பெண் தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்பு...1 வாரம் சம்பளத்துடன் லீவு - 16 மணி நேரம் நடந்தது என்ன?
காஞ்சிபுரம்: உடல் நலம் மற்றும் மன உளைச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு ஒருவாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.சி கணேசன் கூறியுள்ளார். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஃபாக்ஸ்கான் நிறுவன பெண் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் தங்கி இருந்த விடுதியில் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்துள்ளது. அந்த உணவை சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சில பெண்கள் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை.
தரமற்ற உணவை சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மயக்கமடைந்த பெண்கள் உள்ள வீடியோ வைரலானது. இதனையடுத்து கஸ்தூரி, ஐஸ்வர்யா என்ற இரண்டு பெண்களின் நிலை என்னவானது என்று பலரும் பதற்றமடைந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அனைவரும் குவிந்தனர். ஆயிரக்கணக்கான பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் பனியைப் பொருட்படுத்தாமல் விடிய விடிய சாலையில் அமர்ந்து விடுதி நிர்வாகத்திற்கு எதிராகவும் ஆலை நிர்வாகத்திற்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு சாலையில் இருக்கக்கூடிய புளியம்பாக்கம் என்ற இடத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், தாம்பரம் செல்லும் வழியில் உள்ள வடகால் எனும் பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல ஆயிரக்கணக்கான பெண்களின் தொடர் போராட்டம் காரணமாக சென்னை - பெங்களூர் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நிற்கின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டுவரும் பெண்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், இதில் சமரசம் எட்டப்படவில்லை.
செய்தியாளர்களிடம் பேசிய பெண்கள், தங்களின் கோரிக்கைகளை முன் வைத்தனர். ஒவ்வொரு அறையிலும் 30 பேர் வரை தங்க வைக்கின்றனர். கொரோனா காலத்தில் கூட இந்த நிலை தான். சுகாதாரமான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதனால் இங்கு உணவருந்தவே பயமாக இருக்கிறது.
மருத்துவ தேவைகளுக்காகக் காப்பாளரிடம் சொன்னால் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. தங்கள் அவசர தேவைகளுக்காகச் சொந்த ஊர் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. தங்களைச் சந்திக்கப் பெற்றோர்கள் வரும் போது அவர்களை வெளியிலிருந்து பார்த்துப் பேசி விட்டு அப்படியே திருப்பி அனுப்பிவிடுகின்றனர்,விடுதி காப்பாளர்கள். ஒரு வாரமாக இந்த உணவு பிரச்னையால் எங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மூன்று நாள்களாகச் சிகிச்சைக்குச் சென்ற பெண்கள் தொழிற்சாலை வேலைக்கே வரவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்துக் கேட்டால் எங்களையே மிரட்டுகின்றனர். மேலும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்களில் விவரங்கள் தர மறுக்கிறார்கள். எனவே தான் போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென முடிவெடுத்தோம். அவர்களின் நிலை என்ன என்பது பற்றி வெளிப்படையாக எங்களுக்கு அறிவிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் ஆகியோர் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களுடன் வீடியோ கால் மூலம் பேச வைத்தார் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு பின் நலமுடன் உள்ளனர். வதந்திகளை பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
16 மணி நேரமாக போராட்டம் நீடித்ததை அடுத்து பெண் தொழிலாளர்களிடம் அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.சி கணேசன், பெண் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறினார். உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள் நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் கணேசன் கூறினார். உடல் நலத்தாலும் மன உளைச்சல் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள பெண் தொழிலாளர்களுக்கு ஒரு வார காலம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கணேசன் கூறினார். அமைச்சர்களின் சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு 16 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. பெண்கள் தங்களின் இருப்பிடத்திற்கு திரும்பிச் சென்றனர்.