ஜார்கண்ட் மாநில கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்டது எப்படி - வடக்கு மண்டல ஐஜி விளக்கம்
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த என்கவுண்டர் சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ஜார்கண்ட் மாநில காவல்துறையினரை என்கவுண்டர் செய்தது ஏன் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். காவல்துறையினரை கத்தியால் தாக்க முயன்றதை அடுத்தே தற்காப்புக்காக காவல்துறையினர் சுட்டனர் என்றும் ஐஜி கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி பகுதியில் மூதாட்டி ஒருவரிடம் வழிப்பறி செய்துவிட்டு இருங்காட்டுக்கோட்டை காட்டுப் பகுதியில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த வட மாநில வழிப்பறி கொள்ளையர்கள் இருவரில் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றும்,மற்றொருவரை இன்று கைது செய்தனர்.

இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ள வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் , காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியரான இந்திராணி என்ற மூதாட்டியிடம் வட மாநில வழிப்பறி கொள்ளையர்கள் ஞாயிறன்று அவர் கழுத்தில் அணிதிருந்த சுமார் 5 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.
அப்போது அப்பெண்மணி கூச்சலிட்டதன் பேரில் அருகிலிருந்த பொது மக்கள் கொள்ளயர்களை பிடிக்க முற்பட்டப்போது தங்களிடம் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டிவிட்டு தப்பிச் சென்று இருங்காட்டுக்கோட்டை பகுதியிலுள்ள ஏரி பகுதியில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவுள்ள காட்டுப் பகுதியில் தலைமறைவாக பதுங்கி இருந்தனர்.
அதையடுத்து பொதுமக்கள் இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்கு தெரிவித்ததன் பேரில்,காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி சத்யப்ரியா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கொள்ளையர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ஐந்து ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தியும் காட்டுப் பகுதியிலுள்ள அனைத்து வழிகளிலும் 10க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவும் பகலும் தொடர்ந்து தேடுதலில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
திங்கட்கிழமை காலை 7 மணி அளவில் ஒருவர் மட்டும் வெளியே வந்தார். அவரை கைது செய்தோம். அவர் பெயர் நைம் அக்தர் என தெரியவந்தது. மேலும் சிலர் அங்கு இருப்பதாக தெரியவந்ததால் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. பகல் ஒரு மணி அளவில் மற்றொரு நபரை அங்கிருந்த தனிப்படையினர் பிடிக்க முயன்றனர். அப்போது அவர், கத்தியால் காவல்துறையினரை தாக்கியுள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்த ஆய்வாளர் கிருஷ்ணகுமார், தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், அந்த நபர் உயிரிழந்தார். இறந்தவர் ஜார்க்கண்ட் மாநிலம் பாதூர் மாவட்டத்தைச் சேர்ந்த முர்தஷா ஷேக் என தெரியவந்தது. இவர்கள் ஏற்கெனவே 2 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். பலியான கொள்ளையனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது.
வழிப்பறி கொள்ளையர்களிமிருந்து மீட்க்கப்பட்ட தங்க நகை, துப்பாக்கி,தோட்டா,கத்தி,இரும்பு ராடூ போன்ற பயங்கர ஆயூதங்கள் மற்றும் அவர்கள் வைத்திருந்த பல வங்கிகளின் ஏ.டி.எம் கார்டூகள், ஆதார்,பான் கார்டூகளை காட்சிப்படுத்தினர். செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம் சகர டிஐஜி சத்திய பிரியா, இதே பகுதியில் சமீப காலங்களில் வழிப்பறி போன்ற இரண்டு குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளனர், அது குறித்து வழக்கு தற்போது ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் உள்ளது .
ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கு தொடர்பாக இவர்களுக்கு சம்பந்தம் இருக்கிறதா என்ற கோணத்தில் தற்போது விசாரணையை துரிதப்படுத்தி உள்ளோம் என தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், இவர்கள் நீண்ட நாட்களாக துப்பாக்கியை கையில் வைத்திருந்தாலும், சில இடங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டி வந்திருந்த நிலையில் நேற்று நடந்த கொள்ளை சம்பவத்தின் போது துப்பாக்கியைக்காட்டி மிரட்டியுள்ளனர்.
மேலும் காவல்துறையினர் சுட்டுக் கொன்ற போது அவர்களிடமிருந்து துப்பாக்கி,கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினரின் முழு விசாரனைக்கு பிறகே அனைத்து தகவல்களும் தெரிய வரும் என்றார்.
போலீசார் வடமாநில வழிப்பறி கொள்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தியப்போது வழிப்பறி கொள்ளையர்கள் பல வங்கிகளின் ஏ.டி.எம் கார்டுகள், பான் கார்டு ,ஆதார் கார்டுகளின் விவரங்கள் குறித்தும் கைது செய்யப்பட்ட கொள்ளையனிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.