திமுக பிரமுகரை வீழ்த்திய சுயேட்சை.. முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவராகும் இளம் பெண்!
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட இளம்பெண் சிந்துலேகா வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக பிரமுகரை விட 246 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது
இதில் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் 22581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தமாக 27,003 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை.. உள்ளாட்சி இடைத் தேர்தல் ரிசல்ட்டை பாருங்கள்: வேட்பாளர் பெருமிதம்

5 பதவியிடங்கள்
இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்களும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்களில் 119 பதவியிடங்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் போட்டியின்றி நிரப்பப்பட்டன.

முடிவுகள் அறிவிப்பு
மேலும், ஒரு கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடம் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கும் 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கும் போட்டியிட யாரும் முன்வரவில்லை என்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 23 ஆயிரத்து 978 பதவியிடங்களுக்கு 79 ஆயிரத்து 433 பேர் போட்டியிட்டனர்.

சுயேட்சைகள் வெற்றி
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. . பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. வெற்றிக்கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இதனிடையே சுயேட்சைகளாக நின்ற பலர் தங்கள் செல்வாக்கால் வெற்றி பெற்றுள்ளனர்.

முடிச்சூர்
அப்படி வென்றவர் தான் இளம் பெ சிந்துலேகா. செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக சிந்துலேகா போட்டியிட்டார். இந்த நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சிந்துலேகா அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 246, வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் முடிச்சூர் ஊராட்சியில் தொடர்ந்து சுயச்சை வேட்பாளர்களே வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சாருலதா வெற்றி
இதனிடையே தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 21 வயது பெண் சாருலதா என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்று கொண்டார்.இளம்பெண் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.