உங்கள் தொகுதியில் ஸ்டாலின்... திமுகவின் புதிய பிரச்சார முழக்கம்... 29-ம் தேதி முதல் சுற்றுப்பயணம்..!
சென்னை: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய முழக்கத்துடன் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்குகிறார்.
வரும் 29-ம் தேதி திருவண்ணாமலையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் ஸ்டாலின், 30 நாட்கள் வரை தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

4 நாட்களுக்கு ஒரு முறை சென்னை திரும்புவது போன்று அவரது பயணத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தல்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதலில் தொடங்கியது திமுக தான். கடந்த நவம்பர் 20-ம் தேதியே திருவாரூர் மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையை தொடங்கினார். அவரைத் தொடர்ந்து கனிமொழி உள்ளிட்ட 20 நிர்வாகிகள் இப்போது பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கோபாலபுரம் இல்லம்
இந்நிலையில் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாலின், வரும் 29-ம் தேதியன்று திருவண்ணாமலையில் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். இதற்கான அறிவிப்பை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் அவரே வெளியிட்டார். 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு நாள் என தேதி ஒதுக்கி கொடுத்துள்ளார் ஸ்டாலின்.

செய்தியாளர் வினா
இந்த பிரச்சார பயணத்தின் போது அனைத்து தரப்பு மக்களையும் தாம் சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் தங்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தன்னிடம் வழங்கலாம் எனவும் அறிவித்துள்ளார். இதனிடையே கடந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட நமக்கு நாமே பயணத்துக்கும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற முழக்கத்துடன் மேற்கொள்ள உள்ள பயணத்துக்கு என்ன வேறுபாடு என செய்தியாளர் ஒருவர் வினவினார்.

ஸ்டாலின் விளக்கம்
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், நமக்கு நாமே பயணம் என்பது குறிப்பிட்ட செக்டார்களை மட்டுமே பார்ப்பதற்கானது என்றும், உதாரணமாக நெசவாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், விவசாயிகள், எனக் கூறினார். ஆனால் இந்த முறை மேற்கொள்ளவுள்ள 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பயணமானது அனைத்து தரப்பினரையும் சந்திப்பதற்கானது என விளக்கம் அளித்தார்.