ஸ்காட்லாந்தில் யாருன்னு பாருங்க.. அட, அமைச்சர் செந்தில் பாலாஜி! காற்றாலை மின் உற்பத்தி பற்றி ஆய்வு
லண்டன்: கடலில் காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுவது குறித்த ஆய்வுக்காக ஸ்காட்லாந்து சென்றிருக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.
அரசுமுறை பயணமாக ஸ்காட்லாந்து சென்றுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, அங்குள்ள கிரிம்ப்ஸி வடக்கு கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆஃப்சோர் காற்றாலைகளை நேற்று முழுவதும் ஆய்வு செய்தார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையிலான தமிழக அரசு அதிகாரிகள் குழுவை சிறப்பு போட்டில் நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று கடலில் காற்றாலை மின் உற்பத்தி எவ்வாறு நிகழ்கிறது என்பதை விளக்கியது ஸ்காட்லாந்து குழு.
மின்சார வாரியத்தில் காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்ன பதில்!

மின்சாரத்துறை
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு என்ற பேச்சே இருக்கக் கூடாது என்பதை இலக்காக கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார். பல்வேறு வழிகளில் தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க ஆர்வம் காட்டி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், கடலில் காற்றாலை நிறுவி அதன் மூலம் மின் உற்பத்தியை பெருக்குவது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் அண்மையில் ஆலோசித்தார்.

ஸ்காட்லாந்து நிபுணர்கள்
அதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் குழு இங்கிலாந்து புறப்பட்டுச் சென்று அங்குள்ள கிரிம்ப்ஸி வடக்கு கடல் பகுதியில் நேற்று நாள் முழுவதும் ஆய்வு நடத்தியிருக்கிறது. கடலில் மிதந்து காற்றாலை மின் உற்பத்தி பற்றி ஆய்வு செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி, அதே போல் தமிழக கடல் பகுதியில் நிறுவுவதற்காக சாத்தியக் கூறுகளை ஸ்காட்லாந்து மின் உற்பத்தித்துறை நிபுணர்களிடம் கேட்டறிந்துள்ளார்.

முதல்வரிடம் ஆலோசித்து
கடலில் காற்றாலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஸ்காட்லாந்தில் சேகரித்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகம் திரும்பியதும் இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு பயணம் சென்றாலும் கூட கோட் சூட் ஆடைகளை தவிர்த்து நார்மலான பேண்ட் ஷர்ட் மட்டுமே அணிந்திருந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

தமிழக அமைச்சர்கள்
தமிழக அமைச்சரவையில் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ், மஸ்தான், செந்தில்பாலாஜி, ஆகியோர் இதுவரை வெளிநாடு சுற்றுப்பயணம் செய்துள்ள அமைச்சர்கள் ஆவார்கள். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் இருந்தும் அதனை அவர் தவிர்த்து வருகிறாராம்.