• search
கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

'அந்த' மோடி மஸ்தான் வேலைகள்... எல்லாம் இங்கு பலிக்காது... போட்டு தாக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: தமிழை அழித்து ஒழிப்பதற்கு, சமஸ்கிருதத்தை - இந்தியைத் திணித்து, மதவெறியைத் திணிக்கலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அந்த மோடி மஸ்தான் வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் பலிக்காது என்று தனது பிரசாரத்தில் பேசினார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, ஆரல்வாய்மொழியில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், "உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறேன் என்றால் ஏதோ தேர்தலுக்காக மட்டும் உங்களைச் சந்திக்கின்ற ஸ்டாலின் நான் அல்ல, எப்போதும் எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் வாழ்வில் ஏற்படும் சுக துக்க நிகழ்ச்சிகளில் உரிமையோடு பங்கேற்கும் ஸ்டாலின் என்ற உரிமையோடு உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் எல்லாம் வெற்றி பெற வைக்க வேண்டும். நாகர்கோவில், கன்னியாகுமரி சட்டசபை மற்ரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல் ஏன் வந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.

Modi Masthan tricks will not work out in Tamilnadu says DMK chief MK Stalin

வசந்தகுமாரை ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் எல்லாம் தேர்ந்தெடுத்து அவரை டெல்லிக்கு அனுப்பி வைத்தீர்கள். அவர் டெல்லிக்குச் சென்று நாடாளுமன்றத்தில் எப்படி எல்லாம் குரல் கொடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் நிச்சயமாக நலம் பெற்று வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்ற செய்தி வந்தபோது அதிர்ச்சி அடைந்தோம். அதனால்தான் இந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல் வந்திருக்கிறது. எனவே அவர் விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்ற, அவருடைய வாரிசாக இருக்கும், அவருடைய அருமை மகன் விஜயகுமார் என்கிற விஜய் வசந்த் கை சின்னத்தில் வாக்களித்து சிறப்பான வெற்றியை தேடித் தரவேண்டும் என்று உங்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இயற்கை எழில் கொஞ்சும் ஆரல்வாய்மொழி. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி. நாஞ்சில் நாடு என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் நாகர்கோவில். இயற்கை துறைமுகத்தின் நகரமாக விளங்கி கொண்டிருக்கும் குளச்சல். இவ்வாறு பெருமைக்குரிய தொகுதிகளை சேந்திருக்கும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் எல்லாம் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான் உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன்.

இப்போது முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி ஊர் ஊராகச் சென்று கொண்டிருக்கிறார். ஊர்ந்து ஊர்ந்து போனவர், இப்போது ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார். இதை சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். நான் என்ன பாம்பா? பல்லியா? என்று கேட்பார். பாம்பு, பல்லிக்கு கூட விஷம் கம்மியாகத்தான் இருக்கும். ஆனால் துரோகத்திற்குத்தான் விஷம் அதிகமாக இருக்கும். அவர் யார் யாருக்கெல்லாம் துரோகம் செய்தார் என்பது உங்களுக்கு தெரியும்.

அவர் சில நாட்களுக்கு முன்பு இந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தபோது அவர் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். அதாவது, 'இந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வைக் கூட தேர்ந்தெடுக்கவில்லை. அதனால்தான் திட்டங்கள் எல்லாம் இந்த மாவட்டத்திற்கு வரவில்லை" என்று பேசியிருக்கிறார்.

நினைத்துப் பாருங்கள். அவர் முதலமைச்சர். அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்காக இந்த மாவட்டத்தையே புறக்கணித்தவரை நீங்கள் புறக்கணிக்க வேண்டாமா?

அவரே பிரச்சாரத்திற்கு வந்த போது வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவரைக் கூட நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அதனால்தான் உங்களுக்கு வேண்டிய திட்டங்கள் கிடைக்கவில்லை என்று வாய் கூசாமல் சொல்லி இருக்கிறார் என்றால் அவரை முதலமைச்சராக உட்கார வைக்கலாமா?

வாக்களித்த மக்களுக்கு ஏதாவது செய்து இருக்கிறாரா? அந்தத் தொகுதிக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? இதைவிட கேவலம் என்னவென்றால் அவரைத் தேர்ந்தெடுத்த எடப்பாடிக்கே எதுவும் செய்யவில்லை.

