சுற்றிவளைத்த தாலிபான்கள்.. வெறும் 2 நிமிடமே இருந்தது: அன்று என்ன நடந்தது? மனம் திறக்கும் அஸ்ரப் கானி
லண்டன்: தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றிய போது என்ன நடந்தது என்றும் ஏன் தான் காபூலை விட்டு வெளியேறினேன் என்பது குறித்தும் ஆப்கன் முன்னாள் அதிபர் அஸ்ரப் கானி முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா படையெடுத்தது. அப்போது இருந்த தாலிபான் ஆட்சி அகற்றப்பட்டு, அமெரிக்கா ஆதரவுடன் மக்களாட்சி அமல்படுத்தப்பட்டது.
சுமார் 20 ஆண்டுகளாகப் போராடிய பின்னரும் கூட, ஆப்கனில் அமெரிக்கா படைகளால் வெல்ல முடியவில்லை. இதற்காக அமெரிக்கா ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர் பணம் மற்றும் அமெரிக்க வீரர்களை இழக்க வேண்டியிருந்தது.
'மனிதாபிமானமற்ற செயல்..' தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் கிருமிநாசினி தெளிப்பு.. ஐகோர்ட் அதிருப்தி

அமெரிக்கா
இதனால் ஆப்கனில் இருக்கும் அமெரிக்கா படைகளைத் திரும்பப் பெறப்போவதாக அமெரிக்கா அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டில் இருந்தே ஆப்கனில் இருக்கும் அமெரிக்கப் படைகள் மெல்ல சொந்த நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனை விட்டு வெளியேறியது. மறுபுறம் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே ஆப்கன் படைகள் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

ஐக்கிய அமீரகம்
வெறும் சில வாரங்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கனையும் தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். கடந்த ஆகஸ்ட் 15இல் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றினர். அப்போது ஆப்கன் அதிபராகக் கடந்த 2014 முதல் இருந்து வந்த அஸ்ரப் கானி அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம் புகுந்தார். அவர் கட்டுகட்டாகப் பணம், பல கிலோ தங்கத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டுத் தப்பியதாக எல்லாம் அப்போது தகவல் வெளியானது. இந்நிலையில், இது தொடர்பாக அவரே பிபிசி செய்தி நிறுவனத்திடம் மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.

சுற்றி வளைத்த தாலிபான்கள்
இது தொடர்பாக பிபிசி-இன் ரேடியோ 4 நிகழ்ச்சியில் பேசிய அவர், "கடந்த ஆகஸ்ட் 15இல் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய அன்று காலை வரை, அது தான் ஆப்கனில் எனக்குக் கடைசி நாளாக இருக்கும் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. பிற்பகல் நேரத்தில் தான் அதிபர் மாளிகை பாதுகாப்பு வீழ்ந்தது. நான் அங்கேயே இருந்திருந்தால் பாதுகாப்பில் இருந்தவர்கள் கொல்லப்படும் நிலை உருவாகியிருக்கும். மேலும், அவர்களால் என்னைப் பாதுகாக்க முடியாது என்றும் எனக்குத் தெரியும்.

ஐக்கிய அமீரகம்
அந்த சமயத்தில் எனது தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஹம்துல்லா மொஹிப், உண்மையில் பயந்துவிட்டார். அவர் எனக்கு இரண்டு நிமிடங்கள் கூட கொடுக்கவில்லை. முதலில் நான் தென்கிழக்கு கோஸ்ட் நகருக்குத் தான் ஹெலிகாப்டர் மூலம் செல்ல வேண்டும் என இருந்தேன். ஆனால், அந்த நகர் உட்பட பல்வேறு மாகாண தலைநகரும் தாலிபான் கட்டுப்பாட்டில் அடுத்தடுத்து செல்ல தொடங்கியது. இதனால் எங்கே போகவுள்ளோம் என்றே தெரியவில்லை. கிளம்பும் போது தான், என்னை ஐக்கிய அமீரகம் அழைத்துச் செல்வதாகக் கூறினர்" என்றார்.

என்ன காரணம்
கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக் கொண்ட வெளியேறியதாகப் பரவும் தகவல் குறித்துப் பேசிய அவர், "தலைநகர் மிக மோசமான சண்டை ஏற்படக் கூடாது என்பதே எனது முதல் இலக்காக இருந்தது. நாட்டில் இருந்த வன்முறையால் ஏற்கனவே தலைநகர் காபூலில் அகதிகள் நிரம்பியிருந்தனர். அவர்களுக்கு நான் மேலும் கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை. நாட்டை விட்டு வெளியேறுவது என்பது மிகக் கடினமான ஒரு முடிவு.

தியாகம் செய்தேன்
காபூலைக் காக்கவும் ஆப்கனில் எப்படி கொடூரமான ஆட்சி கவிழ்ப்பு நடைபெறுகிறது என்பதையும் காட்ட நான் என்னையே தியாகம் செய்ய வேண்டியிருந்தது. ஆட்சி அதிகாரத்தில் உடன்பாடு செய்து கொள்வதாகக் கூறிய தாலிபான்கள், அதைச் செய்யாமல் ஆட்சியைக் கவிழ்த்தனர். நான் அங்கேயே தங்கி இருந்திருந்தாலும் கூட நிலைமை எந்த விதத்திலும் மாறியிருக்காது. அப்போதும் கூட தாலிபான் ஆட்சியில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்படவே செய்திருக்கும்.

கோபம்
ஆனால், துரதிர்ஷ்டவசமாக நான் முழு கெட்டவனாக ஆக்கப்பட்டேன். இதை ஒரு அமெரிக்கப் பிரச்சினையாக மாற்றிவிட்டனர். வாழ்க்கை முழுவதும் நான் செய்த பணியை அழித்துவிட்டார்கள். எனது கவுரவத்தை அழித்துவிட்டார்கள். நான் பலிகடா ஆக்கப்பட்டேன். ஆப்கன் மக்களின் கோபம் எனக்குப் புரிகிறது. ஏனென்றால் எனக்கும் அந்த கோபம் உள்ளது" என்றார்.