ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.. தமிழக அரசு போட்ட ஆர்டர்
காஞ்சிபுரம்: தொழிலாளர்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே ஜெமின் கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கியிருந்த ஃபாக்ஸ்கான் ஊழியர்கள்கடந்த 16ஆம் தேதி உணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவு காரணமாக பாதிக்கப்பட்டனர். 159 தொழிலாளர்களுக்கு வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
தொடர்ந்து ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தங்கியிருந்த உணவு விடுதியில் தரமற்ற உணவு வழங்கிய விவகாரம் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலையில் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ,தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் 16 மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழக அரசு பேச்சுவார்த்தை
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக தொழில்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் தாமரைக்கண்ணன் ஆகியோர் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அரசு தரப்பில் நிபந்தனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள்
அதன் படி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் பணிபுரியும் சூழ்நிலைகளை மேம்படுத்தித் தர வேண்டும், தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்தித் தர வேண்டும், தேவையான இடவசதி, குளியலறை, கழிவறை, குடிதண்ணீர், காற்றோட்டமான அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் தொழிலாளர்கள் தங்கும் விடுதிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் உரிய தரச்சான்று பெற வேண்டும், தங்கும் இடத்திலேயே சமையலறை அமைத்து, தரமான உணவுகளை சமைத்து, அவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு விடுப்பு
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவசர நிமித்தம் காரணமாக விடுப்பு கேட்கும்போது வழங்க வேண்டும் எனவும், விடுப்பில் செல்லும் தொழிலாளர்களுக்கு மாற்றாக தேவையான தொழிலாளர்களை மனிதவள முகமைகள் செய்து தர ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசின் சார்பில் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தினர், தமிழ்நாடு அரசுத் தெரிவித்த அனைத்து ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களைத் தவறாமல் செயல்படுத்துவதாக தெரிவித்தனர்.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதி
பெண் தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும், மேலும் இந்நிறுவனத்தில் பணிபுரியும் 15,000 தொழிலாளர்களுக்குத் தினந்தோறும் உணவு வழங்கப்படுகிறது எனவும், அதனை ஒப்பந்ததாரர்கள் தரமாக வழங்குவதை இனி உறுதி செய்வதாகவும் தெரிவித்தனர். மேலும் தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகளை விரைவில் தொடங்கவிருப்பதாகவும் , இத்தொழிற்சாலையை இவ்விடத்திலேயே விரிவுபடுத்தி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் எனவும் உறுதியளித்தனர்.