என்னை பலாத்காரம் செய்தார்! கணவர் மீது புகார் அளித்த பெண்! பரபரத்த காவல்துறை! குட்டு வைத்த நீதிமன்றம்
லக்னோ: உத்திர பிரதேச மாநிலத்தில் தனது கணவர் தன்னை திருமணத்திற்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்த பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த அலகாபாத் நீதிமன்றம், கணவர் மீதான வழக்கையும் ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருவது, அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக உறவினர்களால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்படும் குற்றவாளிகள் உடனடியாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த ஒரு வழக்கு நீதிபதிகளையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு
அது என்னவென்றால் திருமணத்திற்கு முன்பு தனது கணவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மனைவி அளித்த புகாரில் நீதிபதிகள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். உபி பிரயாக்ராஜை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் தனது கணவர் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை புகார் அளித்ததால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதோடு, நீதித்துறை மற்றும் சட்ட அமைப்புகளை தவறாக பயன்படுத்தியதற்காகவும், அவர்களின் மதிப்புமிக்க நேரத்தை வீணடித்ததற்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

கணவர் மீதே புகார்
உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் முகமது சல்மானுக்கு எதிராக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் திருமணத்திற்கு முன்பு தாங்கள் இருவரும் காதலித்து வந்த போது, திருமணம் செய்து கொள்வதாக கூறி தனது கணவரான சல்மான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக அந்த புகாரில் அவரது மனைவி குறிப்பிட்டு இருந்தார். காவல்துறையினர் மனைவி புகாரை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த நிலையில், தன் மீதான புகாரை கணவர் முகமது சல்மான் முற்றிலுமாக மறுத்தார்.

மனைவிக்கு அபராதம்
உத்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் வரை சென்ற நிலையில், நீதிபதி அஞ்சனி குமார் மிஸ்ரா மற்றும் நீதிபதி தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை வழக்கை விசாரித்தது. அப்போது வாதடிய சல்மான் தரப்பு வழக்கறிஞர் தம்பதியினருக்கு இடையே சிலர் கருத்து வேறுபாடுகளை உருவாக்கி வருவதாகவும், அந்த தாக்கத்தில் தான் மனைவி தன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ததாக வாதிட்டனர்.

மனைவி பல்டி
வழக்கில் திடீர் திருப்பமாக புகார் அளித்த மனைவி திடீரென தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். திருமணத்திற்கு முன்பு சல்மானுக்கும் தனக்கும் இடையே எந்தவிதமான உடல் ரீதியான உறவும் இல்லை என்றும், தான் அவரை மட்டுமே காதலிப்பதாகவும் கூறினார். இதையடுத்து கணவன் மீது மனைவி சுமத்திய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று நீதிமன்றம் அறிவித்தது. மேலும் கணவர் மீதான எப்ஐஆரை ரத்து செய்து, மனைவிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.