ஜொலிக்கும் அயோத்தி.. தீபாவளி தினத்தன்று ஒளிரும் 12 லட்சம் அகல் விளக்குகள்.. கண்களை கவரும் காட்சி
லக்னோ: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் இரவு நேரத்தில் மொத்தம் 12 லட்சம் விளக்குகள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டுள்ளது
நாடு முழுவதும் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்கு ஒட்டுமொத்த நாடே கொண்டாட்டத்துடன் தயார் ஆகி வருகிறது
தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்குப் பல புராண இதிகாசக் கதைகள் சொல்லப்பட்டாலும் கூட, இந்நாள் தீமைகள் அழித்து மக்களின் மனதில் மகிழ்ச்சியை மலரச் செய்த நன்னாள் என்பது மக்களின் நம்பிக்கை
இதுவரை இல்லாத அளவில்.. தீபாவளி விற்பனையில் சாதனை படைத்த ஆவின்.. அமைச்சர் நாசர் பெருமிதம்!

தீபாவளி
தீபாவளி பண்டிகைக்குக் காரணமாகப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்தியாவின் தென்மாநிலங்களில் நரகாசுரனை ராமர் கொன்ற நாளே தீபாவளி எனக் கூறப்படுகிறது. அதேநேரம் வடமாநிலங்களில் 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமன், ராவணனைக் கொன்று அதன் பிறகு அயோத்திக்குத் திரும்பும் நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. ராமர் வனவாசம் சென்ற போது களையிழந்த அயோத்தி, மீண்டும் ராமர் வருகைக்காக ஒளியேற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.

உபி அரசு
கடந்த 5 வருடங்களாகவே அயோத்தியில் ஆண்டுதோறும் தீபாவளி தினத்தன்று வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்படும். இப்படிக் கடந்த ஆண்டு அயோத்தி நகர் முழுவதும் 6 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன. இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது. அதனை முறியடிக்கும் வகையில் இந்த ஆண்டு அயோத்தியில் மொத்தம் 12 லட்சம் விளக்குகளை ஏற்ற வேண்டும் என உபி அரசு இலக்கு நிர்ணயத்தது. இதற்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

12 லட்சம் விளக்குகள்
அதன்படி புதன்கிழமை மாலை சரயு ஆற்றங்கரையில் 9 லட்சம் விளக்குகள், நகரின் மற்ற இடங்களில் 3 லட்சம் விளக்குகள் என மொத்தம் 12 லட்சம் விளக்குகள் அயோத்தியில் ஏற்றப்பட்டன. இதன் மூலம் கடந்த ஆண்டின் சாதனை முறியடிக்கப்பட்டது. அயோத்தி மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் சிறந்த எதிர்காலத்தை இறைவன் அளிக்க வேண்டும் என்பதை வேண்டியே இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக மாவட்ட மாஜிஸ்திரேட் நிதிஷ் குமார் குறிப்பிட்டார்.

கண்கவரும் படங்கள்
இது தொடர்பாக மாநில அரசு பல புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளது. அதில் சரயு ஆற்றங்கரையில் மக்கள் ஆர்வத்துடன் தீபங்களை ஏற்றி வைக்கின்றனர். ஆற்றின் இரு கரைகளிலும், பாலங்களிலும் தீபங்கள் வைக்கப்பட்டன. மேலும், பல இடங்களில் "ஓம்" வடிவில் தீபங்களை ஏற்றப்பட்டுள்ளன. இந்த நிகழ்வைக் காண பல்வேறு இடங்களில் இருந்தும் அயோத்திக்கு மக்கள் குவிந்துள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
கடந்த சில நாட்களாகவே அயோத்தியின் வரலாற்றின் விளக்கும் வகையில் அங்கு லேசர் ஷோக்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி, அயோத்தியில் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்புகள் போடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

உபி தேர்தல்
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது கொரோனா 2ஆம் அலைக்குப் பிறகு உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இதை 2024 மக்களவை தேர்தலின் முன்னோட்டம் என்று கூட சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த தேர்தலைக் குறிவைத்து உபியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டனர். இந்த தீபங்களை வைக்கும் நிகழ்விலும் கூட முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அரசியல் எதிரிகளை தாக்கி பேசினார்.

யோகி அட்டாக்
1990ஆம் ஆண்டு சமாஜ்வாதி ஆட்சியில் முலாயம் சிங் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற சம்பவத்தைக் குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத், "31 ஆண்டுகளுக்கு முன்பு, அயோத்தியில் ராமபக்தர்கள் மற்றும் கரசேவகர்கள் மீது தோட்டாக்கள் பாய்ந்தன. அப்போது ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுவதும், ராமர் கோயிலுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதும் குற்றமாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று தினம் நிலைமை மாறியுள்ளது" என்றார். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் 2024 மக்களவை தேரலுக்கு முன்பே முடிக்கத் தேவையான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.