கன்னியாகுமரி அருமனையில் கிறிஸ்துமஸ் விழா- 2 ஏழைகளுக்கு விமரிசையாக இலவச திருமணம்
கன்னியாகுமரி: அருமனை கிறிஸ்தவ பொதுநல அமைப்பு சார்பில் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக 3 வது முறையாக இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி 2 ஏழை பெண்களுக்கு அனைத்து வித சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக கடந்த 3 ஆண்டுகளாக அருமனை கிறிஸ்தவ பொதுநல அமைப்பு சார்பில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இரண்டு ஏழை பெண்களுக்கு அனைத்து வித சீர்வரிசையுடன் இலவச திருமணத்தை நடத்தி வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா வருகிற 25-ந் தேதி கொண்டாடப்படும் நிலையில் அருமனை பகுதியில் உள்ள புண்ணியம் கிருஷ்ணா ஆடிட்டோரியத்தில் அமைப்பின் செயலாளர் டார்வின் கான்ஸ்டன் மற்றும் தலைவர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் இன்று திருமண விழாவும் சமய நல்லிணக்க விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருமணத்தின் போது மணமகள்கள் இருவருக்கும் 5 பவுன் தங்க நகை, ரூ50,000 வங்கி டெப்பாசிட் வழங்கப்பட்டது மேலும் திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு மணப்பெண், மணமகனுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கி ஊர் பொதுமக்கள் வாழ்த்திச் சென்றனர்.
