பாஜகவை குறை கூற யாருக்கும் அருகதை இல்லை.. திமுகவை சீண்டிய எம்எல்ஏ காந்தி!
நாகர்கோவில்: பாஜகவை குறை கூற யாருக்கும் அருகதை இல்லை என எம்எல்ஏ எம்.ஆர். காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த புத்தேரி பகுதியில் சட்டசபை மேம்பாட்டு நிதியிலிருந்து நிழற்குடை பாதை அமைக்கும் பணியை பாஜக சட்டசபை உறுப்பினர் எம்.ஆர். காந்தி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் சட்டசபை மேம்பாட்டு நிதியிலிருந்து நாகர்கோவிலுக்கு உள்பட்ட கிராமங்களில் பள்ளிக் கூடங்கள், விவசாயிகளுக்கு கட்டடங்கள், நிழற்குடைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு விவசாயிகளின் தரம் உயர்த்த பணியாற்றி வருகிறேன்.
உ.பி, ம.பியில் குழந்தைகள் இறப்பு விகிதம் ரொம்ப மோசம்.. பாஜக மறைக்கிறது.. விளாசிய ப. சிதம்பரம்!

முருகன் கோயில் தேரோட்டம்
மேலும் வேளிமலை முருகன் கோயில் தேரோட்டத்தின் போது நடந்த பிரச்சினைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பாஜகவிற்கு உரிமை இல்லை என தெரிவித்திருந்தார். அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பாஜக சட்டசபை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்து கோயில்களில் உள்ள தேரின் வடம் பிடித்து இழுக்க அனைவருக்கும் உரிமை உண்டு.

இந்து மதத்தை நம்பாதவர்கள்
ஆனால் இந்து மதத்தை நம்பாதவர்கள், இந்து ஆலயங்களுக்கு செல்லாதவர்கள், இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் இந்து கோயில் தேரை வடம் பிடித்து இழுக்கவும் தேரோட்ட நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்கவும் கூடாது. இதை ஏற்க முடியாது.

அறநிலையத் துறை
இந்து கோயில்களில் திருப்பணிகளுக்கும் கும்பாபிஷேகத்திற்கும் அன்னதானங்களுக்கும் இந்து அறநிலையத் துறையில் இருந்து வரும் நிதியே ஒதுக்கப்படுகிறது. தமிழக அரசு தனியே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார். ஒரு கோயில் விழாவுக்கு அமைச்சர் என்ற முறையில் தலைமை ஏற்பதை பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திராவிடக் கொள்கை
திராவிடக் கொள்கையை பின்பற்றும் திமுகவில் நிறைய பேருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. சபரிமலைக்கு மாலை அணிகிறார்கள், கோயில்களுக்கு செல்கிறார்கள். அப்படியிருக்கும் போது பொத்தாம் பொதுவாக இந்து மதத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் என பாஜக எம்எல்ஏ எப்படி முத்திரை குத்தலாம் என்ற கேள்வியை சமூகவலைதளவாசிகள் முன் வைக்கிறார்கள்.