நான் அந்த தொகுதிக்குச் சென்றிருந்தேன். நீங்கள் இப்போது அவர் பெயரைச் சொல்லாதீர்கள் என்று சொன்னது போல, நான் எடப்பாடிக்கு சென்றபோது எடப்பாடி பழனிசாமி என்று சொல்லாதீர்கள். அது எங்கள் ஊருக்கு கேவலம் என்று சொன்னார்கள். அது தான் அங்கு இருக்கும் நிலை.

அதுமட்டுமல்ல, இங்கு டெல்லி பிரதிநிதி ஒருவர் இருக்கிறார். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரம். அவர் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் தொழில்ரீதியாக ஒரு பார்ட்னராக இருக்கிறார். அவருக்கு குமரி முதல் கம்போடியா வரை சொத்து இருக்கிறது. ஆனால் குமரி மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறாரா?

ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர். சசிகலாவால் டெல்லி பிரதிநிதி பொறுப்பை ஏற்றவர். சசிகலாவால் உயர்த்தி வைக்கப்பட்டவர், இப்போது பழனிசாமியிடம் உட்கார்ந்திருக்கிறார். இந்த தேர்தலுக்கு பிறகு அங்கேயும் துரோகம் செய்துவிட்டு பா.ஜ.க.வில் சேரப்போகிறார். அது உறுதி. அது நடக்கிறதா? இல்லையா? என்று பாருங்கள்.

அவரோடு கூடவே இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகி கிருஷ்ணகுமார், அவரைப் பற்றி ஆடியோ வெளியிட்டாரா? இல்லையா? அவர் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றினாரா? இல்லையா?

கடந்த முறை நான் தக்கலைக்கு வந்தபோது, மத்திய அரசு ஒரு புதிய பன்னாட்டு மாற்று முனையத்தை அமைக்கப் போகிறது. அதனால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நம்முடைய பேராயர்கள் வந்து என்னிடத்தில் முறையிட்டார்கள். 'தி.மு.க. ஆட்சியில் நிச்சயமாக உறுதியாக அதற்கு நாங்கள் அனுமதி தர மாட்டோம்' என்று அப்போது உறுதி அளித்துவிட்டுச் சென்றேன்.

Modi Masthan tricks will not work out in Tamilnadu says DMK chief MK Stalin

அதற்குப்பிறகு குமரிக்கு முதலமைச்சர் வந்தார். அவர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். அவ்வாறு எந்த சரக்கு பெட்டக முனையத்தையும் அமைக்க போவதில்லை. எனவே ஸ்டாலின் பொய் சொல்லி ஏமாற்றுகிறார். யாரும் நம்பாதீர்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். மிஸ்டர் பழனிசாமி... நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் கையில் ஆதாரம் இருக்கிறது. நான் கருணாநிதியின் மகன். எதையும் புள்ளிவிவரத்தோடுதான் பேசுவேன்.

20.02.2021 அன்றைக்கு பத்திரிகையில் அதிகாரபூர்வமான மத்திய அரசின் துறைமுகத்துறை விளம்பரத்தில் தெளிவாக இருக்கிறது. அதாவது மார்ச் 20-க்குள் யாராவது விண்ணப்பிக்க வேண்டி இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசின் மூலமாக விளம்பரம் தரப்பட்டிருக்கிறது.

இது கூடத் தெரியாத ஒரு முதலமைச்சர் இருக்கிறார். எனவே அப்படிப்பட்ட முதலமைச்சர் ஆளத்தகுதி உள்ளவரா? என்பதை நீங்கள்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர் இப்போது இல்லை என்று சொல்வார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு மாற்றி சொல்வார். ஆனால் நான் உறுதியாகச் சொல்கிறேன், நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். இதற்கு அனுமதி தர மாட்டோம். இது உறுதி.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நம்மை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன். அவரை பொன். ராதாகிருஷ்ணன் என்று சொல்லக்கூடாது; பொய் ராதாகிருஷ்ணன் என்றுதான் சொல்லவேண்டும்.

2014-இல் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். மத்தியில் அமைச்சராக இருந்தார். ஆனால் இந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இம்மி அளவு நன்மை செய்திருக்கிறாரா? 2014-இல் நின்று வென்று எம்.பி.ஆகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார். அதற்கு பிறகு 2019-இல் நின்று தோற்றுப் போனார். இப்போதும் நிற்கிறார். இப்போது தோற்றுத்தான் போகப்போகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் 2014-இல் தேர்தலில் நின்றபோது வாய்க்கு வந்தபடியெல்லாம் உறுதிமொழி கொடுத்தார். ஆனால் எந்த உறுதிமொழியையாவது அவர் நிறைவேற்றியிருக்கிறாரா?

