ஆற்றங்கரையில் துள்ளி ஓடும் குட்டி குட்டி டைனோசர்கள்.. இணையத்தை அதிர வைத்த வீடியோ!
லண்டன்: நீண்ட கழுத்தைக் கொண்ட குட்டி குட்டி டைனோசர்கள் ஆற்றங்கரையில் ஓடுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, பார்ப்போரை ஒரு கணம் தலை சுற்ற வைத்து வருகிறது.
டைனோசர்கள் இப்போது இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். டைனோசர்கள் இனம் பூமியில் இருந்து அழிந்து போனதற்கு, எத்தனையோ காரணங்கள் கூறப்படுகின்றன. தொடர்ந்து டைனோசர்கள் பற்றிய ஆராய்ச்சிகள் ஒருபுறம் நடந்து வருகிறது. அவ்வப்போது பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புகள், படிமங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில்கூட டைனோசர் ஒன்றின் கருமுட்டை அழியாமல் கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
ஜூராசிக் பார்க் படத்தில் வருவதுபோல, அந்தக் கருமுட்டையை வைத்து மீண்டும் டைனோசர்கள் உருவாக்கப்படலாமோ என்ற கருத்துக்களும் சமூகவலைதளத்தில் பேசப்பட்டன. இந்நிலையில் நிஜமாகவே டைனோசர்கள் குட்டிகள் ஆற்றங்கரை ஒன்றில் ஓடுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
எலும்பும் சதையுமாக இருந்த டைனோசர் கால்! அருகிலேயே பார்த்தால் குட்டி மீன்! அமெரிக்காவில் நடந்தது என்ன
|
வைரலான வீடியோ
டிவிட்டரில் Buitengbieden என்பவர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 'இந்த வீடியோ எனக்குப் புரிபட சில வினாடிகள் ஆனது' என்ற கருத்துடன் அவர் பதிவு செய்திருந்த வீடியோ, பார்ப்பவர்களை எல்லாம் சில வினாடிகள் குழப்பத்தில் ஆழ்த்தத் தவறவில்லை. இதனாலேயே இந்த வீடியோ குறுகிய காலத்திற்குள் டிவிட்டரில் 10.8 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு, 48,000 முறை ரீடிவீட்டும் செய்யப்பட்டுள்ளது.

குட்டி டைனோசர்கள் கூட்டம்
சம்பந்தப்பட்ட அந்த வீடியோவில் ஆற்றங்கரை ஒன்றில், நீண்ட கழுத்துடன் குட்டி குட்டி டைனோசர் போன்ற விலங்குகள் ஒருபுறமாக ஓடுகின்றன. அவை பார்ப்பதற்கு சௌரோபாட்கள் போல் காட்சியளிக்கின்றன. 14 விநாடிகள் மட்டுமே இந்த வீடியோ முதன்முறை பார்ப்பவர்கள் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

கோடிமுண்டிஸ்
ஆனால் நன்கு உற்று நோக்கினால் அவை டைனோசர்கள் அல்ல என்பது மெல்லப் புரிகிறது. உண்மையில் அந்த வீடியோவில் இருப்பவை கோடிமுண்டிஸ் என்றும் அழைக்கப்படும் கோட்டிகள் ஆகும். புரோசியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த இவை தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் தென்மேற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பாலூட்டிகள்.

வீடியோ தந்திரம்
நீண்ட ரோமத்துடன் கூடிய வாலையுடையவை இந்த விலங்குகள். ஓடும் போது இவை வாலை உயர்த்திப் பிடித்தபடி இருப்பதால், அது பார்ப்பதற்கு நீண்ட கழுத்துடைய டைனோசர் குட்டிகள் போன்று தோற்றமளிக்கிறது. அதோடு, சம்பந்தப்பட்ட அந்த வீடியோ, ரீவைண்ட் செய்யப்பட்டுள்ளது. அதாவது வீடியோ எடுக்கப்படும்போது, வலது புறத்தில் இருந்து இடது புறமாக அந்த கோட்டிகள் ஓடியுள்ளது.

குட்டி அல்ல கோட்டி
ஆனால் அந்த வீடியோவை ரீவைண்ட் செய்துள்ள போது, அவை இடது புறத்தில் இருந்து வலது புறமாக, அதாவது வந்த வழியிலேயே பின்னோக்கி செல்வது போல் அமைந்து விட்டது. இதனால் வாலைத் தூக்கிக் கொண்டு அந்த கோட்டிகள் ஓடியது, நீண்ட கழுத்தைக் கொண்ட டைனோசர்கள் குட்டிகள் ஓடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னமும் அந்த வீடியோவில் இருப்பது புரியவில்லை என்றால், தயவுசெய்து இன்னும் சில முறை அதனை நன்கு பாருங்கள் அப்போது தெரியும் வீடியோவில் இருப்பது டைனோசர் குட்டிகள் இல்லை, கோட்டிகள் என்று.