வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற பேரறிஞர் அண்ணா புகைப்படம்.. குளறுபடியால் அதிர்ச்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் தொகுதியில் உள்ள நந்தம்பாக்கம் ஊராட்சியில் வாக்காளர் ஒருவரின் புகைப்படத்திற்கு பதில் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த குளறுபடிகளை உடனே சரி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு திமுக உள்ளிட்ட கட்சியினர் புகார் அளித்தனர்.

கடந்த 20ம் தேதி திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் வெளியிட்டது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், திருப்பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் போன்ற தொகுதிகளில் வாக்காளர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணியினை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுகவினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பெரும்புதூர் தொகுதியில் அடங்கிய நந்தம்பாக்கம் ஊராட்சி வாக்காளர் பட்டியலை கழகத்தினர் சரிபார்த்த போது பாகம் எண் - 109 தொடர் எண் 220-ல் வீரராகவன் என்ற வாக்காளர் பெயரும், அதற்கு நேராக மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது பற்றி மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் குன்றத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோரிடம் நந்தம்பாக்கம் கிளைக் கழகச் செயலாளர் வி.நாளியப்பன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். வாக்காளர் வீரராகவன் புகைப்படத்துக்கு பதில் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகைப்படம் எப்படி வெளியானது என்பது தெரியவில்லை. இது போன்ற வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை உடனே தேர்தல் ஆணையம் சரி செய்திட வேண்டும் என்று மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.