கிலோ தக்காளி ரூ.895.. உலகிலேயே அதிக செலவாகும் நகரங்கள் எவை தெரியுமா? - டாப் 20 பட்டியல் இதோ
லண்டன்: உலகிலேயே வாழ்வதற்கு அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலில் ஹாங்காங் முதலிடத்தில் உள்ளது.
இசிஏ இண்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பு ஆண்டுதோறும் உலகளவில் வாழ்வதற்கு அதிக செலவாகும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அதிக செலவாகும் காஸ்ட்லி நகரங்களின் பட்டியலை ஈசிஏ நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

ஹாங்காங்கில் விண்ணை முட்டும் விலை
இந்த பட்டியலில் ஆசியாவை சேர்ந்த ஹாங்காங் நகரம் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. இந்த நகரத்தில் ஒரு கப் தேநீர் விலை 5.21 டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ.405.18. அதேபோல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 3.04 டாலர். இந்திய மதிப்பில், ரூ.236.42. தக்காளியின் விலையை கேட்டால் தலையே சுற்றிவிடும். இந்திய மதிப்பில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.895 என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

டாப் 5
ஹாங்காங்கிற்கு அடுத்தபடியாக அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலில் உலகின் பொருளாதார தலைநகரமாக கருதப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறது. பிரிட்டன் தலைநகர் லண்டன் இந்த வரிசையில் 4 வது இடத்திலும், ஜப்பான் தலைநகர் டோக்கியோ 5 வது இடத்திலும் இருக்கிறது.

வாடகையால் அதிக செலவு
நியூயார்க், லண்டன் மற்றும் டோக்கியோவில் வீடுகள், தங்கும் விடுதிகளுக்கான வாடகை கடுமையாக உயர்ந்து இருப்பதால் இந்த பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்து இருக்கின்றன. லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் தங்கி பணிபுரிந்து வரும் நியூயார்க்கில் 20 சதவீதமும், லண்டனில் 12 சதவீதமும் வாடகை அதிகரித்து இருக்கிறது. 6 வது இடத்தில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவீவும், சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரம் 7 வது இடத்திலும் உள்ளன.

20 நகரங்களின் பட்டியல்
சீனாவின் ஷாங்காயின் நகரம் 8 வது இடத்திலும், குவாங்சோ நகரம் 9 வது இடத்திலும், தென் கொரியாவின் சியோல் 10 வது இடத்திலும் உள்ளன. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ 11 வது இடத்திலும், சீனாவின் சென்சான் 12 வது இடத்திலும், சிங்கப்பூர் நகரம் 13 வது இடத்திலும், சீனாவின் பெய்ஜிங் 14 வது இடத்திலும் உள்ளன. ஜெருசலம் நகர் 15, சுவிட்சர்லாந்தின் பெர் 16, ஜப்பானின் யொகொஹோமா 17, டென்மார்டின் கோபன்ஹேகன் 18, நார்வேயின் ஆஸ்லோ 19, தைவானின் தைபே 20 வது இடத்தில் இருக்கின்றன.