புடிங்க சார்! ஆருத்ரா வழக்கில் அண்ணாமலையை கைது செய்ய கோரும் வன்னி அரசு! எவிடன்ஸ் கூட இருக்காம்
கிருஷ்ணகிரி: ஆருத்ரா வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.
ஒரு லட்சம் ரூபாய்க்கு 30-36 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருகிறோம் என்று ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் தனது ஆட்டத்தை தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு மாநிலம் முழுவதும் கிளை பரப்பி செயல்பட்டு வந்த இந்நிறுவனத்தில் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2022 மே மாதம் வரை சுமார் 1 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.2,438 கோடி. ஆனால், இந்த முதலீட்டாளர்களுக்கு வாக்கு கொடுத்தது போல 30% வட்டி கொடுக்கப்படவில்லை.

எனவே முதலீட்டை திருப்பி கேட்டவர்களுக்கும் முதலீடு பணமும் கொடுக்கப்படவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினருக்கு வழக்கை தோண்ட தோண்ட பல உண்மைகள் வெளிவந்தன. எனவே உடனடியாக நிறுவனத்தின் இயக்குநர்கள், ஏஜெண்டுகள் மற்றும் துணை நிறுவனத்தின் நிர்வாகிகள் என 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆனால் இந்த விசாரணை குறித்தான தகவல்களும், கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த வழக்கை ஐ.ஜி லெவல் அதிகாரிகள் மட்டுமே கையாள்வதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில்தான் இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஹரீஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர் பாஜகவில் விளையாட்டு பிரிவின் தலைவராக பணியாற்றி வந்திருக்கிறார். ஆனால் இவர் கைது செய்யப்பட்டபோது பாஜகவில் எந்த பொறுப்பிலும் கிடையாது என்று தமிழக பாஜக விளக்கமளித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள் பலரை போலீஸ் தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ள நிலையில், அண்ணாமலை மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளன. இதன் தொடர்ச்சியாக விசிகவும் ஆருத்ரா விவகராத்தில் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அதாவது கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 'ஜனநாயகம் காப்போம்' என்கிற முழக்கத்தின் கீழ் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதனையடுத்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றிருந்த வன்னி அரசு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, "அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலுக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. ஆனால் இதை ஏதோ 7 மலை, 7 கடல் தாண்டி கண்டுபிடித்ததை போல பேசிக்கொண்டிருக்கிறார். ஆருத்ரா வழக்கை பொறுத்த அளவில் பாஜக முக்கிய தலைகளின் பெயர்கள் அடிபட்டிருக்கிறது. குறிப்பாக அண்ணாமலைக்கு ரூ.84 கோடி கைமாறியிருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அதற்கான ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே இதனை வைத்து காவல்துறையினர் உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும்.
ஆருத்ரா நிறுவனமே அண்ணாமலைக்குதான் சொந்தம் என்கிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி அவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். மற்றொருபுறம் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணிக்கான அனுமதியை நீதிமன்றம் சென்று பெற்றிருக்கிறது. வடமாநிலங்களில் ராமநவமி அன்று நடைபெற்ற ஆர்எஸ்எஸ், விஎச்பி பேரணியில்தான் கலவரங்கள் உருவாகியுள்ளன. எனவே தமிழ்நாட்டிலும் இதுபோன்ற கலவரங்களுக்கு ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications