விஷமான உணவு...சென்னை-பெங்களூரு சாலையில் பல மணி நேரம் நடந்த போராட்டம் வாபஸ்
காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் பகுதியில் ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில், பணியாற்றி வரும் பெண் ஊழியர்கள் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்கள் நலமாக இருப்பதை அறிந்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்ரீ பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தொழிற்சாலைகள். ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள், செல்போன் மற்றும் லேப்டாப் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.
அதிகளவு தொழிற்சாலைகள் இப்பகுதியில் இருப்பதாக அருகில் இருக்கும் மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவு ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். பல தொழிற்சாலைகள் தங்களுடைய ஊழியர்களை தங்கள் சொந்த விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து அங்கு உணவுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருவது உண்டு. இதற்காக ஊழியர்களிடம் குறிப்பிட்ட தொகையை அந்த தொழிற்சாலை மாதம் தோறும் தொழிலாளர்கள் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளும் , இந்த நடைமுறை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
உழைத்ததற்கு ஊதியம் இல்லை! மறியல் செய்த 100 நாள் வேலை பணியாளர்கள்! ஸ்தம்பித்த திண்டிவனம் சாலை!

விடுதியில் தரமற்ற உணவு
திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் கிராமத்தில் அமைந்த தனியார் கப்பல் கல்லூரி வளாகத்தில் அமைந்த தனியார் விடுதியில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பெண் ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15ஆம் தேதி புதன்கிழமை மதிய உணவு சாப்பிட்டதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தனர்.

பெண்கள் மயக்கம்
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூவிருந்தவல்லி சுகாதாரத் துறையினர் வெள்ளவேடு காவல்துறையினர் அவர்களை மீட்டு பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் நேமம் அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக மயக்கம் போட்டு விழுந்ததில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளர்கள் போர்க்கொடி
இந்த நிலையில் தனியார் விடுதியிலேயே மருத்துவ முகாம் அமைத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு பெண் தொழிலாளர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மறுநாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனிடையே தரமற்ற உணவை கொடுத்து வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் ஏற்படுத்த காரணமான தனியார் விடுதி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் தொழிலாளர்கள் போர்க்கொடி தூக்கி விடுதி முன்பு உள்ள சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்தனர்.

போக்குவரத்து பாதிப்பு
பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் தனியார் விடுதியின் அலட்சியத்தால் பெண் தொழிலாளர்கள் உரிய நியாயம் வழங்க வேண்டும் என சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நீதி வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அதிகாலை சுமார் 4 மணி அளவில் தொடங்கிய மறியல் தொடர்ந்து 7 மணி வரை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பெண் தொழிலாளர்கள் போலீசாரின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நள்ளிரவு முதல் மறியல்
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக உணவு அளிக்க வேண்டும் என்பது குறித்து ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனிடையே உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் குறித்த நிலையை சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகம் தெரிவிக்காமல் வந்ததால் உடன் வேலை செய்யும் பெண்கள் பதற்றமடைந்தனர். சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையிலும் பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் அமர்ந்து நள்ளிரவு முதல் தர்ணா போராட்டம் நடத்தினர்.

ஸ்தம்பித்த போக்குவரத்து
நள்ளிரவில் இருந்து கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் 10 மணி நேரத்திற்கும் மேலாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊழியர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நள்ளிரவு தொடங்கி விடிய விடிய நடந்த போராட்டத்தால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது.

போராட்டம் வாபஸ்
எங்களுடன் பணியாற்றிய பெண்களின் கதி என்னவானது என்பது பற்றி தெரியாமல் அந்த இடத்தை விட்டு கலைந்து செல்லப்போவதில்லை என்று தெரிவித்த பெண்கள் சாலையில் அமர்ந்து போராடியதால் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்ட 8 பெண்களின் நிலை என்ன ஆனது என கவலையில் இருந்த சக ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் பணி புரிந்த குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரையும் வீடியோ கால் மூலம் சக ஊழியர்களிடம் பேச வைத்தனர்.பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பது தெரிந்ததும் சக ஊழியர்களின் பதட்டம் குறைந்தது. விடுதிகளில் தரமான உணவு வேண்டும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்திய பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாவட்ட ஆட்சியரின் சமாதான முயற்சியால் பத்து மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.