கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கன்னியாகுமரி தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. உறுதியாக கூறும் வசந்தகுமார்

கன்னியாகுமரி: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில், 3,00000 வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெறுவேன் என்று, அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள ஹெச்.வசந்தகுமார் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும், வசந்தகுமார் அளித்த நேர்காணலை பாருங்கள்:

Will win by 3 lakh votes, says Congress candidate for Kanyakumari H.Vasanthakumar

கே: நான்குநேரி சட்டசபை தொகுதி உறுப்பினராக உள்ள நீங்கள், மீண்டும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதற்கு என்ன காரணம்?

பதில்: நாங்குநேரி சட்டசபை தொகுதியை பொறுத்த அளவில் 90 சதவீதம் வளர்ச்சி பணிகளை முடித்துவிட்டேன். அந்த தொகுதி தமிழகத்திற்குள் இருப்பது. அகில இந்திய அளவில் நான் செல்லும்போது இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். கன்னியாகுமரி மாவட்டம் சர்வதேச அளவிலான சுற்றுலாத் தளம். அதேபோன்று விவசாய பொருட்களும் இங்கு நன்கு கிடைக்கும். அதற்கு தனி கவனம் செலுத்தி உலக அளவில் குமரி மாவட்டத்தை பிரகாசமாக தெரியுமளவுக்கு மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கு போட்டியிடுகிறேன். குமரி மாவட்டத்தில் தான் எனது சொந்த ஊர் உள்ளது. பணம் இருந்தால் தான் அரசியலில் சேவையாற்ற முடியும். எனவே தான் உழைத்து சேர்த்த, பணத்தை அரசியலில் இறுதிகாலத்தில் என் வாழ்நாள் முடியும் வரை குமரி மாவட்ட மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று நினைத்து இங்கு போட்டியிட தேர்ந்தெடுத்துள்ளேன்.

கே: கன்னியாகுமரி தொகுதியில் பிரத்யேகமாக உள்ள பிரச்சினை என்ன?

பதில்: குடியிருக்கும் மக்களை வனத்துறையினர் தொல்லைக்குள்ளாக்குவது, ரப்பர் தொழிலை நம்பி இருந்த லட்சக்கணக்கான மக்கள் தொழிற்சாலை மூடப்பட்டதால் சிரமப்படுகிறார்கள். அதேபோன்று முந்திரிக்கொட்டை தொழில் லட்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தது. ஆனால் இப்போது எதுவுமே இல்லாத சூழல் எழுந்துள்ளது. தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே ரப்பர் தொழிற்சாலையை மேம்படுத்துவது, வெளிநாட்டிற்கு அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான செயல்பாடுகளை ஊக்கப்படுத்த வேண்டும், சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பது, இவைதான் எனது முக்கியமான நோக்கம்.

கே: இந்த தொகுதிக்கு என்று பிரத்தியேகமாக உங்களின் முன்னுரிமை என்ன?

பதில்: கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரப்பர் தான் வாழ்வாதாரமாக இருந்தது. ஆனால் மோடி அரசு ரப்பரை இறக்குமதி செய்தது. மத்திய அரசு ரப்பர் தொழிலை அழித்துவிட்டது. ரப்பர் தொழிலை மீட்டெடுப்பதே எனது முதல் முன்னுரிமை.

கே: 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல நலத்திட்டங்கள் கொண்டு வந்துள்ளேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாரே?

பதில்: பிரதமர் நரேந்திரமோடி, கன்னியாகுமரி பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தபோது இந்தத் திட்டங்கள் குறித்து எதுவுமே தெரிவிக்கவில்லை. மேலும் 40,000 கோடி திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளதா? என்ற தகவலும் இல்லை. வெறும் கையில் முழம் போட்டால் எப்படி? நெடுஞ்சாலை துறை இணை அமைச்சராக இருப்பவர் பொன்.ராதாகிருஷ்ணன். எனவே அவருக்கு மக்களுக்கு பணி செய்வதற்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மொத்தமே இரண்டு பாலங்களைத்தான் கட்டியுள்ளார். வேறு எதையும் சாதனையாக அவரால் சொல்ல முடியவில்லை.

Will win by 3 lakh votes, says Congress candidate for Kanyakumari H.Vasanthakumar

கே: வசந்தகுமார் நிறைய தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். எனவே சனி, ஞாயிறுகளில் மட்டுமே அவர் உங்களுக்கு எம்பியாக இருக்க முடியும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் மக்களிடம் பிரச்சாரம் செய்கிறாரே?

பதில்: இப்போது உலகம் சுருங்கிவிட்டது. செல்போனில் உலகம் முழுக்க தொடர்பு கொள்ள முடியும். நான் எந்த ஊரில் இருந்தாலும், நிமிடத்துக்கு நிமிடம் என்னுடைய தொழிலை கண்காணிக்க முடியும். நான் அலுவலகத்தில் தான் இருக்க வேண்டும் என்பதே கிடையாது. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வந்துவிட்டது. மேலும், எனது வீட்டிலேயே இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகிய மூவரும் எனது தொழிலை கவனித்து கொள்கிறார்கள்.

கே: வர்த்தக வர்க்கத்தை சேர்ந்த வசந்தகுமார், பணக்காரர். எனவே, அவருக்கு ஏழைகளின் கஷ்டம் தெரியாது என்ற விமர்சனம் வருகிறதே, அது தொடர்பாக உங்கள் கருத்து?

