படுத்த படுக்கை என பொய்.. 13வருடம் நோயாளியாக நடித்து.. ரூ.6 கோடியை அபேஸ் செய்த பாட்டி
லண்டன்: 66 வயது பெண் ஒருவர் அரசாங்கத்தை ஏமாற்றி, 13 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருப்பதாக நடித்து ரூ. 6 கோடி அளவில் மோசடி செய்திருப்பது இங்கிலாந்தை அதிர வைத்துள்ளது.
தொழிலாளர்களின் நலனைக் காப்பதில் ஒவ்வொரு நாட்டின் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டிற்கு நாடு இது வேறுபட்டாலும், அவை அனைத்தின் நோக்கமுமே தொழிலாளர்களின் நலன் மட்டுமே. இதற்காகவே வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல அம்சங்களை அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஆனால், இவற்றை வைத்தும் சிலர் முறைகேடான சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
பள்ளி மாணவிகளை தூக்க வைத்து கொடுமை.. தீயாகப் பரவிய வீடியோ.. அதிரடியாக 4 பேர் சஸ்பெண்ட்!
அப்படித்தான் 13 ஆண்டுகளாக மருத்துவ மோசடி செய்து வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தற்போது கையும், களவுமாக பிடிபட்டுள்ளார்.

உதவித்தொகை வேண்டி
ஃபிரான்சஸ் நோபல் என்ற அந்த 66 வயது பெண், கடந்த 2005ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் கவுண்டி கவுன்சிலில் தெரிவித்துள்ளார். 24 மணிநேரமும் தீவிர வீட்டு பராமரிப்பு தேவைப்படுவதாகவும் அதற்கு பல ஆண்டுகளாக பலனளிக்கும் ஊதியம் தேவைப்படுவதாகவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

13 ஆண்டுகள் மருத்துவ உதவி
இதனை உண்மை என நம்பிய அந்த கவுன்சில், படுத்த படுக்கையாக நோபல் இருப்பதாகக் கருதினர். எனவே, மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அளிக்கும் நேரடி கட்டண பராமரிப்பு தொகுப்பு முறையின் கீழ் அவருக்கு உதவி செய்ய முன்வந்தனர். அதன்படி, கடந்த 13 ஆண்டுகளாக இந்த மருத்துவ உதவித் தொகையை அவர் பெற்று வந்துள்ளார்.

கண்காணிப்பு
இந்நிலையில், சமீபத்தில் ஒருநாள் அதிகாலையில் நோபல் தனது நாயை அழைத்துக் கொண்டு தெருவில் செல்வதை அக்கம்பக்கத்தார் பார்த்துள்ளனர். படுத்த படுக்கையாக இருப்பதாகக் கூறப்பட்ட, நோபல் நன்றாக ஆரோக்கியமாக நடந்து செல்வது அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. எனவே தொடர்ந்து அவரை கண்காணிக்கத் தொடங்கினர்.

கவுன்சிலில் புகார்
அதில், வீட்டிற்கு வரும் தபால்கள் மற்றும் பொருட்களை நோபல் நன்றாக நடந்து சென்று வாங்குவதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதனால் அவர் ஆரோக்கியமாக இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து, இது குறித்து ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் கவுண்டி கவுன்சிலுக்கு சிலர் புகார் அளித்தனர்.

குற்றம் உறுதி
இந்த புகாரின் அடிப்படையில் நோபலுக்கு நீதிமன்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது. விசாரணையில் நோபல் மருத்துவ மோசடி செய்யப்பட்டது உறுதியானது. நீதிமன்றத்தில ஆஜராகி நோபலும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். கடந்த 13 ஆண்டுகளில் அரசிடம் ஏமாற்றி நோபல் பெற்றத் தொகை ரூ. 6 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆடம்பர வாழ்க்கை
இந்தப் பணத்தில் நோபல் தனது மகளுக்கு ஒரு பகுதியை அளித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள், அந்தப் பணத்தைக் கொண்டு கனடாவிலும் அமெரிக்காவிலும் ஆடம்பர விடுமுறைக்கு சென்று வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அரசை ஏமாற்றி மோசடி செய்ததாக, நோபலுக்கு நான்கு ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மிகப் பெரிய மோசடி
ஆனால் குற்றத்தை ஒப்புக் கொண்ட நோபலும், அவரது குடும்பத்தினரும் அடுத்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் ஜெர்மனிக்கு சென்று தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து நோபலையும் அவரது குடும்பத்தாரையும் கைது செய்யும் முயற்சியில் அந்நாட்டு காவல்துறை ஈடுபட்டுள்ளது. இங்கிலாந்தில் நடந்த மிகப்பெரிய மோசடி வழக்குகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.