அவர் சொன்ன உறுதிமொழிகளில் சிலவற்றைச் சொல்கிறேன். குளச்சலில் வர்த்தக துறைமுகம், கன்னியாகுமரி ஸ்மார்ட் சிட்டியாக ஆக்கப்படும், தொழில் பூங்கா உருவாக்கப்படும், கடல்சார் நவீன விளையாட்டுடன் கூடிய சாய் சப் செண்டர், கன்னியாகுமரியில் விமான நிலையம், இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம், சித்த மருத்துவ பல்கலைக்கழகம், விவசாயக் கல்லூரி, புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை, அனைத்து கடற்கரை மற்றும் மலையோர இடங்களும் சுற்றுலா மையமாகும், ராஜாக்கமங்கலம் தெக்குறிச்சி கடற்கரை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும், கல்லுக்கூட்டம் நீர்சுனை சுற்றுலாத் தலமாகும், பெருஞ்சாணி அணையில் படகு சவாரி, முட்டம் சங்குத்துறை மற்றும் சொத்தவிளை கடற்கரை மேம்படுத்தப்படும், அதிநவீன அறிவியல் மையம், அருங்காட்சியகம், மணக்குடி காயலில் நவீன படகு போக்குவரத்து தடுப்பணைகள். இதில் ஒன்றையாவது நிறைவேற்றி காட்டியிருக்கிறாரா? அவர் மத்திய அமைச்சராக ஐந்து வருடம் இருந்திருக்கிறார்.

அவருடைய கட்சிதான் கடந்த ஏழு வருடங்கள் ஆட்சி பொறுப்பில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர்களில் ஒரு முக்கிய தலைவராக இருக்கிறார். ஆனால் இந்த மாவட்டத்திற்கு என்ன செய்திருக்கிறார்? அதனால் அவருக்கு வாக்களிப்பது 'சுத்த வேஸ்ட்' என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர் இனிமேல் தேர்தலைப் பற்றிச் சிந்திக்காத வகையில் நம்முடைய வேட்பாளருக்கு பெருவாரியான வாக்கினை நம்முடைய விஜய் வசந்த்திற்கு வழங்கிட வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல இன்றைக்கு பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவ்வாறு வந்து வழக்கம்போல பொய் சொல்லிவிட்டுப் போகப்போகிறார். அவர் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வருகிறாரோ அந்த அளவிற்கு பா.ஜ.க.வுக்கு வாக்குக் குறையப் போகிறது. அதுதான் நடக்கப்போகிறது.

அவர் ஒவ்வொரு முறை வரும்போதும் தமிழக மீனவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை உருவாக்கி கொடுத்துவிட்டதாகப் பேசிவிட்டுச் செல்கிறார். இதுதான் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று சொல்வார்கள் அல்லவா, அப்படிப்பட்ட பொய்.

மோடி ஒரு காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது, இந்தியாவில் ஆண்மையுள்ள பிரதமர் இல்லை என்று நம்முடைய மன்மோகன் சிங் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி பேசினார். அதனால்தான் அண்டை நாடு நம்மை சீண்டி பார்க்கிறது என்று குறை சொன்னார்

Modi Masthan tricks will not work out in Tamilnadu says DMK chief MK Stalin

அவ்வாறு குறை சொன்னார் அல்லவா, அவர் 2014-இல் பிரதமராக பொறுப்புக்கு வந்தார். அவர் பொறுப்புக்கு வந்த பிறகு மீனவர்களைக் காப்பதற்காக கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார். 2014-ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி இந்தியா - இலங்கை அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். 7 வருடம் ஆகிவிட்டது. அதில் இதுவரைக்கும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இன்றைக்கும் தொடர்ந்து மீனவர்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. மீனவர்களை மிரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளைப் பறிப்பது, இவ்வாறு அராஜகங்கள் அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. பா.ஜ.க. அரசோ, மோடியோ இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அதனைத் தட்டிக் கேட்கப் போவதுமில்லை.