பதில்: இப்படி கூறுவதில் அர்த்தமே கிடையாது. நான் 70 ரூபாய் சம்பளத்தில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். எப்படி வேலை செய்ய வேண்டும் என்ற தொழிலை நான் கற்றுக் கொண்டேன். அதன்பிறகு வீடு வீடாகச் சென்று சீட்டு போட்டு வசூல் செய்து சிறிது சிறிதாக ஆரம்பித்து இந்த அளவுக்கு நான் வளர்ந்துள்ளேன். அதற்கு அடிப்படை காரணம் எனது கமிட்மென்ட். நான் என்ன செய்வேனோ, அதைத்தான் சொல்வேன். சிறிது சிறிதாக சேர்த்துதான் நான் கம்பெனியை ஆரம்பித்து முன்னேற்றி உள்ளேன்.

கே: பொன்.ராதாகிருஷ்ணன் இந்த தொகுதிக்கு செய்ய மறந்த திட்டங்கள் என்ன?

பதில்: கன்னியாகுமரி தொகுதியில், இஎஸ்ஐ மருத்துவமனை வந்திருக்க வேண்டும், ஆனால் அதைக் கொண்டு வரவில்லை. அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்தியிருக்க வேண்டும், அதையும் செய்யவில்லை. திருநெல்வேலி, தஞ்சாவூர் நகரங்களில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். ஆனால், நாகர்கோவிலில் ஏன் அதைச் செய்யவில்லை? 2000மாவது ஆண்டில் நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா ஆரம்பிக்கப்படும் என்று முரசொலி மாறனால் அறிவிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் கிடந்தது. கருணாநிதியிடம் தினமும் சென்று பேசி, 2006- 2011ல் அதை கொண்டு வர முயற்சி செய்தேன். நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நிறுவனங்கள் வராவிட்டாலும், 500 முதல் 600 பேர் பணியாற்றும் அளவுக்கு அங்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு சாத்தியப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக நதிகளை இணைத்தது வசந்தகுமார் தான். குமரி மாவட்டத்தில் அதிக கல்லூரிகளும், படித்தவர்களும் உள்ளனர். எனவே பல்கலைக்கழகம் இங்கு வந்தால் ஆய்வு படிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.

Will win by 3 lakh votes, says Congress candidate for Kanyakumari H.Vasanthakumar

கே: துறைமுகம் வேண்டாம் என்று வசந்தகுமார் கூறுகிறார் என்ற விமர்சனத்திற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: துறைமுகம் வேண்டாம் என்று கூறவில்லை. மீன்பிடி துறைமுகம் வேண்டும் என்று தான் நான் கூறுகிறேன். உலக நாடுகளில் இருந்து வரக்கூடிய கப்பல்களில் இருந்து சரக்குகளை இறக்கி கன்டெய்னரில் கொண்டு செல்வதற்குத்தான், மோடி அரசு, குமரி மாவட்டத்தில், துறைமுகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்காது. அதானி போன்ற ஒரு முதலாளி அந்த தொழிலில் வந்து புகுந்து கொள்வார். உள்ளூர் மக்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் கிடைக்காது.

ஒக்கி புயலின் போது பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களுக்கு நேரில் வந்து ஆறுதல் சொல்ல பிரதமர் நரேந்திர மோடி வரவில்லை. கன்னியாகுமரியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி ஒரு அறையில் நாலைந்து பேரிடம் பேசி விட்டு மோடி கிளம்பிவிட்டார். ஆனால், ராகுல் காந்தி அப்படி இல்லை. பொதுமக்களுடனும், பெண்களுடனும் பேசி, நான் உங்களுடன் இருக்கிறேன் என்று ஆறுதல் அளித்தார். மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், யார் முதலில் நிற்கிறார்களோ அவர்களுக்குத்தான், தனி மரியாதை கிடைக்கும்.

கே: கன்னியாகுமரி தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுக்கு மீனவர்கள் வாக்குகள் முக்கியமானவை. காங்கிரசுக்கு அவர்கள் ஆதரவு அளிக்கிறார்களா?

பதில்: மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளார். இதனால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கே: காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான கன்னியாகுமரி, கடந்த முறை பாஜகவுக்கு சென்றுவிட்டது. மக்கள் ஆதரவு மாறிவிட்டதாக கருதுகிறீர்களா?

பதில்: கடந்த முறை ஐந்து கட்சிகளின் கூட்டணியுடன்தான் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். ஆனால் மக்கள், குறைபாடுகளை சொல்லப்போனால் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி திருப்பி அனுப்பி விடுவார். நானோ, வேலைவாய்ப்பு முகாம்களை சொந்தமாக நடத்தி வருகிறேன். வாலிபால், கிரிக்கெட் உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளேன். எந்த ஒரு கூட்டணியும் இல்லாமல், நான் காங்கிரஸ் சார்பில் தனியாக நின்று கடந்த முறை இரண்டாவது இடத்தைப் பிடித்தேன். ஆனால், இம்முறை, திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளும் எனக்கு ஆதரவளிக்கின்றன. எனவே அதிக வாக்கு வித்தியாசத்தில், அதுவும் சுமார், 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.

அரசியலில் தூய்மையானவர், சொந்த பணத்தை மக்களுக்காக செலவிடக்கூடியவர், நல்லவர் எனவே எனக்கு வாக்களியுங்கள் என்று தான் நான் கேட்கிறேன். ஏற்கனவே இதை நாங்குநேரியில் நிரூபித்துள்ளேன். இவருக்கு ஓட்டு போடலாம்.. நல்லவர்.. சொந்த காசில் கூட ஏதாவது மக்களுக்கு செய்வார் என்ற எண்ணம் என் மீது மக்களுக்கு உள்ளது. இவ்வாறு நம்பிக்கையுடன் தெரிவித்தார், வசந்தகுமார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X