முதல்வர் ஸ்டாலின் வந்த நேரத்தில் வீடுகளில் கறுப்புக்கொடி.. பரபரத்த கரூர்.. பின்னணி என்ன?
கரூர் : தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கரூர் சென்ற நிலையில், கரூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று நடைபெறும் அரசு விழாவில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அடேயப்பா.. அடுத்த 3 நாட்களுக்கு செம மழைதான்.. வெளியான அசத்தல் அறிவிப்பு.. எங்கனேன்னு பாருங்க
இதற்கிடையே, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் கோரிக்கைக்கு செவிமடுக்காத கரூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்முறையாக வருகை
கரூர் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று மாலை பல்வேறு இடங்களில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த அவருக்கு மாவட்ட திமுக சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சியில் இருந்து
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற முதல்வர் ஸ்டாலின், திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக கரூர் சென்றார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குளித்தலை, சித்தலவாய், மாயனூர், வெங்கக்கல்பட்டி ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கூடி நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலின்
கரூர் வந்த முதல்வர் ஸ்டாலின், இரவு பயணியர் மாளிகையில், தொழில் முனைவோர்களை சந்தித்து கலந்துரையாடினார். ஜவுளித்தொழில், கொசுவலை உற்பத்தி, கயிறு உற்பத்தி, வர்த்தகம் மற்றும் உணவு தானியங்கள் உற்பத்தி, வாகனங்களுக்கான கூண்டு கட்டும் தொழில் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடினார் மு.க.ஸ்டாலின். அப்போது தொழில் சங்கத்தினர் தங்களது தொழில்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், தங்களது கோரிக்கைகள் குறித்தும் பேசினர். தொடர்ந்து அது சம்பந்தமான கோரிக்கை மனுக்களையும் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினர்.

பிரமாண்ட விழா
இன்று காலை 10 மணியளவில், திருமாநிலையூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பிரமாண்டமான அரசு விழாவில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, 80,555 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் பங்கேற்கும் விழாவுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கறுப்புக்கொடி
இதற்கிடையே கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் கறுப்புக் கொடிகளை தங்களது வீடுகளில் கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் ஸ்டாலினின் கரூர் வருகையின்போது வீடுகளில் கறுப்புக் கொடி கட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணி என்னவென்பது தெரியவந்துள்ளது.

மக்கள் போராட்டம்
கரூர் மாவட்டத்தில் உள்ள தோரணக்கல்பட்டி அருகே ஜல்லிவாடநாயக்கனூரில் உள்ள தொட்டிய நாயக்கர் சமூக மக்களின் கோயிலான வீரசக்க தேவி ஆலயம் அமைந்துள்ளது. கோயில் அருகே அமைந்துள்ள மந்தை நிலங்களில் இலங்கை மக்களின் முகாம் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சமூக மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.

வீடுகளில் கறுப்புக்கொடி
இதையடுத்து அவர்கள் பேனர் அடித்து தங்களது கோரிக்கையை தெரிவித்து, நேற்று ஒரு நாள் மட்டும் அவர்களது வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தாங்கள் முதல்வர் ஸ்டாலின் வருகையை எதிர்த்து கறுப்புக் கொடி கட்டவில்லை என்றும் முன்பே நாங்கள் போராடத் திட்டமிட்டிருந்த நாளில் முதல்வர் வருகிறார். இந்த கறுப்புக் கொடி போராட்டம் கரூர் மாவட்ட ஆட்சியருக்கான தங்களது எதிர்ப்பு என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் வந்த நேரத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கரூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.