மக்களை ஏமாற்றும் ஆட்சி இதுவல்ல.. எல்லா வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.. அமைச்சர் உறுதி
காஞ்சிபுரம்: நியாயமான கோரிக்கைகளைத் தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்றுவார் என்று குறிப்பிட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடந்த இந்த முகாமில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
புளியந்தோப்பு கட்டிட முறைகேடு: யாரா இருந்தா என்ன? பிளாக்லிஸ்ட் பண்ணுங்க.. அமைச்சர் அன்பரசன் பளீர்

தேர்தல் வாக்குறுதி
அப்போது பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், "தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் ரூ 2000 என்ற வீதத்தில் இரண்டு தவணையாக மக்களுக்கு நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் மகளிர் சுய உதவிக் குழு கடன், நகைக் கடன், வரும் முன் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம் என பல்வேறு மக்கள் பணிகளை அரசு செய்து வருகின்றது.

ஏமாற்றும் ஆட்சி இது இல்லை
நியாயமான கோரிக்கைகளைத் தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்றுவார். மற்றவர்களைப் போன்று மனுக்களைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றும் ஆட்சி இது இல்லை. அதனை நிறைவேற்றும் ஆட்சி, எந்த நம்பிக்கையோடு மக்களாகிய நீங்கள் இந்த ஆட்சியைக் கொண்டு வந்தார்களோ அந்த நம்பிக்கையை இந்த ஆட்சி நிறைவேற்றும். ஏழை எளிய மக்களின் வாழ்வு வளம் பெற அரசு நிச்சயமாகச் செயல்படும்.

ஒரே மாநிலம்
இந்தியாவிலேயே வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் அறிவித்துள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதற்காக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்து அந்த மாணவர்கள் படிக்கக் கூடிய அந்த கட்டணத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளது" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன்
இதையடுத்து வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பணி ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். இந்நிகழ்வில் வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.