Partygate பஞ்சாயத்து.. ஒரே ஒரு பார்ட்டி, பிரதமர் பதவி காலி! சிக்கலில் போரிஸ் ஜான்சன்.. என்ன நடந்தது?
லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் தரப்பிலும் சில தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒற்றை பார்ட்டியால் அவரது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா உலக நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாகக் கடந்த ஆண்டு ஏற்பட்ட டெல்டா கொரோனா உலகையே புரட்டிப்போட்டுவிட்டது.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த டெல்டா கொரோனா நமது நாட்டில் 2ஆம் அலையை ஏற்படுத்தியது. அப்போது நமது நாட்டில் கொரோனா பாதிப்பு எந்தளவுக்கு மோசமாகச் சென்றது என்பதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள்.
முடிஞ்சா தொட்டுப் பாரு! நின்று விளையாடிய முதலமைச்சர் ஸ்டாலின் காளை! பாலமேடு ஜல்லிக்கட்டு ருசிகரம்!

பிரிட்டன் கொரோனா
இந்த டெல்டா கொரோனா இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாகப் பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் டெல்டா கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அங்கு கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்ததால் மிக வேகமாக மருத்துவமனை படுக்கைகள் நிரம்பத் தொடங்கின. கொரோனா உயிரிழப்புகளும் வேகமாக உயரத் தொடங்கியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பிரிட்டனில் நிலைமை இப்படி தான் இருந்தது.

முழு லாக்டவுன்
இதையடுத்து அந்த சமயத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்தி முழு லாக்டவுனை அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். பொதுமக்கள் வீடுகளிலேயே இருந்து பணிபுரியும்படி அறிவுறுத்தப்பட்டனர். தேவையில்லாமல் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டது மேலும், ஹோட்டல் தொடங்கி பப்புகள், விடுதிகள் என அனைத்துக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவ்வளவு ஏன் திருமணம், இறுதிச் சடங்கு ஆகியவற்றுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன,

பார்ட்டி
பொதுமக்கள் அனைவரும் கடுமையான கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வீடுகளிலேயே முடங்கியிருந்த சூழலில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரது ஊழியர்களுடன் இணைந்து பார்டியில் பங்கேற்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டில் வெளிவரும் The Daily Telegraph செய்தி நிறுவனம் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் ஏப்ரல் - மே மாதத்தில் லாக்டவுன் சமயத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ஊழியர்களுடன் மது பார்ட்டியில் கலந்து கொண்டதாகக் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான சில ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தது.

இளவரசர் பிலிப் இறுதி அஞ்சலி
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தான் பிரிட்டன் இளவரசர் பிலிப் உயிரிழந்திருந்தார். அப்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் அரசு குடும்ப இறுதிச் சடங்கு கூட விதிமுறைகளைப் பின்பற்றியே நடத்தப்பட்டது. பொதுமக்கள் யாரும் இளவரசர் பிலிப்புக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை. மிகக் குறைந்த நபர்கள் மட்டுமே இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். அப்போது இளவரசர் பிலிப்பின் உடலுக்கு அருகே தன்னந்தனியாக எலிசபெத் மகாராணி அமர்த்திருந்த படம் அந்நாட்டை உலுக்கிப்போட்டது.

கொந்தளித்த மக்கள்
அந்த இறுதிச் சடங்கு நடைபெற சில மணி நேரத்திற்கு முன்பு இந்த பார்ட்டி நடைபெற்றதாக வெளியான செய்தி பிரிட்டன் மக்களைக் கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. இது தொடர்பாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்நாட்டின் நாடாளுமன்றத்திலேயே மன்னிப்பு கேட்டுள்ளார். அதேபோல பிரதமர் அலுவலகமும் எலிசபெத் மகாராணியிடம் தனியாக மன்னிப்பு கோரியுள்ளது. இருப்பினும், இந்த பிரச்சினையை ஓய்ந்ததாக இல்லை.

பதவி விலக அழுத்தம்
இந்தச் சூழலில் அவருக்கு எதிராக அழுத்தம் அதிகரித்து வருகிறது. அவர் பேசும் அனைத்தும் எதிராகவே திரும்பி வருகிறது. நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்கும் போது பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், அதை(பார்ட்டி) அலுவலக நிகழ்ச்சி என்று நினைத்துக் கலந்து கொண்டதாகக் கூறியதை அந்நாட்டு ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் வறுத்து எடுத்துவிட்டனர். இதனால் அவரது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

அடுத்து யார்
இதனால் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியின் மட்டுமின்றி ஆளும் தரப்பைச் சேர்ந்த சிலரும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். பிரிட்டன் நாட்டில் அரசு குடும்பத்தின் மீது மக்கள் மிகப் பெரியளவில் மரியாதை வைத்துள்ளனர். அரசு குடும்பமே துக்க நிகழ்வில் இருந்த போது, விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு போரிஸ் ஜான்சன் பார்ட்டி நடத்தியுள்ளது சர்ச்சையைப் பூதாகரமாக்கியுள்ளது. அவர் பதவி விலகும் பட்சத்தில் அடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்கும் வாய்ப்புகள் அதிகம்.