பைஃசர்- பயோன்டெக் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்.. உலகில் முதல் நாடு
லண்டன்: பைஃசர்- பயோன்டெக் (ஃபைசர்- பயோ என்டெக்) (பிஃபசர் பயோஎன்டெக்) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு (RNA Vaccine) பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உலகில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு இங்கிலாந்து.
உலக நாடுகளை கடந்த ஓராண்டாக கொரோனா மிக மோசமாக பாதித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி பல லட்சம் மனித உயிர்களை காவு வாங்கியிருக்கிறது கொரோனா தொற்று நோய்.
கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்துகள் தயாரிப்பில் தீவிரமாக இறங்கி உள்ளன. இந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி பல்வேறு கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரிட்டன் அரசு ஒப்புதல்
இந்த நிலையில் பைஃசர்- பயோன்டெக் நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி மருந்து அடுத்த வாரம் பிரிட்டன் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும். உலகிலேயே கொரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு வழங்க ஒப்புதல் கொடுத்திருக்கும் முதல் நாடு பிரிட்டன் ஆகும்.

4 கோடி மருந்துகள்- பிரிட்டன் ஆர்டர்
பைஃசர்- பயோன்டெக் மருந்து 2 டோஸ்களாக கொடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே 4 கோடி மருந்துகளை பிரிட்டன் ஆர்டர் செய்துள்ளது. உலகிலேயே மிகவும் குறைவான காலம்-10 மாதத்தில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி என்ற பெருமையையும் இது பெறுகிறது.

நிறுவனங்கள் பின்னணி?
அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. ஏற்கனவே இது அமெரிக்காவிலும் ஒப்புதலுக்காக விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பல நாடுகள் பைஃசர்- பயோன்டெக் தடுப்பு மருந்துக்கு ஆர்டர்கள் கொடுத்திருக்கின்றன.

இந்தியா பயன்படுத்தாது?
இருப்பினும் பைஃசர்- பயோன்டெக் மருந்தை இந்தியா பயன்படுத்துவது சந்தேகம் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. ஏனெனில் இது -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த மருந்தை பாதுகாக்க வேண்டும். இந்தியாவில் இது சாத்தியமற்றது என்றும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.