For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜப்பானில் நடந்த உலகின் மிகப் பெரிய இணைய திருட்டு: 534 மில்லியன் டாலர்கள் மின்னணு பணம் மாயம்

By BBC News தமிழ்
|
பிட்காயின்
Getty Images
பிட்காயின்

ஜப்பானின் மிகப் பெரிய மின்னணு பணப்பரிமாற்ற நிறுவனங்களுள் ஒன்று சுமார் 534 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தனது மின்னணு பணத்தை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

என்இஎம் என்னும் பரவலாக அறியப்படாத ஒரு வகை கிரிப்டோகரன்சியை ஹேக்கிங் செயல்பாட்டின் காரணமாக இழந்துள்ளதாக கூறியுள்ள காயின்செக் என்னும் அந்த நிறுவனம், பிட்காயின் தவிர்த்த மற்றனைத்து மின்னணு பணங்களின் பரிமாற்றத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

தாங்கள் வெள்ளைக்கிழமையன்று இழந்துள்ள பணத்தை மீண்டும் பெறவியலாத நிலைக்கூட ஏற்படலாம் என்று ஜப்பானிய ஊடகங்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இணைய திருட்டு உறுதிப்படுத்தப்பட்டால், உலகில் இதுவரை நடந்த இணைய திருட்டுகளிலேயே மிகவும் மோசமானதாக இது கருதப்படும்.

ஜப்பானில் நடந்த உலகின் மிகப் பெரிய இணைய திருட்டில் $534 மில்லியன் டாலர்கள் மின்னணு பணம் மாயம்
EPA
ஜப்பானில் நடந்த உலகின் மிகப் பெரிய இணைய திருட்டில் $534 மில்லியன் டாலர்கள் மின்னணு பணம் மாயம்

இணையத்தின் மூலமாக திருடப்பட்ட காயின்செக் நிறுவனத்தின் மின்னணு பணமானது "ஹாட் வாலெட்" என்றழைக்கப்படும் பணப்பரிமாற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அவை சேமிப்பு கணக்கு போல செயல்படும் "கோல்ட் வாலெட்"டுக்கு மாற்றப்பட்டு 'ஆஃப்லை'னில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது அந்த பணம் இருக்கும் கணக்கினுடைய மின்னணு முகவரி தங்களுக்கு தெரியுமென்று காயின்செக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஹேக்கிங் செயல்பாட்டின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மற்றும் எங்கிருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்த தகவல்களை இன்னும் திரட்டிக் கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்போது நடந்தது?

உள்ளூர் நேரப்படி அந்நிறுவனத்தின் இணையத்தளத்துக்குள் வெள்ளைக்கிழமையன்று அதிகாலை 2:57 மணியளவில் ஹேக்கர்கள் ஊடுருவியதாகவும், ஆனால் மின்னணு பணம் திருடப்பட்டுள்ளது குறித்து சுமார் எட்டரை மணிநேரம் கழித்தே தெரியவந்ததாகவும் அந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இணைய திருட்டின்போது, காயின்செக் நிறுவனத்தின் 523 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள என்இஎம் என்னும் மின்னணு பணம் திருடப்பட்டதாக அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி தெரிவித்துள்ளார்.

"எங்களுக்கு பணம் எங்கு சென்றுள்ளது என்பது குறித்து தெரியும்" என்றும் "பணம் சென்றுள்ள இடத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதே போன்று எங்களால் தொடர்ந்து கண்காணிக்க இயலுமானால் பணத்தை திரும்பப்பெறுவது என்பது சாத்தியப்படலாம்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

திடீரென குறைந்த மின்னணு பணத்தின் சந்தை மதிப்பு

சந்தை மதிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது 10வது மிகப் பெரிய மின்னணு பணமான என்இஎமின் மதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11% குறைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மேலும், மற்ற மின்னணு பண வகைகளான பிட்காயினின் மதிப்பு 3.4 சதவீதமும், ரிப்பில்லின் மதிப்பு 9.9 சதவீதமும் கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் குறைந்துள்ளதாக தெரிகிறது.

டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மற்றொரு மின்னணு பணப்பரிமாற்ற மையமான எம்டிகோஸ் கடந்த 2014ம் ஆண்டில் சுமார் 400 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பணத்தை இதேபோன்ற ஹேக்கிங் செயல்பாட்டின் மூலம் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னணு பணம் என்றால் என்ன?

நமது ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களை போன்று மின்னணு பணம் எனப்படும் கிரிப்டோகரன்சி உலகளாவிய பண செலுத்துகை முறையாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு வகையான மின்னணு பணங்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம்.

மின்னணு பணத்தை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.

தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மின்னணு பணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவற்றை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
One of Japan's largest digital currency exchanges says it has lost some $534m (£380m) worth of virtual assets in a hacking attack on its network.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X