ரவுடிகளுக்கு உடந்தையாக "ரவுடியான" 2 போலீஸ்காரர்கள்.. படப்பை குணா வழக்கில் பகீர் திருப்பம்!
காஞ்சிபுரம்: தேடப்படும் குற்றவாளியான பிரபல ரவுடியான படப்பை குணாவுக்கு உடன் கூட்டு சேர்ந்து கடப்பஞ்சாயத்து செய்து வந்த மூன்று காவல்துறையினரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான இருவரை பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா . இவர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து அடிதடி என கொடிகட்டி பறக்கும் பிரபல ரவுடி ஆவார்.
இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மதுரமங்கலத்தைச் சேர்ந்த அன்னப்பன் என்பவரின் மகள் ரூபாவதியை கீரநல்லூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
வதந்தி பரப்பியதாக கைதான.. சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

பிரபல ரவுடி படப்பை குணா
இந்நிலையில் அண்ணப்பனுக்கு சொந்தமான காலிமனை பட்டாவை படப்பை குணா, அப்பு என்கின்ற போலீஸ் சதீஷ், காவல்துறையில் பணியாற்றும் வெங்கடேசன், சதீஷ்குமார் மற்றும் வெங்கடேசன் ஆகிய ஐந்து நபர்கள் ரூபாவதியை மிரட்டி வாங்கி சென்றதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் படப்பை குணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கர்ப்பிணிக்கு மிரட்டல்
இந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியான ரூபாவதி, மதுரமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது படப்பை குணாவிற்கு பெயில் எடுக்க வேண்டும் என மிரட்டி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் கடிதத்தில் ரூபாவதியிடம் கையெழுத்து வாங்கியதையடுத்து படப்பை குணா பெயில் பெற்று வெளியில் வந்தார். பெயிலில் வெளியே வந்த படப்பை குணா போலி கொரோனா சான்றிதழ் அளித்து தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார். கொரோனா சான்றிதழை ஆய்வு மேற்கொண்டு போலி சான்றிதழ் என கண்டறிந்த பெயில் வழங்கிய அதே நீதிபதி படப்பை குணாவுக்கு பெயிலை ரத்து செய்தார். அன்றிலிருந்து இன்று வரை படப்பை குணா தலைமறைவாக உள்ளார்.

ரவுடி மீது மீண்டும் புகார்
இந்நிலையில் ரூபாவதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் மறுபடியும் வெங்கடேசன், அப்பு என்கின்ற போலீஸ் சதீஷ், கம்மாள தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார், கனரா வங்கி தெருவை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சிலர் அத்துமீறி ரூபாவதியின் வீட்டுக்குள் நுழைந்து உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி ரூபாவதியை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கே தேடப்படும் குற்றவாளியான படப்பை குணா அங்கு இருந்தார் எனவும் கூறப்படுகிறது.

காவலர் ஒருவர் கைது
படப்பை குணா உட்பட 5 பேர் மீது கொடுத்த வழக்கில் அவர்களுக்கு சாதகமாக நீதிபதியிடம் சொல்லுமாறும் மிரட்டியதாகவும், தனது பச்சிளம் குழந்தையுடன் ஊரில் தங்க பயமாக இருக்கிறது எனவும், அச்சுறுத்தி மிரட்டி கொலை முயற்சி செய்த இரண்டு போலீஸ் உட்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூபாவதி புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் போலீசாரின் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சென்னை ஆயுதப் படையில் பணியாற்றும் காவலரான வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அப்பு என்கின்ற போலீஸ் சதீஷ், நடராஜ், வெங்கடேசன் மற்றும் படப்பை குணா உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரவுடிக்கு துப்பு கொடுத்த போலீஸ்
மேலும் போலீஸ் வெங்கடேசன் மற்றும் போலீஸ் சதீஷ் ஆகியோர் படப்பை குணாவுக்கு உடந்தையாக இருந்து போலீசாரின் ரகசிய தகவல்களை தெரிவித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபல ரவுடிக்கு உடந்தையாக இருந்த மூன்று போலீசில் ஒருவர் கைது செய்யப்பட்டு மற்ற இருவரை தலைமறைவாக உள்ள சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது