மாணவி ஆஃப்ரின் வீடு இடிப்பு.. யோகி அரசு செய்தது சட்டவிரோதம் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி கண்டிப்பு
லக்னோ: மாணவி ஆஃப்ரின் ஃபாத்திமாவின் வீடு தகர்க்கப்பட்டது சட்டவிரோதம் என அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் தெரிவித்து உள்ளார்.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்கு பெயர்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.
மாணவி ஆஃப்ரின் பாத்திமா வீடு இடிப்பு... இஸ்லாமிய வெறுப்பின் உச்சம் - கொந்தளிக்கும் திருமாவளவன்

வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி, கொல்கத்தா போலீசும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

உலகளவில் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கான்பூர் கலவரம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வாரம் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து இருந்தது.

போராட்டத்தில் வன்முறை
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் ஷர்மா இன்னும் கைது செய்யப்படாத நிலையில், நாடு முழுவதும் அவரை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. உபியில் 8 மாவட்டங்களில் மட்டும் 333 பேரை கைது செய்த காவல்துறை 13 வழக்குகளை பதிவு செய்து இருக்கிறது.

வீடுகள் இடிப்பு
இந்த நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் ரிதியுங்ஜய் குமார் தனது ட்விட்டர் கணக்கில், புல்டோசரை கொண்டு வீடுகளை இடிக்கும் படத்தை பகிர்ந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் அடுத்தநாள் சனிக்கிழமை வரும் என எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் அலகாபாத், சஹாரன்பூரில் போராட்டத்தில் இஸ்லாமியர்களை கைது செய்த போலீசார், அங்குள்ள வீடுகளை புல்டோசரை கொண்டு இடித்தனர்.

நீதிபதி கோவிந்த் மாத்தூர்
இதுகுறித்து அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் தெரிவிக்கையில், "சமூக செயற்பாட்டாளர் ஜாவித் அகமதுவின் வீட்டை இடிப்பதற்கு உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் எந்த நியாயம் சொன்னாலும் அந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. வீடு இடிப்பதை தண்டனைக்கான நடைமுறையாக இந்திய சட்டம் சொல்லவில்லை.

கண்டனம்
நடப்பதை விவரிக்க ஒரு வார்த்தை இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. சட்டத்தின் ஆட்சி புறக்கணிக்கப்பட மட்டும் இல்லை, மாறாக அரசால் ஒருங்கிணைக்கப்பட்டு அது மீறப்பட்டு இருக்கிறது. ஜாவித் அஹமத் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். அவர் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், சட்டத்தின் கீழ் நடைபெறும் ஆட்சியில் இதுபோன்ற ஒடுக்குமுறையை ஏற்க முடியாது." என்றார்.

மாணவி ஆஃப்ரின் ஃபாத்திமா
தகர்க்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஜாவித் அஹமதுவின் மகள்தான் ஆஃப்ரின் பாத்திமா. டெல்லி ஜவஹர்லால் நேரு கல்லூரியில் படித்துக்கொண்டே மாணவர் இயக்க செயல்பாடுகளில் தீவிரமாக பங்கெடுத்தவர். மாணவர்களின் உரிமைகள், சிறுபான்மை, தலித் சமூதாயத்துக்கு எதிராக ஒடுக்குமுறைகளுக்காக குரல் எழுப்பி வந்தார். நபிகள் நாயகம் அவதூறு குறித்தும் தனது எதிர்ப்புகளை பதிவு செய்து வந்த அவருக்கு ஆதரவாக இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்களும் #StandwithAfreenFathima என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்தனர்.

3 நீதிபதிகள் கடிதம்
முன்னதாக உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடி உத்தரவுகளை பிறப்பிக்குமாறு உச்சநீதிமன்றத்துக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, சுதர்ஷன் ரெட்டி, கோபால கவுடா, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உட்பட மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 12 பேர் கடிதம் எழுதி இருக்கின்றனர்.

நாட்டின் மனசாட்சி
அதில் உத்தரப்பிரதேச அரசின் நடவடிக்கை ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று அவர்கள் விமர்சித்துள்ளனர். இஸ்லாமியர்களை கைது செய்து கொடூரமாக தாக்குவது தேசத்தின் மனசாட்சியை உலுக்குகிறது. உச்சநீதிமன்றம் இதில் தாமாக முன்வந்து விசாரித்து உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்." என வலியுறுத்தி இருக்கின்றனர்.