இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!
யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகள் பிப்ரவரி 7-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு ஏலத்தில் விடுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் காலந்தோறும் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கொத்து கொத்தாக கைது செய்து சிறைப்படுத்துகிறது.
அதேநேரத்தில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவியும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது அண்மையில் அம்பலமானது. ஆனாலும் இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.
நானி நடித்த ஷ்யாம் சிங்க ராய் படத்தில் வரும் உலகை அதிரவைத்த மறுஜென்மம் சாந்திதேவி கேஸ்-நடந்தது என்ன?
இதனிடையே தமிழகம், ஈழத் தமிழ் மீனவர் பிரச்சனையை சர்வதேச விவகாரமாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக அமெரிக்கா, சீனா தூதர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இலங்கைக்கான சீனாவின் தூதரை யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் டக்ளஸ் தேவானந்தா அழைத்து சென்றார்.
இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்தை ஏற்படுத்தக் கூடியது எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. இந்த நிலையில் தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலம் விடுவது என முடிவு செய்திருக்கிறது ராஜபக்சேக்கள் அரசு. இந்த ஏலம் பிப்ரவரி 7-ந் தேதி முதல் நாட்களுக்கு நடைபெற உள்ளது.
பிப்ரவரி 7 ஆம் தேதி யாழ். காரைநகரில் 65 படகுகளும் பிப்ரவரி 8-ந் தேதி காங்கேசன்துறையில் 5 படகுகளும் பிப்ரவரி 9-ந் தேதி கிராஞ்சியில் 24 படகுகளும் பிப்ரவரி 10-ந் தேதி தலைமன்னாரில் 09 படகுகளும் பிப்ரவரி 11-ந் தேதி கற்பிட்டியில் 02 படகுகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பகிரங்கமாக ஏலம் விடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.