை'.

பெண்களுக்கு அதிக பாதுகாப்பு

அவருடைய சக பணியாளர் ஃபாத்திமாவின் கருத்துப்படி, இந்தியாவில் இருந்து வேலைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகம். பெண்களுக்கு உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்று'.

பெண்கள் தனியாகக்கூட வாழமுடியும், அவ்வளவு பாதுகாப்பான ஊர் துபாய் என்று உறுதியளிக்கிறார் ஃபாத்திமா.

ஐக்கிய அரபு அமீரகம் நல்ல வளர்ச்சி அடைந்துவிட்டாலும், இன்றும் அங்கு பல கட்டுமானப் பணிகள் நடைபெறுவதைக் காணலாம்.

துபாயில் கட்டுமானம் நடைபெறும் ஒரு இடத்திற்கு சென்றேன். அங்கு டஜனுக்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக இங்கு சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், இப்போதும் வளர்ச்சியின் பாதையில் பீடுநடை போடுகிறது ஐக்கிய அரபு அமீரகம்.

துபாயில் இப்போது வேலை கிடைக்குமா, கிடைக்காதா?
A. Vine/Daily Express/Getty Images
துபாயில் இப்போது வேலை கிடைக்குமா, கிடைக்காதா?

இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு

துபாயில் சிடி டவர்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவரான தெளசீஃப் கான், இந்தியர்களுக்கு இங்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறுகிறார், "இந்தியாவில் வேலைவாய்ப்புகள் இருந்தாலும், ஜி.எஸ்.டி, பணவிலக்க நடவடிக்கை போன்றவற்றால் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன. ஆனால் இங்கு வேலைக்கு பாதுகாப்பு இருக்கிறது. ஒருவர் வேலை செய்யும் நிலையில் இருக்கும்வரை வேலைக்கு பாதுகாப்பு உள்ளது, சம்பளமும் உறுதியாக கிடைக்கும்."

துபாயில் ஏற்கனவே வளர்ச்சியடைந்த இடங்களைத் தவிர, வேறு பல புதிய இடங்களும் மேம்படுத்தப்படுகின்றன. அங்கு கட்டுமானப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தியர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பு உறுதி என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம்.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
Will Indians able to get jobs in Dubai now? here is the details of the ground reality.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X