எனவே, தமிழகத்தில் நம்முடைய கழக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு மீனவர்கள் உரிமையை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுப்போம் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதேபோல சிறுபான்மை சமுதாயத்தினருக்கு இந்த ஆட்சி - இந்த ஆட்சியை ஆட்டி வைத்திருக்கும் பா.ஜ.க. ஆட்சி பல கொடுமைகளைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறது. அதில் முக்கியமாக, குடியுரிமைத் திருத்தச் சட்டம் - சிஏஏ. இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். அப்போது நிறைவேற்றிய போது அதை எதிர்த்து தி.மு.க. மற்றும் மற்ற கட்சிகள் அனைத்தும் வன்மையாகக் கண்டித்து எதிர்த்தது.

ஆனால் மாநிலங்களவையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்களும், அதேபோல அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ், ஆகியோரும் சேர்ந்து அந்த சட்டத்தை ஆதரித்து ஓட்டுப்போட்ட காரணத்தினால் அந்த சட்டம் அமலுக்கு வந்தது. இப்போது அந்த சட்டத்தை எதிர்ப்போம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். இது ஒரு பச்சைத் துரோகம். மக்களை ஏமாற்றுவதற்காக அவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த சட்டம் சிறுபான்மைச் சமுதாயத்தைக் கொச்சைப்படுத்தும் முயற்சியில் இருக்கிறது. இதற்கு அ.தி.மு.க. தலையாட்டுகிறது. அதனால் இந்தச் சட்டத்தை தொடக்கத்தில் இருந்தே திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்த்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருக்கும் மக்களிடத்தில் நேரடியாக வீடு வீடாக சென்று நானே கையெழுத்து வாங்கினேன். இரண்டு கோடி கையெழுத்துக்களை வாங்கி டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவரிடம் கொடுத்தோம்.

சட்டமன்றத்தில் இதை எதிர்த்துப் பேசினோம். ஆனால் இதனால் எந்த தீமையும் இல்லை என்று வாதிட்டார் பழனிசாமி. நாங்கள் என்னென்ன தீமை இருக்கிறது? என்ன கொடுமை இருக்கிறது? இதனால் சிறுபான்மை சமுதாயத்தினர் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்? என்பதைத் தெளிவாக சட்டமன்றத்தில் எடுத்து பேசினோம். ஆனால் அது பற்றி எந்தக் கவலையும் அவர் படவில்லை. அவ்வாறு சொன்னவர்கள் இப்போது இந்தச் சட்டத்தை எதிர்ப்போம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இதைத்தான் இங்கு இருக்கும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.

அதேபோல நாம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறோம் என்று நம்முடைய தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். எப்போதுமே தி.மு.க.வைப் பொறுத்தவரையில், உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் - சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் - நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதை முதன் முதலாக தேர்தல் களத்தில் இறங்கிய 1957-இல் இருந்து, நாம் ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கை தயாரித்து மக்களிடத்தில் சொல்வது வழக்கம்.

மீனவ சமுதாயத்தினரின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்காக, மீனவ சமுதாயத்தினரை கடல்சார் பழங்குடியின மக்கள் என்று பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு தி.மு.க. ஆட்சி நிச்சயம் முயற்சி செய்யும். மீனவர்களுக்கு 2 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும். மீனவர் நலனை பாதுகாத்திட தேசிய மீனவர் நல ஆணையம் அமைத்திட மத்திய அரசை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும். மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை 8000 ரூபாயாகவும், மழைக்கால நிவாரண உதவித் தொகை 5,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். விசைப்படகிற்கு மானிய விலை டீசல் 2000 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

கட்டுமரம், நாட்டுப்படகு, ஃபைபர் படகு ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருள் அளவு 400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். தேவைப்படுகின்ற கடற்கரையோர மீனவர் கிராமங்களில் கடல் அரிப்பினைத் தடுத்து தூண்டில் வளைவு தடுப்பு சுவர் அமைத்து தரப்படும். உள்நாட்டு மீனவர்கள் பரிசல் மற்றும் வலைகள் வாங்குவதற்காக 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எஃப்.ஆர்.பி-ஐ.பி. கட்டுமரம் போன்ற படகுகளில் மீன் பிடிப்பவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட ஐஸ்பெட்டிகள் மீண்டும் வழங்கப்படும். மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கும் ஐஸ்பெட்டிகள் வழங்கப்படும்.

பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும். மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். அரசு வேலை வாய்ப்புகளில் இருக்கும் 30 சதவிகித இட ஒதுக்கீட்டை 40 சதவிகிதமாக உயர்த்தி வழங்குதல். கூட்டுறவு வங்கிகளில் பெற்ற மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும். சிறப்பு தாய் சேய் நலத் திட்டம் மூலமாக கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி வசதிகள்.

விலைவாசியை குறைக்க, பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும். டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும். சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும். பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.

மாணவர்கள் நலனை அடிப்படையாக வைத்து அவர்கள் கல்விக்காக வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன் ரத்து செய்யப்படும். அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்களே நியமிக்கப்படுவார்கள். நீர்நிலைகள், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் கண்காணிக்கவும் 75,000 இளைஞர்கள் அந்த பணிகளில் அமர்த்தப்படுவார்கள். சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களை பாதுகாக்கும் பணிகளில் 75,000 சாலை பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழகம் முழுவதும் அறநிலையங்கள் பாதுகாப்பில் 25,000 இளைஞர்கள் திருக்கோயில் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

மக்கள் நலப் பணியாளர்களாக 25,000 மகளிர் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். கொரோனா காலத்தில் நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் வெறும் 1,000 ரூபாய் வழங்கினார்கள். மீதமிருக்கும் 4,000 ரூபாய் நாம் ஆட்சி பொறுப்பேற்று ஜூன் 3-ஆம் தேதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இப்போது கொரோனா இரண்டாவது அலை வந்துவிட்டது. எனவே கூட்டமாக இருக்கின்ற இடங்களில் மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி வந்து விட்டது. நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். சிலர் அந்த தடுப்பூசிக்கு பயப்படுகிறார்கள். ஆனால் அவ்வாறு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனவே தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். உரிமையைக் காப்பதற்கு உதய சூரியன், உயிரைக் காப்பதற்கு மாஸ்க். மறந்துவிடாதீர்கள். அதில் கவனமாக இருக்குமாறு உரிமையோடு அன்போடு பாசத்தோடு உங்கள் அண்ணனாக தம்பியாக கேட்டுக்கொள்கிறேன். மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். இப்போது பொதுவான உறுதிமொழிகளில் வாக்குறுதிகளில் சிலவற்றை நான் இங்கு பட்டியல் போட்டு சொன்னேன்.

இவர்களுக்கு வாக்குக் கேட்கின்ற அதேநேரத்தில் எனக்கும் உங்களிடத்தில் வாக்குக் கேட்கப் போகிறேன். நானும் ஒரு வேட்பாளராகத்தான் வந்திருக்கிறேன். சென்னை கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக நிற்கிறேன். ஆனால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறேன். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர்.

இந்த தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்காக நடக்கின்ற தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய மானத்தை மரியாதையை காப்பாற்றுகின்ற தேர்தல். மத வெறி பிடித்திருக்கும் பாஜகவிடமிருந்து நம்முடைய நாட்டை காப்பாற்றுகின்ற தேர்தல். எனவே ஒரு அ.தி.மு.க. வேட்பாளர்கூட வெற்றி பெறக் கூடாது. இவ்வாறு குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம், அவர்கள் வெற்றி பெற்றால் அ.தி.மு.க.வாக இருக்க மாட்டார்கள், பாஜக-வாகத்தான் இருப்பார்கள். அதற்கு உதாரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களில் நாம் வெற்றி பெற்றோம். ஒரே ஒரு இடத்தில் அதிமுக வெற்றி பெற்றது - ஓ.பி.எஸ். மகன்.

அவர் இப்போது அ.தி.மு.க. எம்.பி.யாக அல்லாமல் பாஜக எம்.பி.யாக இருக்கிறார். அவருடைய லெட்டர் பேடில் அவருடைய கட்சித் தலைவர் படம் இல்லாமல், மோடியின் படம்தான் இருக்கிறது. எனவே ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அவர் பாஜகதான். பாஜக வரப்போவதில்லை. அவர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையவே முடியாது. இது திராவிட மண். நம்முடைய தமிழை அழித்து ஒழிப்பதற்கு, சமஸ்கிருதத்தை - இந்தியைத் திணித்து, மதவெறியைத் திணிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த மோடி மஸ்தான் வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் பலிக்காது.

எனவே, வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் நம்முடைய வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டு, வாய்ப்புத் தந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி விடைபெறுகிறேன்" என்று அவர் பேசினார்.

English summary
DMK chief MK Stalin speech in kanniyakumari
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X