"ஒரே வைரஸ்.." வெறும் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பச்சிளம் குழந்தைகள் பலி.. கொரோனா இல்லை இது வேறயாம்
லண்டன்: கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் ஒரு வகை வைரஸ் பாதிப்பு காரணமாக உலகெங்கும் 5 வயதுக்குட்பட்ட ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளை ஒரு வழி செய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு ஒருபுறம் என்றால் ஈடு செய்ய முடியாத உயிரிழப்புகள் மற்றொரு புறம் இருந்தது.
நல்வாய்ப்பாக கொரோனா வைரஸ் குழந்தைகள் மத்தியில் பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், ஒரே ஆண்டில் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழந்ததற்கான காரணமாக வைரஸ் குறித்து ஆய்வாளர்கள் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்,
தமிழகத்தில் பரவியது புது வகை கொரோனா.. ஒருவருக்கு பாதிப்பு உறுதி.. ஆபத்தா? மா.சுப்ரமணியன் விளக்கம்!

மூச்சுத் திணறல்
இந்த வைரஸ் சாதாரண சளி போன்ற பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தலாம். அதேபோல 6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில் 45,000க்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகி உள்ளனர். இதை RSV எனப்படும் ரெசிபிராடோரி சினசிடியால் வைரஸ் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

RSV வைரஸ்
இது குறித்து இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஹரிஷ் நாயர் கூறுகையில், "சிறு குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்த்தொற்று ஏற்பட்ட இந்த RSV வைரஸ் தான் முக்கிய காரணம் ஆகும். இந்த வைரஸ் ஆறு மாதங்களுக்குக் குறைவான குழந்தைகள் மத்தியில் தான் அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக, கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள் RSV வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. இதனால், இந்த வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தி கூட அவர்களுக்குத் தெரியாது" என்றார்.

யாருக்கு முன்னுரிமை
இந்த RSV வைரசுக்கு எதிரான வேக்சின்கள் இப்போது ஆய்வில் உள்ளது. அனைத்து சோதனைகளையும் முடிந்த பின்னர், இந்த வேக்சினை குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்த செலுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல கர்ப்பிணிகளுக்கும் இந்த வேக்சின் அளிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எந்த வயது
முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 33 மில்லியன் பேருக்கு RSV பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 118,200 பேர் பலியாகி உள்ளனர். பொதுவாக இந்த RSV பாதிப்பு ஏற்படுபவர்களில் 28 நாட்கள் முதல் ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளே அதிகம் பலியாகிறார்கள். 5 வயதுக்குக் குறைவான குழந்தைகள் உயிரிழப்பதில் சுமார் 97% ஏழை மற்றும் நடுத்தர நாடுகளிலேயே ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

காரணம்
RSV பாதிப்பு காரணமாகக் குழந்தைகள் உயிரிழப்பதில் சுமார் 33% மருத்துவமனைக்கு வெளியே தான் ஏற்படுகிறது. அதாவது முறையான சுகாதார கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் தான் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது.