கோழிப்பிரச்சினை கொலையில் முடிந்தது.. புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி படுகொலை.. கிருஷ்ணகிரியில் ஷாக்
கிருஷ்ணகிரி: கோழி பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியதில் புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அண்ணன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றி விரிவாக பார்ப்போம். கிருஷ்ணகிரி பழையப்பேட்டையை சேர்ந்தர் இம்ரான்(22).
'யார்கிட்டையும் சொல்லக் கூடாது..' டெல்லியில் தலித் சிறுமி பாலியல் படுகொலை.. தாயை மிரட்டிய பூசாரி

புது மாப்பிளை
புது மாப்பிளையான இவர் அதே பகுதியை சேர்ந்த மார்க்கோ என்பவரின் மகன் மணிமாறனிடம் இருந்து
கடந்த சில தினங்களுக்கு முன்பு சண்டைகோழி ஒன்றை வாங்கியதாக கூறப்படுகிறது. சண்டைகோழியை வாங்கிய இம்ரான் ஆந்திராவில் நடைப்பெற்ற கோழிச்சண்டை போட்டியில் கலந்து கொண்டார். அப்போது சண்டைக்கோழி சரியான முறையில் சண்டைப் போடாததால் இம்ரான் கடுமையான ஏமாற்றமடைந்துள்ளார்.

சண்டைக்கோழியால் வந்த சண்டை
இதனால் இம்ரான் மற்றும் இவரது அண்ணன் ஜலாவுதீன் ஆகிய இருவரும் மார்கோ மற்றும் அவருடைய மகன் மணிமாறனிடம் ''தரமற்ற சண்டைகோழியை கொடுத்து விட்டு ஏன் எங்களை ஏமாற்றி விட்டீர்கள்'' என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டுள்ளது. இந்த வாக்குவாதம் கடும் சண்டையாக மாறியது.

சரமாரி கத்திக்குத்து
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மார்கோ மற்றும் அவரது மகன் மணி மாறன் திடீரென தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து இம்ரான் மற்றும் அவரது அண்ணனான ஜலாவுதீன் ஆகிய இருவரையும் சரமாரியாக குத்தியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத அண்ணன்-தம்பி இருவரின் உடலிலும் சரமாரி கத்திக்குத்து விழுந்தது.

பரிதாபமாக உயிரிழப்பு
இதன்பின்னர் மார்கோ மற்றும் அவரது மகன் மணி மாறன் தப்பிச் சென்ற நிலையில் புது மாப்பிளை இம்ரான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அண்ணன் ஜலாவுதீன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டவுண் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜலாவுதீனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவருக்கும் வலைவீச்சு
இம்ரான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த ஜலாலுதீனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மார்கோ, மணிமாறன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.