வீட்டு உரிமையாளர் தொல்லை.. செல்லப்பூனையைத் திருமணம் செய்து கொண்ட இங்கிலாந்து பெண்!
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியா என்ற தன்னுடைய பூனையைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன் பூனையை ஏன் திருமணம் செய்து கொண்டார் என்பதற்கான காரணம் சுவாரஸ்யமானது.
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் தெபொரா எனும் 49 வயது பெண்மணி. பூனைகளை வளர்ப்பதில் அதிகம் பிரியம் கொண்டவரான இவர், கணவர் இல்லாமல் தனது இரண்டு குழந்தைகளை வளர்த்து வருகிறார். தன் குழந்தைகளைப் போலவே தான் வளர்க்கும் பூனைகள் மீதும் அதீத பாசம் கொண்டவர் தெபொரா.
மேக் இன் இந்தியா - ஹேட் இன் இந்தியா ஒன்றாக இருக்க முடியாது! பட்டியலிட்டு மோடியை விளாசும் ராகுல்
ஆனால் பூனைகளாலேயே தொடர்ந்து பிரச்சினைகளைச் சந்தித்து வந்துள்ளார். இதனால் முன்பு தான் வளர்த்து வந்த சில பூனைகளையும் அவர் இழந்துள்ளார். மேற்கொண்டு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கத்தான் இப்போது பூனையைத் திருமணம் செய்து கொண்டுள்ளார் தெபொரா.

வீட்டு உரிமையாளர்
சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வந்ததால், வீட்டு உரிமையாளர்களால் செல்லப்பிராணி வளர்க்க முடியாமல் சிரமத்தில் இருந்துள்ளார் இவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டு உரிமையாளர் நிர்ப்பந்தத்தால், அவர் வளர்த்து வந்த இரண்டு பூனைகளை நண்பர்களிடம் ஒப்படைத்து விட்டார்.

அலாதி பிரியம்
ஆனாலும் பூனைகள் வளர்ப்பது மீதான ஆசை குறையாததால், தற்போது இந்தியா என்ற பெயரில் ஒரு பூனையை வளர்த்து வந்துள்ளார். சமீபத்தில் அந்தப் பூனை கார் விபத்தில் சிக்கி காலில் காயமடைந்துள்ளது. இதனால், அந்தப் பூனையை வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடும்படி வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதோடு, அடிக்கடி அதனை அவர் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

வித்தியாசமான திட்டம்
இம்முறை தனது செல்லப்பூனை இந்தியாவைப் பிரிய மனமில்லாத தெபொரா, அதற்கு மாற்றாக வித்தியாசமான திட்டம் ஒன்றைத் தீட்டினார். அதன்படி, செல்லப்பிராணியாக இருந்தால்தானே வீட்டை விட்டு வெளியேற்றுவார்கள், அதனை குடும்பத்தில் ஒருவராக மாற்றிக் கொண்டால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என முடிவு செய்தார்.

வைரல் புகைப்படங்கள்
அதன்படி, இந்தியாவைத் திருமணம் செய்து கொண்டு, தனது குடும்பத்தில் ஒருவராக்கிக் கொண்டார் தெபொரா. இருவரும் மணப்பெண் மணமகன் போல தங்களை அலங்கரித்துக் கொண்டு திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தையும் அவர் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதுதான் காரணம்
இந்தத் திருமணம் குறித்து பேசியுள்ள தெபொரா, "எனது இந்தியாவை இழந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தத் திருமணத்தை நான் செய்து கொண்டுள்ளேன். இதன்மூலம் எனது பூனையை நான் எப்பொழுதும் பிரிய மாட்டேன். அதனை எனது பிள்ளையைப் போல பார்த்துக்கொள்கிறேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதன் மூலம் எங்களை இனி யாரும் பிரிக்க முடியாது" என பாசத்துடன் தெரிவித்துள்ளார்.