தப்பினார் போரிஸ் ஜான்சன்! பார்டிகேட் சர்ச்சை நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி! ஆனாலும் ஒரு பின்னடைவு
லண்டன்: பார்டிகேட் சர்ச்சை தொடர்பாகப் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு எதிராக அவரது சொந்த கட்சியினரே நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.
கடந்த 2.5 ஆண்டுகளுக்கு மேலாகவே உலகின் அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்துக் கொண்டு இருப்பது கொரோனா வைரஸ் தான். வளர்ந்த வல்லரசு நாடுகள் தொடங்கி பின்தங்கிய நாடுகள் வரை எதுவும் இதில் இருந்து தப்பவில்லை.
அதிர்ச்சியில் பொதுமக்கள்! ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு ஸ்ட்ரைக்!அரசு முக்கிய ஆக்ஷன்
அதிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் இதைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளுக்குச் சிக்கலாக இருந்தது. வேக்சின் பணிகளுக்கு பின்னர் வைரஸ் பாதிப்பு இப்போது தான் குறைந்துள்ளது.

உருமாறிய கொரோனா
உருமாறிய கொரோனா வகைகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய ஒன்று ஆல்பா வகை கொரோனா. கடந்த 2020 கிறிஸ்துமஸ் சமயத்தில் பிரிட்டன் நாட்டில் முதலில் இந்த ஆல்பா வகை கொரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமர் போரீஸ் ஜான்சன் அங்கு ஊரடங்கை அறிவித்தார். பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

கட்டுப்பாடு
மக்கள் தேவையில்லாமல் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டது. ஹோட்டல், பப்புகள், விடுதிகள் என அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவ்வளவு ஏன் திருமணம், இறுதிச் சடங்கு ஆகியவற்றுக்கும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மக்கள் பங்கேற்கக் கூடாது என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர்.

பார்டி
மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருந்த சூழலில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரது ஊழியர்களுடன் இணைந்து பார்டியில் பங்கேற்றதாக முதலில் கடந்த நவம்பர் மாதம் தகவல் வெளியானது. இதைப் பிரிட்டன் பிரதமர் வட்டாரங்கள் முதலில் மறுத்தன. இருப்பினும், அது தொடர்பான போட்டோக்களும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள பிரபல செய்தி நிறுவனம் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது.

கொந்தளிப்பு
மக்கள் ஊரடங்கில் சிரமத்தை எதிர்கொண்டு இருந்த சமயத்தில் பிரதமர் மட்டும் விதிகளை மீறி மது பார்ட்டியில் கலந்து கொண்டது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சர்ச்சையான பிறகு, லண்டன் போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்தது. அதில் போரீஸ் ஜான்சன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பிரதமர் பதவியில் இருக்கும் போதே, விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்ட முதல் நபர் என்ற மோசமான வரலாற்றைப் படைத்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்
இதனை அந்நாட்டு மக்கள் பார்டிகேட் என்று அழைக்கிறார்கள். இதற்கிடையே போரீஸ் ஜான்சனுக்கு எதிராக அவரது சொந்த பழமைவாத கட்சியினரே நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். அதில் அவருக்கு ஆதரவாக 211 உறுப்பினர்களும் எதிராக 148 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் போரீஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

செல்வாக்கு சரிவு
என்ன தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டு இருந்தாலும், அவரது செல்வாக்கு சொந்த கட்சியிலேயே குறைந்துள்ளதையே இது காட்டுகிறது. கடந்த 2019 தேர்தலில் போரீஸ் ஜான்சன் தனிப்பெரும்பான்மை உடன் வென்று ஆட்சியை அமைத்து இருந்தார். இந்த பார்ட்டிகேட் சர்ச்சை அவரது செல்வாக்கைக் குறைத்துள்ளது. இதனால் அடுத்து வரும் தேர்தலில் அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் வாய்ப்பு குறைவு எனக் கூறப்படுகிறது.