பெண் தொழிலாளர்கள் அனைவரும் நலம்.. மாவட்ட ஆட்சியர் சமாதானத்தால் முடிவுக்கு வந்த போராட்டம்
காஞ்சிபுரம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள் நலமுடன் இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கூறியதை ஏற்று சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிக்குத் திரும்பினர். பல மணிநேரம் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தை சமாதானமாக பேசி முடிவுக்குக் கொண்டு வந்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் தங்கி இருந்த விடுதியில் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்துள்ளது. அந்த உணவை சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சில பெண்கள் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை.
தனியார் பள்ளி சுவர் இடிந்து விபத்து.. முழு காரணமே இவங்கதான்.. ஓ.பி.எஸ் பகீர் புகார்.. பரபர அறிக்கை!

ஃபுட் பாய்சன்
தரமற்ற உணவை சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்த பெண்கள் உள்ள வீடியோ வைரலானது. இதனையடுத்து கஸ்தூரி, ஐஸ்வர்யா என்ற இரண்டு பெண்களின் நிலை என்னவானது என்று பலரும் பதற்றமடைந்தனர்.

மறியல் போராட்டம்
நள்ளிரவு நேரத்தில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அனைவரும் குவிந்தனர். ஆயிரக்கணக்கான பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் பனியைப் பொருட்படுத்தாமல் விடிய விடிய சாலையில் அமர்ந்து விடுதி நிர்வாகத்திற்கு எதிராகவும் ஆலை நிர்வாகத்திற்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

சமரச பேச்சுவார்த்தை
இதனால் சென்னை - பெங்களூர் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் நிற்கின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டுவரும் பெண்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், இதில் சமரசம் எட்டப்படவில்லை.

பெண்கள் போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு சாலையில் இருக்கக்கூடிய புளியம்பாக்கம் என்ற இடத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், தாம்பரம் செல்லும் வழியில் உள்ள வடகால் எனும் பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள் குற்றச்சாட்டு
போராட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, எங்களைப் பல்வேறு பகுதியில் இருக்கும் விடுதிகளில் தங்கவைத்திருக்கிறார்கள். எங்களுக்கு முறையான உணவு, மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர். எங்களைக் கொத்தடிமை போல் நடத்தி வருகிறார்கள். சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் விடுப்பு கொடுக்க மறுக்கிறார்கள் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் குற்றம் சாட்டினர்.

வதந்திகளை நம்பாதீங்க
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறிய ஆட்சியர் ஆர்த்தி, சிகிச்சை பெற்றுவரும் பெண்களிடம் வீடியோ காலில் பேசினார். கஸ்தூரி, ஐஸ்வர்யா ஆகிய இரண்டு பெண்களும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டதாகவும் கூறினார். மாவட்ட ஆட்சியரின் சமாதானத்தை ஏற்றுக்கொள்ள பெண்கள் முன்வரவில்லை.

அடிப்படை வசதி உள்ளதா?
கெட்டுப்போன உணவு அளித்த விடுதி வார்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கூறியுள்ளார். ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் விடுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் சமாதானத்தை ஏற்க பெண்கள் மறுத்து விட்டதால் போராட்டம் நீடித்து வருகிறது.

முடிவுக்கு வந்த போராட்டம்
மாவட்ட ஆட்சியரின் சமாதானத்தை ஏற்ற பெண்கள் பல மணிநேரம் நடத்திய போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்கு திரும்பினர். இந்த பிரச்சனையை சரியான முறையில் கையாண்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வீண் புரளி பரவியதால் பெரிதாக வெடிக்கவிருந்த பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைத்த மாவட்ட ஆட்சியரை அனைவரும் பாராட்டினர்.