மேடையில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. சட்டென பவர் கட் - என்ன நடந்தது?
கிருஷ்ணகிரி: ஓசூரில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், காந்தி ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலேயே திடீரென ஏற்பட்ட மின் தடை காரணமாக சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று மாநகராட்சி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அது ரொம்ப ஆபத்தான விஷயம்.. சுப்பிரமணியன் சுவாமியே சொல்லிட்டாரு..கோவையில் கொந்தளித்த திருமாவளவன்

மா.சுப்பிரமணியன் பேச்சின் போது பவர் கட்
இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய மாநகராட்சி உறுப்பினர்களை பாராட்டி, அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் அவர்கள் முன் இருக்கும் கடமைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவரது பேச்சின் குறுக்கே திடீரென மின் தடை ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே அங்கு ஜெனரேட்டர் மூலமாக மின் விநியோகம் வழங்கப்பட்டது.

5 நாட்களாக தொடரும் மின் வெட்டு
தமிழ்நாடு முழுவதும் கடந்த 5 நாட்களாக மின் தடை அதிகரித்து வருகிறது. கடந்த புதன் கிழமை மாலை பல மணி நேரம் ஏற்பட்ட மின் தடை காரணமாக மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். சில மாவட்டங்களில் சில மணி நேரமும், ஒரு சில இடங்களில் பல மணி நேரமும் மின்வெட்டு நீடித்தது. கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ள நிலையில், மின் தடையால் இரவில் உறங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

என்ன காரணம்?
இது தொடர்பாக மின்வாரியத்துக்கும் புகார்கள் குவிந்தன. சமூக வலைதளங்களிலும் பலர் அரசை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் திடீர் மின் தடை குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைதள பக்கங்களில் விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.

என்ன நடவடிக்கை
இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது மின்சார வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது." எனக் கூறினார்.

12 மாநிலங்களுக்கு எச்சரிக்கை
இந்த நிலையில், மத்திய அரசிடம் நிலக்கரி கையிருப்பு குறைந்துவிட்டதாகவும், 12 மாநிலங்களில் மின் தடை அபாயம் இருப்பதாகவும் ஆங்கில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதற்கிடையே சட்டப்பேரவையில் இன்று மின் தடை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்
அவர் பேசியதாவது, "தனியார் நிறுவனங்களிடம் 3,000 மெகாவாட் கூடுதலான மின்சாரத்தை பெறுவதற்கான முயற்சியை எடுத்ததுடன், நமது சொந்த உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நகர பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் ஏற்பட்ட மின் தடையை சரி செய்துள்ளோம். மத்திய தொகுப்பிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் தடைபட்ட நிலையை கூட சமாளிக்கக்கூடிய அளவிற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது." என்றார்.