"நல்ல காலம் பிறக்குது.." முடிவுக்கு வருகிறது கொரோனா பெருந்தொற்று! பூரித்து சொல்லும் சுவிட்சர்லாந்து
லண்டன்: கொரோனா பெருந்தொற்று முடிவு காலத்துக்கு வந்திருப்பதாக சுவிட்சர்லாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலையில் அதிக மக்கள் தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில், ஒரு பெருந்தொற்றில் இருந்து அதன் முடிவு கட்டத்துக்கு செல்வதில் நாம் தீர்க்கமானதாக இருக்கக்கூடிய ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம் என சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
"ஒரு தொற்றுநோய் கட்டத்தில் இருந்து ப்ளூ மாதிரி காய்ச்சல் என்ற நிலைக்கு கொரோனா மாறிவருகிறது" என்று சுகாதாரத்துறை அமைச்சர் அலேன் பெர்செட் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
2019ம் ஆண்டு முதல் கொரோனா உலகமெங்கும் பரவத்தொடங்கியது. 2020-ல் ஒட்டுமொத்த உலகமும் லாக்டவுனில் சென்றது. அதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகள் தொற்றில் இருந்து விடுபட்டு வந்தது.

கொரோனா
இந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் கொரோனா அதிக அளவில் பரவத் தொடங்கியது. கொரோனா உருமாறி டெல்டா என்ற பெயரில் பரவத் தொடங்கியது. இது ஆரம்ப கால கொரோனாவை விட அதிக வீரியமாக இருந்தது. இந்த டெல்டா வைரஸால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்காமல் பலர் மருத்துவமனை வாசலில் உயிரிழக்க நேர்ந்தது.

தடுப்பூசி
கொரோனாவுக்கு ஒரே ஆயுதமாக தடுப்பூசியே இருந்தது. உலக நாடுகள் தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்திவந்தன. இந்தியாவிலும் அதிக அளவு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதாக இந்திய அரசு தெரிவித்தது. இரண்டு தவணையாக தடுப்பூசி போடப்படுகிறது.

மூன்றாவது அலை
2022ம் ஆண்டு புத்தாண்டுக்குப் பிறகு உலக அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தது. இந்த முறை தடுப்பூசி போடப்பட்டதால் கொரோனாவின் பாதிப்பு குறைந்தது. அதேசமயம் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்தது. மூன்றாவது அலையின் அரணாக தடுப்பூசி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

ஒமிக்ரான்
கொரோனாவைப் போலவே தற்போது உருமாறிய ஒமிக்ரான் உலகமெங்கும் பரவி வருகிறது. இந்தியாவில், 19 மாநிலங்களில் கொரோனாவின் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 6 மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 300 மாவட்டங்களில் வார பாதிப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது.

முடிவுக்கு வருகிறது
கொரோனாவால் ஐரோப்பிய நாடுகள் அதிகம் பாதிப்பை சந்தித்துவிட்டன. எனவே இப்போது அலை முடியும் நிலையில், சாதாரண காய்ச்சலாக கொரோனா மாறுவதாக சுவிட்சர்லாந்து சுகாதாரத் துறை அமைச்சகம் கணித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும் காலகட்டத்தில் இருக்கிறோம். தொடர்ந்து தடுப்பூசி எடுக்கும்போது மக்களிடம் அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி இருக்கிறது. ஒமைக்ரான் வைரஸ் இந்த கொரோனா தொற்று நோயின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம் என்று சுவிட்சர்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் அலைன் பெர்செட் மேலும் தெரிவித்திருக்கிறார். அதாவது ஒரு பக்கம் தடுப்பூசி இன்னொரு பக்கம் வலிமை குறைவான ஓமிக்ரான் அதிகம் பேரிடம் பரவியது ஆகியவை, மந்தை எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திவிட்டது என்பது சுவிட்சர்லாந்து அரசு கருத்தாக உள்ளது.