இங்கிலாந்து புதிய கொரோனா வைரஸ்.. தடுப்பூசிக்கு கட்டுப்படுமா? கட்டுப்படாதா? விஞ்ஞானிகள் விளக்கம்
லண்டன்: இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸால், கொரோனா தடுப்பு மருந்தின் செயல்திறனை பாதிக்க வாய்ப்பில்லை, ஆனால் காலப்போக்கில் வைரஸில் அதிக பிறழ்வுகள் ஏற்பட்டால் வைரஸ் தடுப்பூசியை சரியான முறையில் மாற்ற வேண்டியிருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இங்கிலாந்தில் மரபணு மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் அதிக வேகத்தில் பரவி வருவதால் அந்த வைரஸ் தொற்று பாதிப்பு தங்கள் நாட்டை பாதித்துவிடக்கூடாது என்று உஷார் அடைந்துள்ளன உலக நாடுகள்.
இந்தியா உட்பட 40 க்கும் மேற்பட்ட நாடுகள் இங்கிலாந்து பயணத்திற்கு தடை விதித்துள்ளன. இங்கிலாந்துடனான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.
தீயாய் பரவும் புதிய கொரோனா.. இங்கிலாந்தைத் தொடர்ந்து.. வடக்கு அயர்லாந்திலும் பரவியது!

என்ன காரணம்
இங்கிலாந்தில் கடந்த, செப்டம்பர் 21 அன்று கண்டறியப்பட்ட புதிய வைரஸ் கொரோனா வைரஸ் ( VUI-202012/0 ) விரைவாக பரவுவதைக் கருத்தில் கொண்டு பல விஞ்ஞானிகள் இங்கிலாந்துடனான பயணத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தியதால், நாடுகளும் பயணத்தை தடை செய்தன.

ஆறுதல் தந்த தகவல்
இந்நிலையில் லண்டனை தளமாகக் கொண்ட வெல்கம் டிரஸ்ட் பிரிட்டனின் இயக்குனர் ஜெர்மி ஃபாரர், புதிய மரபணு மாறிய கொரோனா வைரஸ், இப்போதுள்ள சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என்பதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை என்று ஆறுதல் தெரிவித்தார்.

வருங்காலத்தில் மாறலாம்
எனினும் வருங்காலத்தில், பிறழ்வு என்பது வைரஸை மாற்றியமைக்கும் சக்தியை நினைவூட்டுவதாகவும். அதாவது மருந்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் ஆற்றலை உருவாக்குவதாகவும். எதிர்காலத்தில் அப்படி மாறாது என்று சொல்ல முடியாது. எனவே அதற்கு தகுந்தாற்போல் மாற்றங்களை மருந்தில் செய்ய வேண்டியதிருக்கும். தற்போது கொரோனா புதிய வைரஸ் பரவுதலைக் குறைக்க அவசரமாக செயல்படுவது மிக முக்கியமானது என்றும் ஜெர்மி கூறினார்.

முன்னெச்சரிக்கை
அண்மையில் பல ஸ்பைக் புரத பிறழ்வுகளுடன் கூடிய SARS-CoV-2 வைரஸ் இங்கிலாந்தில் பரவுவதாக ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதன்பிறகு தான் உலக நாடுகள் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

70 சதவீதம் அதிக வேகம்
டிசம்பர் 19 அன்று இங்கிலாந்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, புதிய வகை கொரோனா வைரஸ், N501Y பிறழ்வு காரணமாக 70 சதவிகிதம் வரை அதிக வேகத்துடன் பரவக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது. வளர்சிதை மாற்றம் அடைந்துள்ள இந்த வைரஸ் ஒரு நபரிடம் இருந்து இன்னொருவருக்கு வேகமாக அனுப்பும் என்றாலும். நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரிப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) தெரிவித்துள்ளது. கடுமையான அறிகுறிகளை உருவாக்கும் வாய்ப்பு என்பது 60 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் வழக்கமான சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது.