36கிமீ.. ஓட்டப்பந்தயத்தில் குதிரையைத் தோற்கடித்த இளைஞர்.. இப்படியெல்லாம்கூட வெறித்தனமாக ஓட முடியுமா?
லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்ற குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான ஓட்டப்பந்தயத்தில் சுமார் 32 கிமீ தூரம் ஓடி, குதிரையைத் தோற்கடித்து வெற்றி வாகைச் சூடியுள்ளார் ரிக்கி லைட்பூட் என்ற தீயணைப்பு வீரர். 13 வருடங்களுக்குப் பிறகு இந்தப் போட்டியில் குதிரையை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் லைட்பூட்.
நமக்குத் தெரியாத பல வினோதமான போட்டிகளும், பந்தயங்களும் உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், மனிதர்களுக்கும், குதிரைகளுக்கும் இடையேயான ஓட்டப்பந்தயம். பந்தயம் என்றால் ஒன்று ஒரே வகையைச் சேர்ந்த விலங்குகளுக்குள் வைக்க வேண்டும், இல்லையென்றால் மனிதர்களுக்குள் வைக்க வேண்டும். இதென்ன வித்தியாசமாக மனிதர்களுக்கும், குதிரைகளுக்கும் இடையே என கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா...
இங்கிலாந்தின் லான்ரிடைய்ட் வெல்ஸ் என்ற நகரில் தான் வித்தியாசமான இந்த மனிதனுக்கும், குதிரைக்குமான (Man vs Horse) போட்டி நடைபெற்றுள்ளது.
ராஜ்யசபா தேர்தல் 2022: வெல்லப்போவது யார்..மல்லுக்கட்டும் அரசியல் கட்சிகள் - குதிரை பேரம் ஜெயிக்குமா

வித்தியாசமான பந்தயம்
இந்த ஓட்டப்பந்தயம் கடந்த 1980-ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. ஓட்டப்பந்தயத்தில் குதிரையை மனிதனால் வெற்றி பெற முடியுமா என்ற இரண்டு நபர்களின் விவாதத்தைத் தொடர்ந்து இந்தப் போட்டிகள் ஆரம்பமானதாக, அதன் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 44 ஆண்டுகளில் இப்போட்டியில் இதுவரை இரண்டு நபர்கள் மட்டுமே குதிரைகளை வென்று முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.

1000 மனிதர்களும், 50 குதிரைகளும்...
இந்தாண்டு லான்ரிடைய்ட் வெல்ஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், 1000 மனிதர்களும், 50 குதிரைகளும் கலந்து கொண்டனர். குதிரைகளை அதன் மீதமர்ந்து வீரர்கள் ஓட வைப்பார்கள். போட்டிக்கான களம் சமதளமாக மட்டுமல்லாமல் மலைப்பாங்கான இடங்கள், சிறிய ஓடைகள், கரடு முரடான சாலைகள் என 22 மைல்கள் (கிட்டத்தட்ட 36 கிலோமீட்டர்) ஆகும்.

மூன்றாவது நபர்
13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டியில் ஜெயித்து, குதிரைக்கு எதிரான ஓட்டத்தில் குதிரையை ஜெயித்த மூன்றாவது வீரன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரிக்கி லைட்பூட் என்பவர். இவர் பந்தய தூரத்தை 2 மணிநேரம் 22 நிமிடங்கள் 23 நொடிகளில் கடந்து, முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதற்கு பரிசாக இந்திய மதிப்பில் 32 லட்ச ரூபாயைப் பரிசுத்தொகையாக வென்றுள்ளார்.

களைப்பு
லைட் பூட் ஒரு தீயணைப்பு வீரர் ஆவார். தன் சொந்த ஊரிலிருந்து போட்டி நடக்கும் ஊருக்கு நீண்ட பயணத்தை மேற்கொண்டதாலும், போட்டிக்கு முன்பு 29 மணிநேரம் தூங்காமலிருந்ததாகவும் தெரிவித்துள்ளார் லைட் பூட். ஆனாலும் தன் களைப்பை ஓரம் தள்ளி விட்டு, இப்போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு குதிரைகளைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

ஆச்சர்யம்
பொதுவாகவே விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள உடலில் அதிக ஸ்டாமினா தேவைப்படும். ஆனால் போதிய ஓய்வு மற்றும் தூக்கம் இல்லாத போதும், இந்தப் போட்டியில் வென்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் லைட்பூட். 'ஒரு மனிதனால் 22 மைல்கள் குதிரையைவிட வேகமாக ஓடி ஜெயிக்க முடியும் என சத்தியமாக நம்ப முடியவில்லை' என லைட்பூட்டைப் பார்த்து நெட்டிசன்கள் வியந்து போயுள்ளனர்.

மனைவி நம்பவில்லை
போட்டிக்குப் பின் அளித்த பேட்டியில், "போட்டியில் வென்று, குதிரையைத் தோற்கடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நான் வெற்றி பெற்றதை கூறிய போது, அதனை என் மனைவி நம்பவேயில்லை" என வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார் லைட்பூட். கொரோனா தாக்கத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் இந்தப் போட்டிகள் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.